கரி காலன்
சோழ வம்சத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மன்னன், கரிகால சோழன். கரிகாலனின் பெருமையாக கூறப் படுபவனவற்றில் முக்கியமானவை இரண்டு விஷயங்கள். ஒன்று அவருடைய போர் வெற்றிகள் குறிப்பாக வட இந்தியப் போர் வெற்றி மற்றும் இமயத்தில் புலிச்சின்னத்தைப் பொறித்தது. மற்றொன்று, காவேரியின் போக்கை சீர் படுத்த அமைக்கப் பட்ட கல்லணை.
கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோரின் படையெடுப்புகளில் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருமே சக்கரவர்த்தி ஆவதற்குரிய போர் வழி முறைகளையேப் பின் பற்றியுள்ளனர். ஒரு அரசன், தன்னைச் சக்கரவர்தியாகப் பிரகடனப் படுத்திக் கொள்வதற்கு முன்னர் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை வென்றுத் தன்னடிப் படுத்த வேண்டும். இதற்குரிய வழி முறையாக அரசனது பலம் வாய்ந்த படை முதலில் தெற்கு நோக்கிப் படையெடுத்து தென் பகுதி நாடுகளை வெல்ல வேண்டும். பின்னர் மேற்கு நோக்கிப் படையெடுத்து மேற்குப் பகுதி நாடுகளைத் தன்னடிப் படுத்த வேண்டும். அதன் பின்னர் வடக்கு நோக்கிப் படையெடுத்து வட பகுதி நாடுகளைத் தன்னடிப் படுத்த வேண்டும். இறுதியாக கிழக்குப் பகுதி நாடுகளைப் படையெடுத்து வெல்ல வேண்டும். ஒரு சக்கரம் சுழல்வது போல் இந்தப் போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். தன்னைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளையும் வென்ற பிறகு அந்த அரசன், சக்கரவர்தியாகக் கருதப் படுவார். கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகிய மூவருமே இத்தகையப் போர் நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளனர். மூவருக்குமே இதை செயல் படுத்துவதற்குரியக் காரணிகளாக உயர்ந்த நோக்கங்கள் இருந்துள்ளன.காவேரியின் போக்கை சீர் படுத்த வேண்டிய நோக்கம் கரிகாலனுக்கும், சிவனுக்கு தக்ஷிண மேரு எனப்படும் மிகப் பெரிய ஆலயம் அமைக்க வேண்டிய நோக்கம் சிவபாத சேகரனுக்கும், இந்தியாவிலேயே மனிதர்களால் வெட்டப்பட்ட மிகப் பெரிய ஏரியை அமைத்து, தக்ஷிண மேருவுக்கு இணையான ஆலயத்தை அமைத்து தனது புதிய தலை நகரை நிர்மாணிக்க வேண்டிய நோக்கம் இராஜேந்திரனுக்கும் இருந்துள்ளன.
கரிகாலனின் போர்ச் செயல்கள் பொருநராற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப் பட்டுள்ளன. கரிகாலனின் படையெழுச்சியை இராசமாணிக்கனார் பின்வருமாறு வரிசைப் படுத்துகிறார்.
1. கரிகாலன் முதலில் சேர, பாண்டியருடன் வெண்ணியில் போரிட்டு வென்றார்.
2. பின்னர் நாகப் பட்டினத்தைத் தலை நகராகக் கொண்ட பன்றி நாட்டை வென்றார். பிறகு தென் பாண்டி நாட்டை அடிப்படுத்து மேற்கே சென்றார்.
3. கற்கா (பாலக்காடு), வேள்நாடு (திருவாங்கூர்), குட்டம் (கொச்சி), குடம் (தென் மலையாளம்), பூழி (வட மலையாளம்) ஆகிய பகுதிகளைக் கொண்ட சேர நாட்டை அடைந்து, அந்நாடுகளை வென்று தன் பேரரசில் சேர்த்துக் கொண்டார்.
4. இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர் என்பாரை (இடை நில அரசரை) வென்றார். இருங்கோவேள் முதலிய வேளிரைத் தனக்கு அடக்கியவர் ஆக்கினார்.
