பாரதத்தின் தொன்மையான வரலாறு, திராவிடேஸ்வரரான மனுவிலிருந்து தொடங்குகிறது. ஊழிப் பெரு வெள்ளத்திலிருந்து மக்களையும் மற்ற உயிர்களையும் காப்பாற்றிய மனு, புதியப் பேரரசை இந்தியாவில் நிறுவினார். பாரதத்தின் இரண்டு முக்கிய அரச குலங்கள் இந்த மனுவிடமிருந்து தோன்றின. மனுவின் மகன் இக்ஷ்வாகுவிலிருந்து தோன்றியது சூரிய குலம். மனுவின் மகள் இளாவிலிருந்து (இளா = இளவரசி?) தோன்றியது சந்திர குலம்.
இக்ஷ்வாகுவின் பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும், ஐலன்(இளா) பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும் உண்டாகி அவர்கள் ஆங்காங்கே இந்த பாரத வர்ஷத்தை ஆண்டனர் என்று மஹாபாரதம் சபாபர்வத்தில் கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். பாரதத்தில் எந்த மன்னன் எந்தப் பகுதியை ஆண்டாலும் அவர்களது மூலம் இந்த இரண்டு பரம்பரைகளில் ஏதேனும் ஒன்றில்தான் ஆரம்பித்திருக்கும் என்கிறார் கிருஷ்ணன்.
சூரிய குலமும், சந்திர குலமும் தோன்றி கிட்டத்தட்ட 35 தலைமுறைகள் கழித்துப் பரசுராமர் காலகட்டத்தில் தோன்றியது அக்னி குலம். தொல்குடி சத்ரியர்களை அழிப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டப் பரசுராமர் மேற்கொண்ட தொடர்ச்சியானப் போரினால், பாரதத்தில் சத்ரிய அரசர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. இறுதியில், சூரியகுல சத்ரியரான இராமரை எதிர்க்கும் போதே, பரசுராமரின் சக்தி அழிந்தது. இந்தக் காலகட்டத்தில், அசுரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. அசுரர்களின் ஆட்சியில் அதர்மம் அதிகரித்தது. அசுரர்களை அழிப்பதற்காக, பொதியமாமுனி, சம்பு மாமுனி, வசிஷ்டமாமுனி ஆகியோர் செய்த வேள்வியில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அம்சமாகத் தோன்றியவர்கள் அக்னி குல ஷத்ரியர்கள். இவர்களைப் பரசுராமர் ஆசிர்வதித்ததாகக் கூறப்படுகிறது.
பாரத வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்த காலகட்டம் இது. பரசுராமர் ஷேத்திரம் எனப்படும் கேரளத்தின் நிலப் பகுதி கடலிலிருந்து வெளிப்பட்டது, குடகிலிருந்து காவேரி வெளிப்பட்டது, குடகிலிருந்து வெளிப்பட்ட காவேரிக்கு பூம்புகார் வரை அகத்தியரின் துணையுடன் காந்தமன் என்னும் சோழ மன்னன் வழித்தடம் அமைத்தது போன்ற நிகழ்வுகள் இந்த கால கட்டத்தில் நிகழ்ந்தவையே. இவற்றை நோக்கும் போது, கடற்கோள் மற்றும் நில நடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவு இக்காலத்தில் ஏற்பட்டு, பாரதத்தின் நில அமைப்பில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் கருதலாம். அக்னி குல சத்ரியர்களான சேரர், இந்தக் கால கட்டத்திலிருந்தே கேரளத்தில் ஆட்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். சோமசுந்தரேசப் பெருமானுக்கும், தடாதகைப் பிராட்டியான மீனாட்சிக்கும் மைந்தனாகப் பிறந்த உக்கிரகுமார பாண்டியன் என்கிற கடல் வடிவலம்ப நின்ற பாண்டியன் வேலெறிந்து கடல் பொங்கியதை நிறுத்தியதாகக் கூறப்படும் கால கட்டமும் இதுவாகவே இருக்கக் கூடும். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளால் தொடங்கப் பட்டு அகத்தியனார், குன்றெறிந்த முருக வேள் உள்ளிட்டோர் உறுப்பினராய் இருந்த பாண்டியர்களின் முதலாம் தமிழ்ச் சங்கம் கடற்கோளால் அழிந்ததும் இந்தக் காலகட்டத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும்.
இந்தியாவின் தொல்குடி அரசர்கள் பெரும்பாலும் சூரிய குலம், சந்திர குலம் மற்றும் அக்னி குலம் ஆகிய மூன்று குலத்தின் வழி வந்தவர்களே. தமிழகத்தின் தொல் குடி வேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூவேந்தர்களும் முறையே அக்னி, சூரிய மற்றும் சந்திர குலத்தவர்கள்.
