Saturday, 25 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #4

கரிகால சோழ வம்சம் - தெலுங்குச்சோழர் 

தென்னிந்திய வரலாற்றில் நேரடிச் சோழர்களின் பங்கு மகத்தானது. அதனைப் போன்றே, தெலுங்குச் சோழர்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால், நேரடிச் சோழர்களும் மற்ற தென்னிந்திய அரசுகளும் பேசப்பட்ட அளவு தெலுங்குச் சோழர்கள் பேசப் படவில்லை.

தெலுங்குச் சோழர்கள் தங்களைக் காவிரி நதியின் கரைகளை உயர்த்திக்கட்டிய பணியில் பங்குபெற்ற திரிலோசனனும் மற்ற அரசர்களும் அடிபணிந்த கரிகாலன் குல விளக்குகள் என்று குறிப்பிடுகின்றனர்.   

கரிகால சோழன் வம்சத்தில் மூத்த மகன் வழி வந்த நேரடிச் சோழர் உறையூர், பழையாறை எனத் தங்களின் ஆட்சியைத் தொடர்ந்தனர். கரிகாலன் வம்சத்தில் இரண்டாவது மகன் தசாவர்மன் வழி வந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள். 

இந்த  தெலுங்குச் சோழர்கள், கரிகாலனின் வட இந்தியப் படையெழுச்சியின் போதோ அல்லது கரிகாலன் காவேரிக்குக் கரையெழுப்பும் போது உதவ மறுத்த த்ரிலோச்சன பல்லவனை வென்ற பிறகோ அங்கு ஆட்சி செய்ய அனுப்பப் பட்டவர்களாக இருக்க வேண்டும். தெலுங்குச் சோழர் என்னும் பதம் ஒரு அடையாளப் பெயராக, மூத்த கிளையினரான நேரடிச் சோழர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட கூறப்படும் வார்த்தை. இது முதன் முதலில், இந்தியக் கல்வெட்டுத் துறைத் தலைமை ஆய்வாளராகப் பணி செய்த ராய் பகதூர் வெங்கய்யா என்பவரால் கி.பி. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப் படுத்தப்பட்டது. மற்றபடி அவர்கள் கரிகால சோழ வம்சம் என்றே அழைக்கப் பட்டுள்ளனர். 

தெலுங்குச் சோழர்களின் குறிப்புகள், கரிகாலனின் தந்தை ஜடா சோழன் (இளஞ்சேட்சென்னி?), அயோத்தியா தேசத்திலிருந்து தெற்கு நோக்கி படை எடுத்து வந்து, திரவிள பஞ்சகத்தை வென்று, காவேரிக் கரையில் ஆட்சி செய்த உறையூர் மன்னனை வீழ்த்தி அந்த நாட்டைக் கைப்பற்றியதாகக் குறிப்பிடுகிறது. சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர்கள் என்பதை கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இருப்பினும், கரிகாலனின் தந்தையின் காலகட்டத்தில் தான் அவர்கள் அயோத்தியிலிருந்து வந்திருப்பார்களா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். கரிகாலனின் காலத்துக்கு வெகு காலம் முன்பே சோழர்கள் காவேரிப் பூம்பட்டினத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள். பரசுராமர் கால கட்டத்தில் வாழ்ந்த, காவேரிக்குக் குடகிலிருந்து புகார் வரை வழித் தடம் அமைத்த காந்தமன் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. எனில், முந்தைய கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை கரிகாலனின் தந்தையான ஜடா சோழன் மீது ஏற்றிக் கூறப் பட்டிருக்கலாம். 
 
தெலுங்குச் சோழர்களின் முக்கிய கிளைகள்

1. ரேணாண்டு சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்த நந்திவர்மன் (கி.பி. 550)  வழி வந்தவர்கள். 
2. பொத்தப்பிச் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த தசாவர்மனின் வழி வந்தவர்கள்
3. கோனிதேனா சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த தசாவர்மனின் வழி வந்தவர்கள் 
4. நிடுகல் சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்தவர்கள்
5. நெல்லூர்ச் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த மதுராந்தக பொத்தப்பி சோழனின் வழி வந்தவர்கள்
6. எருவா சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்
7. கண்டூர் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்
8. ஹேமாவதி சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்

i ) வேலணாண்டு சோழர் - மற்ற சோழர்களைப் போன்று சத்ரிய மரபும், சூரிய குலமும் அல்லாமல் நான்காம் வருணத்தில் (சதுர்த்தன்வய) பிறந்த இந்திரசேனாவின் வம்சத்தில் வந்தவர்கள். சோட கங்கேய ராஜா, சோட கொங்க ராஜா, சோடய்ய ராஜா என்று அழைக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு சோழர் என்ற பெயர் வந்ததற்கான காரணம் அறிய முடியவில்லை. குண்டூர், பித்தர்புரம் போன்ற பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். 