5. பின்னர் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்று, நாடோடியாகத் திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலை பெறச் செய்தார். 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினார்.
6. பிறகு திருக்கோவிலூரைத் தலை நகராகக் கொண்ட மலையமானை வென்றார்.
7. வேங்கடம் வரை வெற்றி கொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ்சேனையுடன் புறப்பட்டார். வடுகர் சிற்றரசர் பலரை வென்றார்.
8. பின்னர் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மீண்டார். அது சமயம் கரிகாலனை வரவேற்று மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம் கொடுத்தான். வச்சிர நாட்டு மன்னன் கொற்றப் பந்தர் அளித்தான். அவந்தி வேந்தன் தோரண வாயில் வழங்கினான். சோழ மன்னர்களின் வரலாற்றைக் கரிகாலன் இமயத்தில் பொறித்ததாகக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடுகின்றது.
9. இமயத்தை வென்ற பின், பெரும் கப்பற்படையுடன் இலங்கை சென்று அதனை வென்று தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆள விட்டு மீண்டார். மீண்ட போது, 12,000 குடிகளைச் சோழ நாட்டிற்கு கொண்டு வந்தார் என் கலிங்கத்துப் பரணி கூறுகிறது.
குடகில் தோன்றிய காவிரியை, சோழ நாட்டின் காவேரிப் பூம்பட்டினம் வரை வழித்தடம் அமைத்துக் கொண்டு வந்தவர் காந்தமன் என்னும் சோழ மன்னன். இந்தக் காவேரியில் அவ்வப் போது வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். "செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற் கன்னியின்" வெள்ளப் பெருக்கால் உண்டாகும் தீமையை மாற்ற, காவிரி ஆற்றின் இரு மருங்கும் கரை அமைக்க முடிவு செய்தார் கரிகாலன். கரிகாலனால் வெல்லப் பட்ட அரசர்களும், இலங்கையிலிருந்துக் கொண்டு வரப் பட்ட மக்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். ஆனால், திரிலோச்சன பல்லவன் என்னும் அரசன் மட்டும் இந்தப் பணிக்கு உடன் பணியவில்லை. கரிகாலன், திரிலோச்சன பல்லவனை அடக்கி காவேரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபட வைத்தார்.
கரிகாலன் சோழ வம்சத்தின் ஆணி வேர் மட்டுமில்லை. இந்தக் கரி காலனிடமிருந்து இரண்டு புதிய வம்சங்களும் தோன்றியுள்ளன. தெலுங்குச் சோழர்களின் குறிப்புகள், கரிகாலனின் மகன் மகிமானனுக்கு கரிகாலன், தசாவர்மன், தொண்டைமான் என்று மூன்று மகன்கள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. இதில் தசாவர்மனின் வழி வந்தவர்களே கரிகால சோழ வம்சம் எனப் படும் தெலுங்குச் சோழர்கள். அதனைப் போன்றே மூன்றாவது மகன் தொண்டைமான் என்பவரிடமிருந்து தொண்டைமான் வம்சம் தோன்றியுள்ளது.
கரிகாலன், பல்லவ வம்சத்தினரான த்ரிலோச்சன பல்லவனை வென்றார். பல்லவர்கள் தங்களை பரத்வாஜ் கோத்திரத்தினராக குறிப்பிடுகின்றனர். மேலும் பல்லவர்கள் அக்னி குலத்தவர்களாகக் கருதப் படுகின்றனர். கரிகால சோழனின் மகனுக்கும் நாக இளவரசிக்கும் பிறந்தவர் தொண்டைமான். தொண்டைமான் வழி வந்த அறந்தாங்கி தொண்டைமான்கள் சூரிய குலத்தவர்களாக் குறிப்பிடப் படுகின்றனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது பல்லவ வம்சம் வேறு, தொண்டைமான் வம்சம் வேறு என்று அறிய முடிகின்றது. மேலதிக ஆய்வுகள் இதனைத் தெளிவு படுத்தக் கூடும்.
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 3

No comments:
Post a Comment