காஞ்சி
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோ ழர்கள் 5
தொண்டை நாடு சோழர்களுடன் மிக நெருங்கியத் தொடர்புடையது. கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்றி, அங்கு நாடோடியாகத் திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலை பெறச் செய்தார்.
காஞ்சி நகரத்தைக் கரிகாலன் புதுப்பித்தார். தொண்டை மண்டலத்தைக் காடு கெடுத்து நாடாக்கினார் என்று கலிங்கத்துப் பரணி, பெரிய புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. கரிகாலன் தொண்டை நாட்டைத் திருத்தி, காடுகளை வெட்டி மக்கள் உறைதற்கேற்ற சிற்றூர்கள் ஆக்கினார். அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளை நிலங்கள் ஆக்கினார். தொண்டை நாட்டை 24 கோட்டங்கள் ஆக்கினார். தொண்டை மண்டலத்தின் தலை நகரம் காஞ்சிபுரத்தை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தார். அங்குப் பலரைக் குடியேற்றினார். தொண்டை நாட்டை ஆண்டு வருமாறு தன் மரபினன் ஒருவனை விட்டுத் தன் நாடு மீண்டார் என இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.
பிற்காலத்தில் பல்லவர்கள் எழுச்சியின் போது தொண்டை நாடு பல்லவர் வசமாயிற்று. ஆதித்த சோழன் கால கட்டத்திலிருந்து தொண்டை நாடு மீண்டும் சோழர் வசமாயிற்று. தொண்டை நாடு பெரும்பாலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும், அது தனி நாடாகவேக் கருதப்பட்டு சோழர்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டு வந்துள்ளது. தொண்டை நாட்டைத் தனியாக, ஆதித்த கரிகாலன் உள்ளிட்ட சோழ இளவரசர்கள் நிர்வகித்துள்ளனர். முதலாம் இராஜேந்திரன் காலம் முதல் அதி ராஜேந்திரன் காலம் முடிய சோழ இளவரசர்கள் தொண்டை நாட்டை சோழ பல்லவன் என்னும் பெயரில் ஆட்சி செய்துள்ளனர்.
முதலாம் குலோத்துங்கன் முதலான சோழப் பேரரசின் நிலையை நீலகண்ட சாஸ்திரிகள் பின் வருமாறுக் குறிப்பிடுகிறார். "முதலாம் குலோத்துங்கனின் ஆட்சி முதல், கப்பம் கட்டுகிற சிற்றரசர்களின் எண்ணிக்கையும், மத்திய அரசில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கும், சோழர் ஆட்சியின் சிறப்புமிகு இயல்புகளாகத் தெரிகின்றன. அரசருடைய பிரதிநிதிகளாயிருந்து, இவர்கள் அதிகாரம் செலுத்தியதால், மத்திய ஆட்சியின் பலம் குறைந்து, அதனுடைய நேரடி நிர்வாகத்திலிருந்து பல பகுதிகள் விலகி நின்றன. அவை ஏறத்தாழ தங்கள் பகுதிகளில் தன்னுரிமையோடு விளங்கின. சிற்றரசர்கள் தங்களுக்குள் உடன்பாடுகளை செய்து கொண்டார்கள். சோழப் பேரரசின் முடிவு காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு உறுதியான சான்று என்று இதைக் கொள்ளலாம். சிற்றரசர்கள், எந்தக் கொள்கையும் இல்லாமல், தங்கள் தங்கள் சுய நலன்களுக்கு ஏற்றவாறு, சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி நடந்து கொண்டனர். சோழப் பேரரசு என்ற நினைவு சிதைந்தது. மத்திய அரசில் திறமை இல்லாதவர்களின் கைக்கு நிர்வாகம் மாறும் போது பேரரசு சிதைந்து விடும் நிலை இருந்தது. ஆனால், மூன்றாம் குலோத்துங்கன் அப்படிப்பட்ட வல்லமை இழந்த அரசனல்லன். எவ்வளவோ தொல்லைகள் இருந்தாலும், நாட்டின் ஒற்றுமையையும், தன்னுடைய அதிகாரத்தையும் நிலை நாட்டுவதில் அவன் வெற்றி கொண்டான். காஞ்சிபுரம் இவனுடைய ஆட்சியில் சில ஆண்டுகளுக்கு இவன் கையை விட்டு நழுவியது. அந்த நகரை மீண்டும் கைப்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வருங்காலத்தில் நிகழக் கூடிய செயல்களுக்கு இவை தெளிவான அறிகுறிகளாக விளங்கின."
முதலாம் இராஜராஜன் காலத்தில், தெலுங்குச் சோழரான ஜடா சோடவீமன் சாளுக்கிய மன்னன் சக்திவர்மனை வென்று அவனைக் காஞ்சி வரையில் துரத்தி வந்தான். இராஜராஜன், ஜடா சோடவீமனைப் போரில் கொன்று வேங்கி நாட்டை சக்தி வர்மனுக்குத் திருப்பி அளித்தார். இந்தக் கால கட்டத்துக்குப் பிறகு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், நெல்லூர்ச் சோழரான நல்ல சித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ சோழ மஹாராஜாவால் காஞ்சி வெல்லப் பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காஞ்சியைக் கைப்பற்றி, நெல்லூர்ச் சோழரை மீண்டும் நேரடிச் சோழர்க்கு அடங்கிய சிற்றரசனாக மாற்றினார். இந்தக் கால கட்டம் முதல் நெல்லூர்ச் சோழர், காஞ்சியில் நிரந்தரமாகத் தங்கள் ஆட்சியைத் தொடர்ந்துள்ளனர். சோழருக்குப் பின், பாண்டியர், காகதீயர் போன்றோரால் காஞ்சி வெல்லப் பட்டாலும், நெல்லூர்ச் சோழர்கள் தொடர்ந்துப் பேரரசுகளின் மேலாதிக்கத்தை ஏற்றும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தன்னிச்சையாகவும் காஞ்சியில் ஆட்சியைத் தொடர்ந்துள்ளனர்.
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோ
#தெலுங்குச்சோழர்
#காஞ்சிச்சோழர்
No comments:
Post a Comment