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 4

Sunday, 19 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #3

கரி காலன் 

சோழ வம்சத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மன்னன், கரிகால சோழன். கரிகாலனின் பெருமையாக கூறப் படுபவனவற்றில் முக்கியமானவை இரண்டு விஷயங்கள். ஒன்று அவருடைய போர் வெற்றிகள் குறிப்பாக வட இந்தியப் போர் வெற்றி மற்றும் இமயத்தில் புலிச்சின்னத்தைப்  பொறித்தது. மற்றொன்று, காவேரியின் போக்கை சீர் படுத்த அமைக்கப் பட்ட கல்லணை. 

கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோரின் படையெடுப்புகளில் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருமே சக்கரவர்த்தி ஆவதற்குரிய போர் வழி முறைகளையேப் பின் பற்றியுள்ளனர். ஒரு அரசன், தன்னைச் சக்கரவர்தியாகப் பிரகடனப் படுத்திக் கொள்வதற்கு முன்னர் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை வென்றுத் தன்னடிப் படுத்த வேண்டும். இதற்குரிய வழி முறையாக அரசனது பலம் வாய்ந்த படை முதலில் தெற்கு நோக்கிப் படையெடுத்து தென் பகுதி நாடுகளை வெல்ல வேண்டும். பின்னர் மேற்கு நோக்கிப் படையெடுத்து மேற்குப் பகுதி நாடுகளைத் தன்னடிப் படுத்த வேண்டும். அதன் பின்னர் வடக்கு நோக்கிப் படையெடுத்து வட பகுதி நாடுகளைத் தன்னடிப் படுத்த வேண்டும். இறுதியாக கிழக்குப் பகுதி நாடுகளைப் படையெடுத்து வெல்ல வேண்டும். ஒரு சக்கரம் சுழல்வது போல் இந்தப் போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். தன்னைச் சுற்றியுள்ள அனைத்து  நாடுகளையும் வென்ற பிறகு அந்த அரசன், சக்கரவர்தியாகக் கருதப் படுவார். கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகிய மூவருமே இத்தகையப் போர் நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளனர். மூவருக்குமே இதை செயல் படுத்துவதற்குரியக் காரணிகளாக உயர்ந்த நோக்கங்கள் இருந்துள்ளன.காவேரியின் போக்கை சீர் படுத்த வேண்டிய நோக்கம் கரிகாலனுக்கும், சிவனுக்கு தக்ஷிண மேரு எனப்படும் மிகப் பெரிய ஆலயம் அமைக்க வேண்டிய நோக்கம் சிவபாத சேகரனுக்கும், இந்தியாவிலேயே மனிதர்களால் வெட்டப்பட்ட மிகப் பெரிய ஏரியை அமைத்து, தக்ஷிண மேருவுக்கு இணையான ஆலயத்தை அமைத்து தனது புதிய தலை நகரை நிர்மாணிக்க வேண்டிய நோக்கம் இராஜேந்திரனுக்கும் இருந்துள்ளன. 

கரிகாலனின் போர்ச் செயல்கள் பொருநராற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப் பட்டுள்ளன. கரிகாலனின் படையெழுச்சியை இராசமாணிக்கனார் பின்வருமாறு வரிசைப் படுத்துகிறார்.

1. கரிகாலன் முதலில் சேர, பாண்டியருடன் வெண்ணியில் போரிட்டு வென்றார்.

2. பின்னர் நாகப் பட்டினத்தைத் தலை நகராகக் கொண்ட பன்றி நாட்டை வென்றார். பிறகு தென் பாண்டி நாட்டை அடிப்படுத்து மேற்கே சென்றார்.

3. கற்கா (பாலக்காடு), வேள்நாடு (திருவாங்கூர்), குட்டம் (கொச்சி), குடம் (தென் மலையாளம்), பூழி (வட மலையாளம்) ஆகிய பகுதிகளைக் கொண்ட சேர நாட்டை அடைந்து, அந்நாடுகளை வென்று தன் பேரரசில் சேர்த்துக் கொண்டார்.

4. இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர் என்பாரை (இடை நில அரசரை) வென்றார். இருங்கோவேள் முதலிய வேளிரைத் தனக்கு அடக்கியவர் ஆக்கினார்.

5. பின்னர் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்று, நாடோடியாகத் திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலை பெறச் செய்தார். 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினார்.

6. பிறகு திருக்கோவிலூரைத் தலை நகராகக் கொண்ட மலையமானை வென்றார்.

7. வேங்கடம் வரை வெற்றி கொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ்சேனையுடன் புறப்பட்டார். வடுகர் சிற்றரசர் பலரை வென்றார்.

8. பின்னர் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மீண்டார். அது சமயம் கரிகாலனை வரவேற்று மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம் கொடுத்தான். வச்சிர நாட்டு மன்னன் கொற்றப் பந்தர் அளித்தான். அவந்தி வேந்தன் தோரண வாயில் வழங்கினான். சோழ மன்னர்களின் வரலாற்றைக் கரிகாலன் இமயத்தில்  பொறித்ததாகக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடுகின்றது.

9. இமயத்தை வென்ற பின், பெரும் கப்பற்படையுடன் இலங்கை சென்று அதனை வென்று தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆள விட்டு மீண்டார். மீண்ட போது, 12,000 குடிகளைச் சோழ நாட்டிற்கு கொண்டு வந்தார் என் கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

குடகில் தோன்றிய காவிரியை, சோழ நாட்டின் காவேரிப் பூம்பட்டினம் வரை வழித்தடம் அமைத்துக் கொண்டு வந்தவர் காந்தமன் என்னும் சோழ மன்னன். இந்தக் காவேரியில் அவ்வப் போது வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். "செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற் கன்னியின்" வெள்ளப் பெருக்கால் உண்டாகும் தீமையை மாற்ற, காவிரி ஆற்றின் இரு மருங்கும்  கரை அமைக்க முடிவு செய்தார் கரிகாலன். கரிகாலனால் வெல்லப் பட்ட அரசர்களும், இலங்கையிலிருந்துக் கொண்டு வரப் பட்ட மக்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். ஆனால், திரிலோச்சன பல்லவன் என்னும் அரசன் மட்டும் இந்தப் பணிக்கு உடன் பணியவில்லை. கரிகாலன், திரிலோச்சன பல்லவனை அடக்கி காவேரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபட வைத்தார். 

கரிகாலன் சோழ வம்சத்தின் ஆணி வேர் மட்டுமில்லை. இந்தக் கரி காலனிடமிருந்து இரண்டு புதிய வம்சங்களும் தோன்றியுள்ளன. தெலுங்குச் சோழர்களின் குறிப்புகள், கரிகாலனின் மகன் மகிமானனுக்கு கரிகாலன், தசாவர்மன், தொண்டைமான் என்று மூன்று மகன்கள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. இதில் தசாவர்மனின் வழி வந்தவர்களே கரிகால சோழ வம்சம் எனப் படும் தெலுங்குச் சோழர்கள். அதனைப் போன்றே மூன்றாவது மகன் தொண்டைமான் என்பவரிடமிருந்து தொண்டைமான் வம்சம் தோன்றியுள்ளது.

கரிகாலன், பல்லவ வம்சத்தினரான த்ரிலோச்சன பல்லவனை வென்றார். பல்லவர்கள் தங்களை பரத்வாஜ் கோத்திரத்தினராக குறிப்பிடுகின்றனர். மேலும் பல்லவர்கள் அக்னி குலத்தவர்களாகக் கருதப் படுகின்றனர். கரிகால சோழனின் மகனுக்கும் நாக இளவரசிக்கும் பிறந்தவர் தொண்டைமான். தொண்டைமான் வழி வந்த அறந்தாங்கி தொண்டைமான்கள் சூரிய குலத்தவர்களாக் குறிப்பிடப் படுகின்றனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது பல்லவ வம்சம் வேறு, தொண்டைமான் வம்சம் வேறு என்று அறிய முடிகின்றது. மேலதிக ஆய்வுகள் இதனைத் தெளிவு படுத்தக் கூடும்.



#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 3

Thursday, 9 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #2

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பரின் மகன் அம்பிகாபதியும், சோழ இளவரசியும் காதலித்ததாகக் குற்றம் சுமத்தப் பட்டனர். இதனால் சோழ இளவரசி மரணமடைய, அம்பிகாபதிக்கு சோழ மன்னன்  மரண தண்டனை விதிக்க, சோழ மன்னனின் கோபத்துக்கு பயந்து கம்பர் நாட்டை விட்டு வெளியேறினார். "கவிச்சக்கரவர்த்தி" என எந்த சோழ மன்னரால் பாராட்ட பட்டாரோ, அதே சோழ மன்னனுக்கு பயந்து நாடோடியாய் வாழ்ந்து இறந்தார் கம்பர்.

