நெல்லூர்ச் சோழரின் ஆட்சியில் காஞ்சி
நல்லசித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ சோழ மஹாராஜா - கி.பி 1187-1214
நெல்லூர்ச் சோழரின் தொடர்ச்சியான வரலாறு, முதலாம் மனும சித்தா மூலம் கி.பி. 1175-ல் ஆரம்பிக்கின்றது. இவருக்குப் பின், இவரது தம்பி பெத்தாவின் மூன்று மகன்களான தயபீமா, நல்லசித்தா மற்றும் எறசித்தா ஆகியோர் ஆட்சியைத் தொடர்ந்தனர். இதில் தயபீமா மற்றும் நல்லசித்தா ஆகியோர் இணைந்து ஆட்சி செய்தனர். இவர்களே காஞ்சியை நேரடிச் சோழர்களிடமிருந்து வென்றவர்கள். இவர்களின் கால கட்டத்திலிருந்தே நெல்லூர்ச் சோழர்களின் ஆட்சி காஞ்சியில் ஆரம்பித்தது. நல்லசித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ சோழ மஹாராஜா, காஞ்சியில் "கப்பம் கொண்ண" செய்தியை நெல்லூர்க் கல்வெட்டுகள் (G-1, K.V -13) குறிப்பிடுகின்றன. நல்லசித்தாவின் பட்டங்கள், அவன் சுதந்திரமாக ஆட்சி செய்ததற்கு அடையாளமாக விளங்குகின்றன. இரண்டு காலகட்டங்களில் நெல்லூர்ச் சோழர் சுதந்திரமாக செயல் பட்டிருப்பர் என நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார். அவை:
1) கி.பி. 1183-92, மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த காலம்.
2) கி.பி. 1214 முதல், மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின் இறுதிக்காலம் வரை- இது அவன் மீண்டும் பாண்டியருடன் போரிட்ட காலப்பகுதி.
எற சித்தா என்கிற புஜபல வீர எற சித்தன்ன தேவ சோழ மஹாராஜா - கி.பி 1195-1217
தயபீமா மற்றும் நல்லசித்தாவைத் தொடர்ந்து அவர்களின் தம்பி எறசித்தா கி.பி. 1195-லிருந்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். உறையூர் புரவராதீஸ்வரர், காஞ்சி புரவராதீஸ்வரர், காஞ்சிம் கப்பமு தின்னா என்று அழைக்கப்பட்டவர். எறசித்தாவின் மூன்று மகன்களான மனுமசித்தா, பெத்தா, தம்முசித்தா ஆகியோர் இவரது மூன்று கண்களைப் போல் இருந்தனர் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் இராஜராஜனுக்கு அடங்கிய சிற்றரசராக இவர் ஆட்சி செய்துள்ளார்.
ராஜேந்திர மனும சித்தா (II) என்கிற வீர நல்ல சித்தர தேவ சோழ மஹாராஜா - (கி.பி 1199-1220)
இவர் எற சித்தாவின் முதல் மகன். மூன்றாம் குலோத்துங்கனின் 23-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இவரை நல்லசித்தரசன் என்று குறிப்பிடுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு அடங்கிய சிற்றரசராக ஆரம்ப கால கட்டங்களில் ஆட்சி செய்தாலும், இவரது ஆட்சியின் இறுதி கால கல்வெட்டுகள் குலோத்துங்கனைக் குறிப்பிடவில்லை. கி.பி 1214-ம் ஆண்டு கல்வெட்டொன்று, இவரை காஞ்சிம்கப்ப கொண்ணாட்டி என்று குறிப்பிடுகின்றன. இந்தக் காலகட்டத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்கனின் இறுதி ஆட்சிக் காலம் வரை இவர் தன்னாட்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது மூன்றாம் குலோத்துங்கன் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், காஞ்சியை மனுமசித்தா தனியாட்சி புரிந்துள்ளார். இதற்கு முன் இவரது பெரிய தந்தை நல்ல சித்தா, கி.பி. 1183-லிருந்து 1192 வரை தன்னாட்சி செய்து, பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் அடக்கப் பட்டார். அதனைப் போன்றே மூன்றாம் இராஜராஜன் தலையிட்டு அடக்கும் வரை மனும சித்தா (II) தன்னாட்சி புரிந்துள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளைத் தவிர, மூன்றாம் இராஜேந்திரரின் இறுதி ஆட்சிக்காலம் வரை, நெல்லூர்ச் சோழர்கள் நேரடிச் சோழர்களுக்கு உறு துணையாய் இருந்துள்ளனர்.
தம்முசித்தா - கி.பி 1205-1209
இவர் ராஜேந்திர மனும சித்தா (II) வின் தம்பி. இவர் 5 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்துள்ளார். கி.பி. 1205 -ஆம் ஆண்டைச் சேர்ந்த இவரது ஆரம்ப காலக் கல்வெட்டு, சின்ன காஞ்சிபுரத்திலிருந்து கிடைக்கின்றது. கி.பி. 1208 -ஆம் ஆண்டில், மூன்றாம் குலோத்துங்கனின் வாரங்கல் படையெடுப்பின் போது, இவரும், ஏற சித்தா மற்றும் மனும சித்தா ஆகியோர் குலோத்துங்கன் சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோ
#காஞ்சிச்சோழர்