Saturday, 20 July 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #8

சோழஸ்தாபனாச்சார்யா 

தெலுங்குச் சோழர்களில் மிகச்சிறந்த அரசன் முதலாம் திக்கன் என்கிற திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா. இவர் இரண்டாம் மனும சித்தாவின் மகன். இவர் தம்மு சித்தாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர். இவருடைய கல்வெட்டுகள் காஞ்சி, தென் ஆற்காடு, மணிமங்கலம் ஆகிய இடங்கள் வரை கிடைக்கின்றன. இதைக்கொண்டு நெல்லூர், தெற்கில் செங்கல்பட்டு, வடக்கில் கடப்பா வரை இவரது ஆட்சி பரந்து விரிந்திருந்ததை அறியலாம். சம்புவராயர், சேதியராயர், காடவராயர்களை வென்று தன் பேரரசை ஒப்புக்கொள்ளச் செய்தவர்.  இவ்வெற்றியால் கோப்பெருஞ் சிங்கன் சூழ்ச்சிகளை ஒடுக்கினவர். இவர் தொண்டை மண்டலத்தில் பெரும் பகுதியைச் சோழப் பேரரசிற்கு அடங்கியே ஆண்டு வந்தார்.  இருப்பினும் இவரது ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் சோழர்களின் பலம் முற்றிலும் குன்றவில்லையாதலால், சோழர்களின் சிற்றரசாகவே இவர் இருந்தார். மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் கண்டகோபாலன் என்ற பெயரில் இவரும் இவரது மனைவிகளும் இடம்பெறுகின்றனர். இவர் கி.பி. 1209-லிருந்து கி.பி. 1248 வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலம் ஆட்சிசெய்தார். திக்கன், கர்நாடக சோமேஸ்வரனையும், சம்புராஜுவையும் மற்ற சோழகுல எதிரிகளையும் தோற்கடித்து, நேரடிச் சோழரின் ஆட்சியை நிலை நிறுத்தி ‘சோழஸ்தாபனாச்சார்யா’ என்ற பட்டம் பெற்றவர்.

''மதுராந்தப் பொத்தப்பிச் சோழ மனுமசித்தரசன் திருக்காளத்தி தேவன் எனும் கண்டகோபாலன்'' என்று காஞ்சிபுரம் கல்வெட்டுகளில் திக்கன் குறிப்பிடப் படுகிறார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுத் தொகுதிகள் 2-ல் மட்டும், திக்கனின் கல்வெட்டுகள் 30 உள்ளன. 

வேலணாடு சோழர் அழிப்பு 

திக்கண்ண சோமயாஜி எனும் தெலுங்கு கவிஞர், முதலாம் திக்கனின் மகன் மனுமசித்தியின் அரசவைக் கவியும் அமைச்சருமாவார். பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதிய மூவருள் இரண்டாமவர். மகாபாரதம் எழுதும் முன்னர் சோமவேள்வியை நடத்தியவராதலால் சோமயாஜி என அழைக்கப்பட்டார். திக்கண்ண சோமயாஜி எழுதிய ''நிர்வாசனோத்தவ ராமாயணமு'' என்ற நூலின் முன்னுரையில், திக்கனுடைய சாதனையைப் பற்றி விரிவாகவும், நடுநிலையிலும் எழுதிப் பல விபரங்களைத் தந்திருக்கிறார்.  கி.பி. 1210-ல் திக்கா வேலணாண்டு சோழருக்கு எதிரானப் போரை நடத்தினார். இந்தப் போரில் வேலணாண்டு சோழரான பிரிதிவீஸ்வரனின் தலையைக் கொய்து  திக்கன்  பந்து விளையாடியதாக திக்கணா குறிப்பிடுகிறார். இது திக்கனின் காஞ்சிபுரம் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகிறது. இந்த பிரிதிவீஸ்வரனுடன் வேலணாடு சோழ வம்சம் முதலாம் திக்கனின் கையால் முடிவுக்கு வந்தது. 

சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சார்யாவைக் கொன்ற சோழஸ்தாபனாச்சார்யா 

ஹொய்சாள மன்னன் இரண்டாம் நரசிம்மன், மூன்றாம் இராஜராஜனை வென்ற பாண்டியனையும், சோழனை சிறை பிடித்த கோப்பெருஞ்சிங்கனையும் வென்று இராஜராஜனை மீண்டும் சோழ அரியணையில் அமர்த்தி ''சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சார்யா'' என்னும் பட்டம் பெற்றவர். இந்த நரசிம்மனுக்கும், திக்கனுக்கும் இடையே அடிக்கடி போர் நிகழ்ந்துள்ளது. கி.பி. 1239-ல் நடைபெற்ற இறுதிப் போரில், திக்கன் நரசிம்மனைக் கொன்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கி.பி. 1240-ல் நரசிம்மனின் மகன் வீர சோமேஸ்வரன் திக்கனுக்கு எதிராகப் படையெடுத்ததை ஹொய்சாளர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆயினும் இந்தப் போரிலும் திக்கனே வெற்றி பெற்று தனது வலிமையை நிலை நாட்டினார்.   

