கரிகால சோழ வம்சம் - தெலுங்குச்சோழர்
தென்னிந்திய வரலாற்றில் நேரடிச் சோழர்களின் பங்கு மகத்தானது. அதனைப் போன்றே, தெலுங்குச் சோழர்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால், நேரடிச் சோழர்களும் மற்ற தென்னிந்திய அரசுகளும் பேசப்பட்ட அளவு தெலுங்குச் சோழர்கள் பேசப் படவில்லை.
தெலுங்குச் சோழர்கள் தங்களைக் காவிரி நதியின் கரைகளை உயர்த்திக்கட்டிய பணியில் பங்குபெற்ற திரிலோசனனும் மற்ற அரசர்களும் அடிபணிந்த கரிகாலன் குல விளக்குகள் என்று குறிப்பிடுகின்றனர்.
கரிகால சோழன் வம்சத்தில் மூத்த மகன் வழி வந்த நேரடிச் சோழர் உறையூர், பழையாறை எனத் தங்களின் ஆட்சியைத் தொடர்ந்தனர். கரிகாலன் வம்சத்தில் இரண்டாவது மகன் தசாவர்மன் வழி வந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள்.
இந்த தெலுங்குச் சோழர்கள், கரிகாலனின் வட இந்தியப் படையெழுச்சியின் போதோ அல்லது கரிகாலன் காவேரிக்குக் கரையெழுப்பும் போது உதவ மறுத்த த்ரிலோச்சன பல்லவனை வென்ற பிறகோ அங்கு ஆட்சி செய்ய அனுப்பப் பட்டவர்களாக இருக்க வேண்டும். தெலுங்குச் சோழர் என்னும் பதம் ஒரு அடையாளப் பெயராக, மூத்த கிளையினரான நேரடிச் சோழர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட கூறப்படும் வார்த்தை. இது முதன் முதலில், இந்தியக் கல்வெட்டுத் துறைத் தலைமை ஆய்வாளராகப் பணி செய்த ராய் பகதூர் வெங்கய்யா என்பவரால் கி.பி. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப் படுத்தப்பட்டது. மற்றபடி அவர்கள் கரிகால சோழ வம்சம் என்றே அழைக்கப் பட்டுள்ளனர்.
தெலுங்குச் சோழர்களின் குறிப்புகள், கரிகாலனின் தந்தை ஜடா சோழன் (இளஞ்சேட்சென்னி?), அயோத்தியா தேசத்திலிருந்து தெற்கு நோக்கி படை எடுத்து வந்து, திரவிள பஞ்சகத்தை வென்று, காவேரிக் கரையில் ஆட்சி செய்த உறையூர் மன்னனை வீழ்த்தி அந்த நாட்டைக் கைப்பற்றியதாகக் குறிப்பிடுகிறது. சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர்கள் என்பதை கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இருப்பினும், கரிகாலனின் தந்தையின் காலகட்டத்தில் தான் அவர்கள் அயோத்தியிலிருந்து வந்திருப்பார்களா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். கரிகாலனின் காலத்துக்கு வெகு காலம் முன்பே சோழர்கள் காவேரிப் பூம்பட்டினத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள். பரசுராமர் கால கட்டத்தில் வாழ்ந்த, காவேரிக்குக் குடகிலிருந்து புகார் வரை வழித் தடம் அமைத்த காந்தமன் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. எனில், முந்தைய கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை கரிகாலனின் தந்தையான ஜடா சோழன் மீது ஏற்றிக் கூறப் பட்டிருக்கலாம்.
தெலுங்குச் சோழர்களின் முக்கிய கிளைகள்
1. ரேணாண்டு சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்த நந்திவர்மன் (கி.பி. 550) வழி வந்தவர்கள்.
2. பொத்தப்பிச் சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்த தசாவர்மனின் வழி வந்தவர்கள்
3. கோனிதேனா சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்த தசாவர்மனின் வழி வந்தவர்கள்
4. நிடுகல் சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்தவர்கள்
5. நெல்லூர்ச் சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்த மதுராந்தக பொத்தப்பி சோழனின் வழி வந்தவர்கள்
6. எருவா சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்தவர்கள்
7. கண்டூர் சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்தவர்கள்
8. ஹேமாவதி சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்தவர்கள்
i ) வேலணாண்டு சோழர் - மற்ற சோழர்களைப் போன்று சத்ரிய மரபும், சூரிய குலமும் அல்லாமல் நான்காம் வருணத்தில் (சதுர்த்தன்வய) பிறந்த இந்திரசேனாவின் வம்சத்தில் வந்தவர்கள். சோட கங்கேய ராஜா, சோட கொங்க ராஜா, சோடய்ய ராஜா என்று அழைக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு சோழர் என்ற பெயர் வந்ததற்கான காரணம் அறிய முடியவில்லை. குண்டூர், பித்தர்புரம் போன்ற பகுதிகளை ஆட்சி செய்தவர்கள்.
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 4
No comments:
Post a Comment