Saturday, 10 August 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #10

விஜய கண்ட கோபாலன் 

சோழரா அல்லது பல்லவரா என்று வரலாற்று ஆய்வாளர்களையும் குழப்பக் கூடிய பெயர் விஜய கண்ட கோபாலன். ஒரே பெயருடன், சம காலத்தில், அருகாமைப் பகுதிகளை ஆட்சி செய்தவர்களாக அறியப் படுகிறார்கள் விஜய கண்ட கோபாலன் என்னும் பெயருடைய நெல்லூர்ச் சோழரும், தெலுங்குப் பல்லவரும். கிடைத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு இருவரையும் கீழ்க் கண்டவாறு பிரித்தறியலாம்.

தெலுங்குப் பல்லவர் விஜய கண்ட கோபாலன் 
  
இவர் தெலுங்குப் பல்லவரான வீர கண்ட கோபாலனின் தம்பி.
இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1285 வரையிலான 35 ஆண்டுகள்.
பரமவம்சோத்பவர். 
பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்.
மஹாமண்டலேஸ்வரராக இருந்தவர்.

நெல்லூர்ச் சோழர் விஜயகண்ட கோபாலன் 

இவர் நெல்லூர்ச் சோழரான முதலாம் திக்கனின் மகன். மூன்றாம் மனும சித்தாவின் சகோதரன்.
இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1291 வரையிலான 41 ஆண்டுகள்.
கரிகால சோழ வம்சம்.
காஸ்யப கோத்திரத்தை சேர்ந்தவர்.
சுதந்திர மன்னர். தன் ஆட்சியாண்டைக் குறிப்பிட்டு கல்வெட்டுகளை வெளியிட்டவர். 
மதுராந்தக பொத்தப்பிச் சோழன் என்றும், திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றும் அழைக்கப் பட்டவர். 

தெலுங்குப் பல்லவரான விஜய கண்ட கோபாலனின்  கல்வெட்டுகளாக, 20 கல்வெட்டுகளைத் தன்னுடைய நூலான "The History of Andhra Country 1000 AD - 1500 AD"-ல் குறிப்பிடுகிறார் திருமதி யசோதா தேவி அவர்கள்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 1-ல் 8 கல்வெட்டுக்களும், தொகுதி 2-ல் 26 கல்வெட்டுக்களும் விஜய கண்ட கோபாலனின் கல்வெட்டுக்கள். இவை பெரும்பாலும் நெல்லூர்ச் சோழரான விஜய கண்ட கோபாலனுடையதாகவே இருக்க வேண்டும்.

நெல்லூர்ச் சோழ வம்சத்தினர், ஒரே காலகட்டத்தில் இரண்டு அல்லது மூன்று அரசர்கள் நெல்லூர், காஞ்சிபுரம், திருக்காளத்தி உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். முதலாம் திக்கனின் ஆட்சிக்குப் பின்னர் அவரது மகன்கள் மனும சித்தா, விஜயகண்ட கோபாலன் மற்றும் அவரது மருமகன் அல்லுந்திக்கா உள்ளிட்ட மூவர் ஆட்சி செய்துள்ளனர். முதலாம் திக்கனின் மறைவுக்குப் பின்னர், நெல்லூரை அவரது தாயாதிகள் கைப்பற்றினர். நெல்லூரைத் தனது தாயாதிகளிடமிருந்து மீட்க, காகதீயர்களின் உதவியை நாடினார் திக்கனின் மகன் மனும சித்தா. காகதீயர்களின் துணையுடன், மனும சித்தாவும் அவரது சகோதரன் விஜய கண்ட கோபாலனும் மிகக் கடுமையாகப் போர் புரிந்து நெல்லூரை மீட்டனர். இந்த நெல்லூர்ப் போர், மகா பாரதப் போருக்கு இணையாகப் பேசப் பட்டுள்ளது. 

