Thursday, 9 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #2

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பரின் மகன் அம்பிகாபதியும், சோழ இளவரசியும் காதலித்ததாகக் குற்றம் சுமத்தப் பட்டனர். இதனால் சோழ இளவரசி மரணமடைய, அம்பிகாபதிக்கு சோழ மன்னன்  மரண தண்டனை விதிக்க, சோழ மன்னனின் கோபத்துக்கு பயந்து கம்பர் நாட்டை விட்டு வெளியேறினார். "கவிச்சக்கரவர்த்தி" என எந்த சோழ மன்னரால் பாராட்ட பட்டாரோ, அதே சோழ மன்னனுக்கு பயந்து நாடோடியாய் வாழ்ந்து இறந்தார் கம்பர்.

சோழ வம்சாவளியைக் குறிப்பிடும் மெக்கென்ஸி சுவடிகளில் ஒன்று, கம்பரின் பாடல் ஒன்றை பின்வருமாருக் குறிப்பிடுகிறது.

"வில்லம்பு சொல்லம்பு மேதனியில் ரெண்டுண்டு
வில்லம்பில் சொல்லம்பே மேலம்பு - வில்லம்பு
பட்டுதடா யென்மார்பில் பார்வேந்தர் வுன்குலத்தெ
சுட்டுதடா யென்வாயில் சொல்"

கம்பரின் அந்த அறம்பட்டு அந்த சோழன் எனப்பட்டவன் அத்தோடே ஆண்டுப் போய்விட்டான். அதன் பிற்காலம், சோழ தேசத்துக்கு ராஜியாதிபத்தியம் பண்ணவன் சோழன் என்று பேர் வைத்துக் கொண்டார்கள் என்கிறது சுவடி.

கம்பரின் சாபமோ, சோழ இளவரசியின் சாபமோ அல்லது இயற்கையின் சுழற்சியோ, மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சி முடிவடைந்தது. பாண்டியர்களிடம் போரில் தோல்வி, மைய அரசின் பலவீனம், சிற்றரசர்களின் ஒத்துழைப்பின்மை, தொடர்ச்சியாக சோழ தேசத்தில் ஏற்பட்ட பஞ்சங்கள், மாறி வரும் அரசியல் சூழல் எனப் பல்வேறு காரணிகள் சோழர்களை பலவீனம் ஆக்கி, மூன்றாம் இராஜேந்திரனோடு நேரடிச் சோழர்களை அரசியலில் இருந்து ஒதுங்க வைத்திருக்க வேண்டும். பேரரசுக்கான நோக்கத்துடன், பாண்டியர், ஹொய்சாளர், காடவராயர் மற்றும் தெலுங்குச் சோழர் மிக்க வலிமையுடன் சோழர்களைச் சுற்றிப் பெரு முனைப்பு காட்ட, பல்வேறு காரணங்களால் பலவீனமான சோழர்கள், இந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வீழ்ச்சியடைய ஆரம்பித்த மைய அரசின் பலம், மூன்றாம் இராஜேந்திரன் காலத்தில் இறுதி மூச்சினை எட்டியது.

மூன்றாம் இராஜராஜன் மற்றும் மூன்றாம் இராஜேந்திரன் காலத்தில் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்னும் சோழரின் பட்டத்தைப் பயன்படுத்தாத சிற்றரசர்களே தமிழகத்தில் இல்லை எனும் சூழல் உருவாகியது. இது சோழர்களின் பலவீனத்தை உணர்த்துவதாகவும், ஒவ்வொரு சிற்றரசும் சோழருக்கு இணையாக தங்களை உயர்த்திக்கொள்ள முற்பட்டதையும் காட்டுகின்றது. வயதான வேங்கையின் மரணத்தை எதிர் நோக்கியிருப்பது போல, சோழர் ஆட்சியின் முடிவு எப்போது நிகழும் என ஒவ்வொரு அரசும் எதிர் நோக்கிக் காத்திருந்தன. கி.பி. 1279-க்குப் பிறகு நேரடிச் சோழர்களின் ஆட்சி பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாம் இராஜேந்திரருக்குப் பின்னும் நேரடிச் சோழர் ஆட்சி செய்திருந்தால், அவர்கள் ஒன்றிரண்டு தலைமுறைகள் கங்கை கொண்ட சோழ புரத்திலேயே தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் அதற்குரிய சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மூன்றாம் இராஜேந்திரருடன் நேரடிச் சோழர்களின் "ஆட்சி" முடிவடைந்ததாகக் கருதலாம்.

மூன்றாம் இராஜேந்திர சோழனின் கால கட்டத்திற்குப் பின்பு, தமிழகத்தில் குறிப்பிடப் படும் சோழர்கள், சோழ மகாராஜா எனப்படும் தெலுங்குச் சோழர்கள் மற்றும் சோழகோன் எனப்படும் அதிகாரிகளே. அவர்களைக் குறைந்த பட்சம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. காஞ்சிச் சோழர் - இவர்கள் தெலுங்குச் சோழர் வம்சத்தை சேர்ந்தவர்கள். சங்க காலக் கரிகால சோழனின் இளைய மகன் வழி வந்தவர்கள். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நெல்லூர்ச் சோழர் காஞ்சியையும் ஒரு தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.  கி. பி. 1316-ல் முதலாம் சடையவர்ம பராக்கிரம பாண்டியன், நெல்லூர்ச்  சோழரான வீர கண்ட கோபாலனைத் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து காகதீயர்களின் தளபதி முப்பிடி நாயக்கர் படையெடுத்து வந்து பாண்டியனை வென்று காஞ்சியைக் கைப்பற்றி, மான வீர சோழமஹாராஜாவை ஆளுநராக நியமித்தார். இந்த மான வீரா என்பவரும் பாண்டியரால் தோற்கடிக்கப் பட்ட வீரகண்ட கோபாலனும் ஒருவராகவே இருக்கலாம். இந்தக் கால கட்டத்துக்குப் பின் காஞ்சியை ஆட்சி செய்த தெலுங்குச் சோழர்கள், மானவீராவின் வம்சத்தினராக இருக்கக்கூடும். இவர்கள் காஞ்சி புரவராதிஸ்வரர், காஞ்சி ராஜு மற்றும் கரிகால ராஜா என அழைக்கப் பட்டவர்கள்.