பாண்டியருக்கு எதிரான வெற்றி 

திக்கனின் கால கட்டத்தில் பாண்டியப் பேரரசு, தென்னிந்தியாவின் மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக விளங்கியது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி 1216-1238) மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி 1238-1253) ஆகியோர் திக்கனின் சம காலத்திய பாண்டிய மன்னர்கள். மூன்றாம் இராஜராஜ சோழன், பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் தோற்கடிக்கப்பட்ட இரு நிகழ்வுகளிலும் ஹொய்சாள மன்னர்கள் வீர வல்லாளன் மற்றும் அவரது மகன் நரசிம்மன் சோழருக்கு உறு துணையாயிருந்து சோழ நாட்டை மீட்டனர். ஆயினும் நரசிம்மனின் மகன் வீர சோமேஸ்வரன் பாண்டியருக்கு ஆதரவான நிலையெடுத்து ''பாண்டிய குல சம்ரக்ஷகன்'' என்னும் பெயர் பெற்றார். பாண்டியரிடம் கடை பிடிக்க வேண்டிய கொள்கை வேறு பட்டதால் சோழருக்கும் ஹொய்சாளருக்கும் இடையே போர் மூண்டது. முதலாம் திக்கன் இப்போரில் சோழனை ஆதரித்தார். சோழருக்கு ஆதரவாக இருந்த ஹொய்சாளர், பாண்டியர் பக்கம் சாய்ந்தபோதும், சோழர்களுக்கு உறுதுணையாக திக்கன் நின்றுள்ளார். இராஜேந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தவுடன்  திக்கன் அவரை ஆதரித்ததாகவும், சோமேஸ்வரனைப் போரில் வென்று, சோழ அரசனை மீண்டும் அரசனாக்கி ''சோழ ஸ்தாபனாச்சாரியான்'' என்னும் பெயர் பெற்றதாகவும் திக்கணா குறிப்பிடுகிறார். தெலுங்கில் மொழி பெயர்க்கப் பட்ட தசகுமார சரிதம் என்னும் நூலில் தெலுங்குக் கவி கேதனா, திக்கன் பாண்டியர்களிடமிருந்து கப்பம் வசூலித்ததையும் (1-16) சொல்லுகிறார்.  

நாணயம் 

முதலாம் திக்கன், கண்ட கோபாலன் பழமாடை, கண்ட கோபாலன் புதுமாடை, கண்ட கோபாலன் வாசிபடா புதுமாடை என்ற பெயரில் நாணயங்களை வெளியிட்டார். திக்கன் தீவிர வைணவப் பற்று மிக்கவர் என்பதால், இவர் வெளியிட்டக் காசிலும் சங்கு இடம் பெற்றுள்ளது. திக்கன் வெளியிட்ட கண்டகோபலன் மாடை காசின் முன் பக்கத்தில் மேலே ''கண்ட'' என்று சோழர் கால எழுத்திலும், வேணு கோபாலன் உருவம் தலை கீழாகவும், இவ்வுருவத்துக்கு இரு புறங்களிலும் 'ஸ்ரீ' என்ற தெலுங்கு எழுத்தும் பொறிக்கப் பட்டுள்ளன. 'கண்ட' என்ற வாசகத்தையும், வேணு கோபாலனது உருவத்தையும் இணைத்துப் பார்த்தோமானால் கண்டகோபாலன் என்ற பெயர் தெளிவாகும்.

படம்: நெல்லூர்ச் சோழர் வெளியிட்ட புஜபலன் மாடை இணையத்திலிருந்து  

Refernces 
சோழர்கள் - K A நீலகண்ட சாஸ்திரிகள் 
சோழர் வரலாறு - இராசமாணிக்கனார் 
பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் 
The History of Andhra country 1000 AD to 1500
தமிழ்நாட்டு வரலாறு - சோழப் பெரு வேந்தர் காலம் - முதல் தொகுதி 

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 8   
#காஞ்சிச்சோழர்  
#நெல்லூர்ச்சோழர்