இந்த வெற்றிக்குப் பின்னர், நெல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு மனும சித்தா ஆட்சி புரிந்துள்ளார். திக்காவின் மருமகன் அல்லுந்திக்கா, காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக யசோதா தேவி அவர்கள் குறிப்பிடுகின்றார். அல்லுந்திக்காவின் ஒரு சில கல்வெட்டுக்களே காஞ்சியில் கிடைக்கின்றன. மாறாக, விஜயகண்ட கோபாலனின் கல்வெட்டுகள் அவரது 2-ம் ஆட்சியாண்டு முதல் 41-ம் ஆட்சியாண்டு வரையில் காஞ்சியில் கிடைக்கின்றன. கல்வெட்டுகளின் செறிவை வைத்துப் பார்க்கும் போது, விஜயகண்ட கோபாலனே காஞ்சியில் ஆட்சி செய்திருப்பதை அறிய முடிகின்றது. அல்லுந்திக்கா, நெல்லூருக்கும் காஞ்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆட்சி செய்திருக்க வேண்டும். குறிப்பாக திருக்காளத்தியைத் தலை நகரகாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கலாம். 

காஞ்சியை ஆட்சி செய்த விஜயகண்ட கோபாலன், நெல்லூர்ச் சோழர் என்பதை வலுப்படுத்தும் காரணிகள்:

1. நெல்லூர்ச் சோழர் விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1291 வரையிலான 41 ஆண்டுகள். விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்கு முன்னர், காஞ்சிபுரம் அவரது தந்தை சோழ ஸ்தாபனாச்சார்யா எனப்படும் முதலாம் திக்கனின் கட்டுப்பாட்டில் இருந்தது.

2. விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்குப் பின்னர் கி.பி. 1291 முதல் அவரது மகன் வீர கண்ட கோபாலனின் ஆட்சியில் காஞ்சிபுரம் இருந்தது.

3. வீர ராஜேந்திர சோழரின் (மூன்றாம் இராஜேந்திரன்) 18-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (கி.பி. 1264), கண்ட கோபால திருக்காளத்தி தேவரின் (முதலாம் திக்கன்) மகன் விஜய கண்ட கோபாலன் என்பவரைக் குறிப்பிடுகிறது.

4. உறையூர் புரவராதீஸ்வரர் என தெலுங்குச் சோழர்கள் தங்களை அழைத்துக் கொண்டது போல, காஞ்சி புரவராதீஸ்வரர் எனத் தெலுங்குப் பல்லவர் தங்களை அழைத்துக் கொண்டுள்ளனர். இது அவர்களது தொன்மையையும், நேரடி வம்சத்துடன் அவர்களுக்குள்ள தொடர்பைக் காட்டுவதாகவே அமைந்துள்ளதேத் தவிர அவர்கள் அந்த கால கட்டத்தில் காஞ்சியை ஆட்சி செய்தார்கள் என்னும் பொருளில் வரவில்லை. 

5. மதுராந்தக பொத்தப்பி சோழன் என்னும் பெயரை நெல்லூர்ச் சோழர் இரண்டாவது குடிப் பெயர் போன்றே பயன்படுத்தியுள்ளனர். விஜய கண்ட கோபாலனும் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் என்று குறிப்பிடப் பட்டுள்ளார்.

6. மூன்றாம் மனும சித்தா, தனது எதிரிகளில் முதன்மையானவரான விஜயா (தெலுங்குப் பல்லவர் விஜய கண்ட கோபாலன்) என்னும் அரசனை வென்று அவரது புகழை மங்கச் செய்ததாக திக்கண்ணா குறிப்பிடுகிறார்.   

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, மகாமண்டலேஸ்வரரான தெலுங்குப் பல்லவர் விஜயகண்ட கோபாலன், வலிமை வாய்ந்த நெல்லூர்ச் சோழர் மனும சித்தா, விஜய கண்ட கோபாலன்,அல்லுந்திக்கா ஆகிய மூவர் கூட்டணியையும், அவர்களுக்குத் துணையான காகதீயர்களையும் வென்று காஞ்சியை நெல்லூர்ச் சோழரிடமிருந்து கைப்பற்றி ஆட்சி செய்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே நெல்லூர்ச் சோழரான மதுராந்தக பொத்தப்பிச் சோழன் விஜய கண்ட கோபாலனே  கி.பி. 1250-இலிருந்து கி.பி. 1291 வரையிலான 41 ஆண்டுகள் காஞ்சியை ஆட்சி செய்துள்ளார் என்னும் முடிவுக்கு வரலாம்.