2. பிற்கால உறையூர்ச் சோழர் - இவர்களும் தெலுங்குச் சோழர் வம்சத்தை சேர்ந்தவர்கள். சங்க காலக் கரிகால சோழனின் இளைய மகன் வழி வந்தவர்கள். நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சியின் மறைவுக்குப் பின்னர், உறையூரைத்  தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். மூன்றாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்பு, விஜயநகர அரசர்கள் காலத்தில் இவர்கள் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். விஜய நகர குமார கம்பண்ணனின் படையெடுப்பின் போது, உடன் வந்த சோழர்கள் இவர்களாக இருக்கக் கூடும். குமார கம்பண்ணனின் படை, கி.பி. 1371-ல் ஸ்ரீரங்கத்தை முகம்மதியரிடமிருந்துக் கைப்பற்றியது. குமார கம்பண்ணனின் படைத் தளபதி ஒருவர் ஸ்ரீரங்க ஸ்தாபனாச்சார்யா என்று அழைக்கப் படுகிறார். இந்தக் கால கட்டத்திலிருந்தோ அல்லது இரண்டாம் தேவ ராயன் கால கட்டத்திலிருந்தோ, தெலுங்குச் சோழர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கியிருக்க வேண்டும். இவர்கள், விஜயநகர அரசர்களின் தென் மண்டல அதிகாரிகளாக (தெக்ஷண புசம்)  கல்வெட்டுகளில் குறிக்கப் படுகின்றனர். ஸ்ரீரங்கம் கோயில் இவர்களின் கட்டுப் பாட்டில் இருந்துள்ளது.  உறையூர் புரவராதீஸ்வரர் என அழைக்கப் பட்டவர்கள்.

3. பிச்சாவரம் சோழகோனார் - இவர்கள் சோழகோன் வம்சத்தை சேர்ந்தவர்கள். இமய மலைக்கு தெற்கில் உள்ள கௌட (வங்காளம்) தேசத்தை சேர்ந்த ஐந்தாம் மனுவின் (மானவ? - கி.பி 625-626) மூத்த மகன் இரண்யவர்மன் வழி வந்தவர்கள். சோழர்கள் நலிவுற்றிருந்த கி.பி. 7-ம் நூற்றாண்டு கால கட்டத்தில், வியாக்கிர முனிவரால் சோழகோன் என்னும் பட்டம் அளிக்கப்பட்டு, சோழ தேசத்தின் பகுதியான சிதம்பரத்தின் அரசனாக, தில்லையில் இரண்ய வர்மன் முடி சூட்டப்பட்டதாக கோயிற்புராணம் மூலம் அறிய முடிகின்றது. கொற்றவன் குடி, பித்தர்புரம் (பிச்சாவரம்),  தீவுக்கோட்டை, கொள்ளிடம், அரசூர், தொழுதூர், புவனகிரி உள்ளிட்ட சிதம்பரம் பகுதியின் ஆட்சியாளர்களாக சோழகோன் வம்சம் இருந்துள்ளனர்.  பராந்தக சோழன் காலத்திலிருந்தே சோழகோன் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. நேரடிச்சோழர், வாணகோவரையர், காடவராயர், பாண்டியர், செஞ்சி நாயக்கர், அரியலூர் மழவராயர், உடையார் பாளையம் ஜமீன் ஆகியோரின் அதிகாரிகளாக சோழகோனார் இருந்துள்ளதைக் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவர்கள் அரசனின் உடன் கூட்டத்து அதிகாரிகளாக, அகம்படி முதலி, சாமந்த முதலி, வர முதலி போன்ற பதவிகளையும், பிள்ளை (கோயில் பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும் படி ஆணையிடும் அதிகாரி), பண்டாரத்தார் (கருவூல அதிகாரி)  முதலிய பதவிகளையும் வகித்துள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் காலம் முதல் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலம் முடிய சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தை சோழகோனார் கவனித்து வந்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி பார்ப்பதற்கு முன், நேரடிச் சோழர்கள், தெலுங்குச் சோழர்கள், சோழகோன் ஆகியோரின் பெயர்கள் அழைக்கப் படும் முறையைத் தெரிந்து கொள்வோம்.

நேரடிச் சோழர்கள் : உடையார் ஸ்ரீ கோப்பர/ராஜ கேசரி வன்மரான _______ சோழ தேவர்

தெலுங்குச் சோழர்கள் : சோழ மஹாராஜா / தேவ சோழ மஹாராஜா/ மஹாராஜா/ மஹாமண்டலேசுவரர்/ உறையூர் புரவராதீஸ்வரர் / கரிகாலகுலம் / கரிகால சோழராஜா

சோழகோன் : சோழகோன் / சோழகோனார் /சோழகன் /சோழகனார் / மஹாராஜா

நேரடிச் சோழர்கள் மட்டுமல்லாது, தெலுங்குச் சோழர்களும், சோழகோனாரும் சில இடங்களில் வெறும் "சோழன்" என்று குறிப்பிடப் படும்போது, மற்ற காரணிகளைக் கொண்டே அவர்கள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 2

No comments:

Post a Comment