மனுவின் மகன் இக்ஷ்வாகு முதலான சூரிய குலத்தில், மூத்த கிளையான இக்ஷவாகு வம்சம், பட்டத்து இளவரசர்கள் மூலம் தொடர (பெரும்பாலும் மூத்த மகன்), சக்தி வாய்ந்த இளைய மகன்களின் மூலம் அவ்வப்போது கிளை வம்சங்கள் தோன்றியுள்ளன. ரகு வம்சம், சிபி வம்சம்(செம்பியன்), சோழ வம்சம், கரிகாலன் வம்சம்(தெலுங்குச் சோழர்கள்) போன்றவை அவ்வாறே தோன்றியிருக்க வேண்டும். சோழன் என்னும் பெயர் வருவதற்கு முன்னால் சோழர்கள் சிபி வம்சம்(செம்பியன்) என்றே அழைக்கப்பட்டுள்ளனர். சிபி வம்சத்தில் தோன்றிய சுராதிராசன் என்கிற சோழன் என்னும் அரசனைத் தொடர்ந்து சோழ வம்சத்தின் ஆட்சி தோன்றியது. சோழன் என்னும் மன்னனின் பெயரை ஒட்டியே சோழ வம்சம் என்னும் பெயர் வந்ததே அன்றி சோறு, சூழ்ந்தது போன்ற காரணப்பெயர்களை ஒட்டி வரவில்லை. மன்னரின் பெயரைக்கொண்டே வம்சங்கள் அழைக்கப்படுவது சூரிய குலத்தில் இருந்த வழக்கம்.
சங்ககாலத்தில், கரிகாலன் ஆட்சியில் பெரும் எழுச்சியைப் பெற்றது சோழப் பேரரசு. சங்ககாலத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படும் களப்பிரர் காலத்திலும் தாக்குப் பிடித்து, விஜயாலய சோழன் காலத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற்றது. முதலாம் இராஜராஜன் மற்றும் அவரது மகன் இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் மேன்மையின் உச்சத்தைத் தொட்ட சோழப் பேரரசின் ஆட்சி, இடையில் நான்கு தலைமுறை சாளுக்கிய சோழர்களின் ஆட்சியையும் சேர்த்து மூன்றாம் இராஜேந்திரன் காலத்துடன் கி.பி. 1279-ல் முடி வடைந்தது.
இந்த கால கட்டத்திற்குப் பின்பும் தமிழக வரலாற்றில் சோழர் என சில அரசர்கள் குறிக்கப் படுகின்றனர். அவர்களில் சிலர்,
1. கி.பி 13-ம் நூற்றாண்டின் இறுதியில், சிதம்பரம் கோயிற்புராணம் எழுதிய உமாபதி சிவாச்சாரியாரை ஆதரித்த வீர வர்ம சோழன்
2. கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரவி வர்மன் குலசேகரன் எனப்படும் கேரள மன்னனால் வெல்லப்பட்ட சோழன்
3. கி.பி 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குமார கம்பனின் படையெடுப்பின் போது குறிப்பிடப்படும் சோழன்
4. கி.பி 15-ம் நூற்றாண்டில், சோழ பீமன், சோழ நாராயணன் என அழைக்கப் பட்ட சோழன்
5. கி.பி 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிருஷ்ண தேவராயரின் கால கட்டத்தில் மதுரையை வென்ற வீர சேகர சோழன்
6. கி.பி 16-ம் நூற்றாண்டில் அச்சுதராயரின் கால கட்டத்தில் சோழகுலத்திலகன், பொன்னம்பலநாத ஸ்ரீ பாத சேகரன் என்று அழைக்கப் பட்ட சோழன்
7. கி.பி 16-ம் நூற்றாண்டின் மத்தியில் சதாசிவராயர் காலத்தில், ஸ்ரீரங்கத்து நாராயண ஜீயரை அழைப்பித்து விசாரித்த சோழன்
8. கி.பி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் விட்டலேஸ்வர சந்தா மாலை இயற்றப் பட்ட விட்டலேஸ்வர சோழன்
9. கி.பி 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரெகுநாத நாயக்கர் போரிட்டு வென்ற பெரிச்சி சோழகன்
10. ரெகுநாத நாயக்கருக்கு ஆதரவாக பெரிச்சி சோழகனைக் கொன்ற செங்கிளி நாட்டு வேதாந்தி சோழன்
11. சோழகன், சோழகனார் எனஅழைக்கப்படும் சோழகோன்
12. கலி ராஜேந்திர சோழன்
13. பெரிய சோழனார்
14. சின்ன சோழனார்
15. கி.பி 17/18-ம் நூற்றாண்டில் செப்பேடு வெளியிட்ட கரிகால சோழ ராஜா
இதே கால கட்டத்தில் குறிப்பிடப் படும் மற்ற சோழர்கள்
இவர்கள் யார்?
சோழன் என்று வருவதால் இவர்கள் அனைவரையும் விஜயாலய சோழன் மற்றும் இராஜராஜ சோழன் வழி வந்த நேரடிச் சோழ மரபினராகக் கருதலாமா? அல்லது இவர்கள் வேறு மரபினரா?
இவற்றிற்கான விடையைத் தேடுவோம். கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் இவர்களை ஓரளவு அடையாளம் காண முடிகின்றது. அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம். மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் முடிவடைந்த நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சிக்குப் பிந்தைய சோழர் பற்றிய ஆய்வில் இது ஒரு ஆரம்ப கட்ட முயற்சி. வரலாற்று ஆய்வாளர்கள் மேலதிக ஆய்வுகள் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ள களம் இது.
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோ ழர்கள் 1
No comments:
Post a Comment