References   

1. The History of Andhra country 1000 AD to 1500 AD - Yashoda Devi
2. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 1
3. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 2
4. Annual Report on Epigraphy 1915-1920 - P 151
5. The Pandya Kingdom - K.A. Neelakanda Sasthiri P 168-169
6. A Collection of the Inscription on copper plates and stones in the Nellore District P 231
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 10
#விஜயகண்டகோபாலன் 
#வீரகண்டகோபாலன் 
#Vijaygandagopalan 
#Viragandagopalan  

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #9

சோழ ராச்சியப் பிரதிஷ்ட்டாச்சார்யா

மூன்றாம் இராஜராஜ சோழன் பதவியேற்ற காலகட்டத்தில் சோழநாடு முற்றிலும் எதிரிகளால் சூழப் பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் சோழருக்கு அடங்கிய சிற்றரசர்களில்  பெரும்பாலானோர் சோழருக்கு எதிரியாக மாறியிருந்தனர். மூன்றாம் குலோத்துங்கனின் மறைவுக்குப் பின்னர் கி.பி. 1219-ல் பாண்டிய மன்னன் மாறவர்மன்  சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். மூன்றாம் இராஜராஜனை வென்ற சுந்தர பாண்டியன்,  சோழர்களின் ஆயிரத்தளி அரண்மனையில், சோழவளவன் அபிடேக மண்டபத்தில் வீராபிடேகம் செய்து கொண்டான். சோழனின் நிலையறிந்து, சோழனுக்கு உதவிட போசள மன்னன் வீர வல்லாளன் முன் வந்தான். பெரும்படை ஒன்றைத் திரட்டிய வீர வல்லாளன், அதன் செலவிற்காகக் கருணை வரி என்னும் புதிய வரியையும் தன் நாட்டில் விதிதான். தன் மகன் நரசிம்மனைப் பெரும் படையுடன் சோழருக்கு உதவியாக அனுப்பினான். போசளர்கள் தலையீட்டால் பாண்டியன் மூன்றாம் இராஜராஜனிடம் சோழ நாட்டைத் திருப்பி அளித்தான். இந்தப் படையெடுப்பின் போது, போசளப் படை விடுகாதழகிய பெருமாள் என்னும் அதியமானையும், வாணகோவரையனையும், காடவராயனையும் தோற்கடித்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு வீர வல்லாளன், ''சோழ ராச்சியப்  பிரதிஷ்ட்டாச்சார்யன்'' மற்றும் ''பாண்டிய கஜகேசரி'' ஆகிய பட்டங்களையும், நரசிம்மன் ''சோழகுல ஏக ரட்சகன்'' என்னும் பட்டத்தையும் பூண்டனர். 

அதன் பின்னர், கி.பி. 1231-ல் மூன்றாம் இராஜராஜன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். முதலில் சோழர்களின் தூசிப் படையும் பின்னர் பேரணியும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தன. பாண்டியர்களின் படை சோழரின் தூசிப் படையையும், பேரணியையும் வென்றது. கடுமையாக நடை பெற்ற போரில் சோழர்களுக்கு யானை, குதிரை, காலாட் படைகளில் பெருஞ்சேதம் ஏற்பட்டது. சோழ நாட்டில் இரத்த ஆறு ஓடியது. வெற்றி பெற்ற சுந்தர பாண்டியன், சோழர் தலை நகரான முடி கொண்ட சோழ புரத்தில் விஜயாபிஷேகம் செய்து கொண்டான். ஆனால், சுந்தர பாண்டியனின் இந்த வெற்றி தற்காலிக வெற்றியாக சில மாதங்களே நீடித்தது.

