Saturday, 10 August 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #9

சோழ ராச்சியப் பிரதிஷ்ட்டாச்சார்யா

மூன்றாம் இராஜராஜ சோழன் பதவியேற்ற காலகட்டத்தில் சோழநாடு முற்றிலும் எதிரிகளால் சூழப் பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் சோழருக்கு அடங்கிய சிற்றரசர்களில்  பெரும்பாலானோர் சோழருக்கு எதிரியாக மாறியிருந்தனர். மூன்றாம் குலோத்துங்கனின் மறைவுக்குப் பின்னர் கி.பி. 1219-ல் பாண்டிய மன்னன் மாறவர்மன்  சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். மூன்றாம் இராஜராஜனை வென்ற சுந்தர பாண்டியன்,  சோழர்களின் ஆயிரத்தளி அரண்மனையில், சோழவளவன் அபிடேக மண்டபத்தில் வீராபிடேகம் செய்து கொண்டான். சோழனின் நிலையறிந்து, சோழனுக்கு உதவிட போசள மன்னன் வீர வல்லாளன் முன் வந்தான். பெரும்படை ஒன்றைத் திரட்டிய வீர வல்லாளன், அதன் செலவிற்காகக் கருணை வரி என்னும் புதிய வரியையும் தன் நாட்டில் விதிதான். தன் மகன் நரசிம்மனைப் பெரும் படையுடன் சோழருக்கு உதவியாக அனுப்பினான். போசளர்கள் தலையீட்டால் பாண்டியன் மூன்றாம் இராஜராஜனிடம் சோழ நாட்டைத் திருப்பி அளித்தான். இந்தப் படையெடுப்பின் போது, போசளப் படை விடுகாதழகிய பெருமாள் என்னும் அதியமானையும், வாணகோவரையனையும், காடவராயனையும் தோற்கடித்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு வீர வல்லாளன், ''சோழ ராச்சியப்  பிரதிஷ்ட்டாச்சார்யன்'' மற்றும் ''பாண்டிய கஜகேசரி'' ஆகிய பட்டங்களையும், நரசிம்மன் ''சோழகுல ஏக ரட்சகன்'' என்னும் பட்டத்தையும் பூண்டனர். 

அதன் பின்னர், கி.பி. 1231-ல் மூன்றாம் இராஜராஜன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். முதலில் சோழர்களின் தூசிப் படையும் பின்னர் பேரணியும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தன. பாண்டியர்களின் படை சோழரின் தூசிப் படையையும், பேரணியையும் வென்றது. கடுமையாக நடை பெற்ற போரில் சோழர்களுக்கு யானை, குதிரை, காலாட் படைகளில் பெருஞ்சேதம் ஏற்பட்டது. சோழ நாட்டில் இரத்த ஆறு ஓடியது. வெற்றி பெற்ற சுந்தர பாண்டியன், சோழர் தலை நகரான முடி கொண்ட சோழ புரத்தில் விஜயாபிஷேகம் செய்து கொண்டான். ஆனால், சுந்தர பாண்டியனின் இந்த வெற்றி தற்காலிக வெற்றியாக சில மாதங்களே நீடித்தது.

தோல்வியுற்ற இராஜராஜன் துவார சமுத்திரம் நோக்கி செல்வதை அறிந்த காடவராயன் முதலாம் கோப்பெருஞ்சிங்கன், சோழனை சிறை பிடித்து தன்னுடைய தலைநகர் சேந்த மங்கலத்தில் சிறை வைத்தான். ''காடவராயனிடம் காட்டுப் படையும், மிலேச்சப் படையும் இருந்ததால் அவன் வல்லமை பெற்றிருந்தான். அவனுடைய பல தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் கொடியவனாக இருந்த இந்த எதிரி, தன் தலைநகரான ஜெயந்த மங்கலத்தில் இராஜராஜனை சிறை வைத்தான்'' என்று கத்யகர்ணாமிர்தம் என்னும் கன்னட நூல் குறிப்பிடுகிறது. இந்த செய்தியைக் கேள்வியுற்ற போசள மன்னன் வீரநரசிம்மன், மீண்டும் சோழநாடு சென்று இராஜராஜனை அரியணையில் அமர்த்தி ''சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சாரியன்'' என்னும் பட்டத்தைப் பெற்றுத் திரும்பும் வரை தன் வெற்றி முரசு ஒலிக்காது என்று வஞ்சினம் கூறித் தமிழகம் வந்தான். பாண்டியர்களின் நண்பனான மகத நாட்டு வாணகோவரையனை வென்ற நரசிம்மன், ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள பாச்சூரில் ஒரு படையுடன் நிலை கொண்டு, தன் தளபதிகள் அப்பண்ணா மற்றும் சமுத்திர கொப்பையனைக் கோப்பெருஞ்சிங்கனின் நாட்டுக்கு அனுப்பினான். போசளப் படை கோப்பெருஞ்சிங்கன் இருந்த எள்ளேரியையும், கல்லியூர் மூலையையும் (வீராணம் ஏரிக்கரையில் உள்ள கலியமலை), கோப்பெருஞ்சிங்கனின் படைமுதலி  சோழகோன் இருந்த தொழுதகையூரையும் கைப்பற்றியது. கோப்பெருஞ்சிங்கனின் படை முதலிகள் 4 பேரையும் கொன்று கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு கோப்பெருஞ்சிங்கனின் தலைநகர் சேந்தமங்கலம் அடைந்து இராஜராஜனை விடுவித்தது. 

போசளப் படை இராஜராஜனை விடுவித்த அதே சமயத்தில், நரசிம்மன் சுந்தரபாண்டியனுடன் மகேந்திரமங்கலத்தில் போரில் ஈடுபட்டிருந்தான். சுந்தர பாண்டியன் போரில் தோல்வியுற்றான்.நரசிம்மன் இராமேஸ்வரம் வரை சென்று மீண்டான். சுந்தர பாண்டியன் நரசிம்மனுக்கு கப்பம் காட்டுவதாக ஒத்துக் கொண்டான் என்று ஹொய்சாளர் கல்வெட்டு கூறுகிறது.

இதன் பின்னர் சோழப்பேரரசு, கி.பி. 1238-க்கும் 1250-க்கும் இடையே சில ஆண்டுகள், தங்கள் எதிரிகளையும் சிற்றரசர்களையும் பொருட்படுத்தாமல் மீண்டும் தலை தூக்கிற்று. நெல்லூரை ஆண்ட தெலுங்குச் சோழ மன்னர்களின் ஒத்துழைப்புதான் இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது என்று நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார்.  

Refernces 

சோழர் வரலாறு - இராசமாணிக்கனார் 
பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் 
சோழர்கள் - K A நீலகண்ட சாஸ்திரிகள்   
தமிழ்நாட்டு வரலாறு - சோழப் பெரு வேந்தர் காலம் - முதல் தொகுதி

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 9
#சோழராச்சியப்பிரதிஷ்ட்டாச்சார்யா
#பாண்டியகஜகேசரி
#சோழகுலஏகரட்சகன்
#சோழமண்டலப்பிரதிஷ்ட்டாச்சாரியன்

No comments:

Post a Comment