தோல்வியுற்ற இராஜராஜன் துவார சமுத்திரம் நோக்கி செல்வதை அறிந்த காடவராயன் முதலாம் கோப்பெருஞ்சிங்கன், சோழனை சிறை பிடித்து தன்னுடைய தலைநகர் சேந்த மங்கலத்தில் சிறை வைத்தான். ''காடவராயனிடம் காட்டுப் படையும், மிலேச்சப் படையும் இருந்ததால் அவன் வல்லமை பெற்றிருந்தான். அவனுடைய பல தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் கொடியவனாக இருந்த இந்த எதிரி, தன் தலைநகரான ஜெயந்த மங்கலத்தில் இராஜராஜனை சிறை வைத்தான்'' என்று கத்யகர்ணாமிர்தம் என்னும் கன்னட நூல் குறிப்பிடுகிறது. இந்த செய்தியைக் கேள்வியுற்ற போசள மன்னன் வீரநரசிம்மன், மீண்டும் சோழநாடு சென்று இராஜராஜனை அரியணையில் அமர்த்தி ''சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சாரியன்'' என்னும் பட்டத்தைப் பெற்றுத் திரும்பும் வரை தன் வெற்றி முரசு ஒலிக்காது என்று வஞ்சினம் கூறித் தமிழகம் வந்தான். பாண்டியர்களின் நண்பனான மகத நாட்டு வாணகோவரையனை வென்ற நரசிம்மன், ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள பாச்சூரில் ஒரு படையுடன் நிலை கொண்டு, தன் தளபதிகள் அப்பண்ணா மற்றும் சமுத்திர கொப்பையனைக் கோப்பெருஞ்சிங்கனின் நாட்டுக்கு அனுப்பினான். போசளப் படை கோப்பெருஞ்சிங்கன் இருந்த எள்ளேரியையும், கல்லியூர் மூலையையும் (வீராணம் ஏரிக்கரையில் உள்ள கலியமலை), கோப்பெருஞ்சிங்கனின் படைமுதலி  சோழகோன் இருந்த தொழுதகையூரையும் கைப்பற்றியது. கோப்பெருஞ்சிங்கனின் படை முதலிகள் 4 பேரையும் கொன்று கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு கோப்பெருஞ்சிங்கனின் தலைநகர் சேந்தமங்கலம் அடைந்து இராஜராஜனை விடுவித்தது. 

போசளப் படை இராஜராஜனை விடுவித்த அதே சமயத்தில், நரசிம்மன் சுந்தரபாண்டியனுடன் மகேந்திரமங்கலத்தில் போரில் ஈடுபட்டிருந்தான். சுந்தர பாண்டியன் போரில் தோல்வியுற்றான்.நரசிம்மன் இராமேஸ்வரம் வரை சென்று மீண்டான். சுந்தர பாண்டியன் நரசிம்மனுக்கு கப்பம் காட்டுவதாக ஒத்துக் கொண்டான் என்று ஹொய்சாளர் கல்வெட்டு கூறுகிறது.

இதன் பின்னர் சோழப்பேரரசு, கி.பி. 1238-க்கும் 1250-க்கும் இடையே சில ஆண்டுகள், தங்கள் எதிரிகளையும் சிற்றரசர்களையும் பொருட்படுத்தாமல் மீண்டும் தலை தூக்கிற்று. நெல்லூரை ஆண்ட தெலுங்குச் சோழ மன்னர்களின் ஒத்துழைப்புதான் இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது என்று நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார்.  

Refernces 

சோழர் வரலாறு - இராசமாணிக்கனார் 
பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் 
சோழர்கள் - K A நீலகண்ட சாஸ்திரிகள்   
தமிழ்நாட்டு வரலாறு - சோழப் பெரு வேந்தர் காலம் - முதல் தொகுதி

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 9
#சோழராச்சியப்பிரதிஷ்ட்டாச்சார்யா
#பாண்டியகஜகேசரி
#சோழகுலஏகரட்சகன்
#சோழமண்டலப்பிரதிஷ்ட்டாச்சாரியன்