சோழ வம்சாவளியைக் குறிப்பிடும் மெக்கென்ஸி சுவடிகளில் ஒன்று, கம்பரின் பாடல் ஒன்றை பின்வருமாருக் குறிப்பிடுகிறது.

"வில்லம்பு சொல்லம்பு மேதனியில் ரெண்டுண்டு
வில்லம்பில் சொல்லம்பே மேலம்பு - வில்லம்பு
பட்டுதடா யென்மார்பில் பார்வேந்தர் வுன்குலத்தெ
சுட்டுதடா யென்வாயில் சொல்"

கம்பரின் அந்த அறம்பட்டு அந்த சோழன் எனப்பட்டவன் அத்தோடே ஆண்டுப் போய்விட்டான். அதன் பிற்காலம், சோழ தேசத்துக்கு ராஜியாதிபத்தியம் பண்ணவன் சோழன் என்று பேர் வைத்துக் கொண்டார்கள் என்கிறது சுவடி.

கம்பரின் சாபமோ, சோழ இளவரசியின் சாபமோ அல்லது இயற்கையின் சுழற்சியோ, மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சி முடிவடைந்தது. பாண்டியர்களிடம் போரில் தோல்வி, மைய அரசின் பலவீனம், சிற்றரசர்களின் ஒத்துழைப்பின்மை, தொடர்ச்சியாக சோழ தேசத்தில் ஏற்பட்ட பஞ்சங்கள், மாறி வரும் அரசியல் சூழல் எனப் பல்வேறு காரணிகள் சோழர்களை பலவீனம் ஆக்கி, மூன்றாம் இராஜேந்திரனோடு நேரடிச் சோழர்களை அரசியலில் இருந்து ஒதுங்க வைத்திருக்க வேண்டும். பேரரசுக்கான நோக்கத்துடன், பாண்டியர், ஹொய்சாளர், காடவராயர் மற்றும் தெலுங்குச் சோழர் மிக்க வலிமையுடன் சோழர்களைச் சுற்றிப் பெரு முனைப்பு காட்ட, பல்வேறு காரணங்களால் பலவீனமான சோழர்கள், இந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வீழ்ச்சியடைய ஆரம்பித்த மைய அரசின் பலம், மூன்றாம் இராஜேந்திரன் காலத்தில் இறுதி மூச்சினை எட்டியது.

மூன்றாம் இராஜராஜன் மற்றும் மூன்றாம் இராஜேந்திரன் காலத்தில் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்னும் சோழரின் பட்டத்தைப் பயன்படுத்தாத சிற்றரசர்களே தமிழகத்தில் இல்லை எனும் சூழல் உருவாகியது. இது சோழர்களின் பலவீனத்தை உணர்த்துவதாகவும், ஒவ்வொரு சிற்றரசும் சோழருக்கு இணையாக தங்களை உயர்த்திக்கொள்ள முற்பட்டதையும் காட்டுகின்றது. வயதான வேங்கையின் மரணத்தை எதிர் நோக்கியிருப்பது போல, சோழர் ஆட்சியின் முடிவு எப்போது நிகழும் என ஒவ்வொரு அரசும் எதிர் நோக்கிக் காத்திருந்தன. கி.பி. 1279-க்குப் பிறகு நேரடிச் சோழர்களின் ஆட்சி பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாம் இராஜேந்திரருக்குப் பின்னும் நேரடிச் சோழர் ஆட்சி செய்திருந்தால், அவர்கள் ஒன்றிரண்டு தலைமுறைகள் கங்கை கொண்ட சோழ புரத்திலேயே தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் அதற்குரிய சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மூன்றாம் இராஜேந்திரருடன் நேரடிச் சோழர்களின் "ஆட்சி" முடிவடைந்ததாகக் கருதலாம்.

மூன்றாம் இராஜேந்திர சோழனின் கால கட்டத்திற்குப் பின்பு, தமிழகத்தில் குறிப்பிடப் படும் சோழர்கள், சோழ மகாராஜா எனப்படும் தெலுங்குச் சோழர்கள் மற்றும் சோழகோன் எனப்படும் அதிகாரிகளே. அவர்களைக் குறைந்த பட்சம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. காஞ்சிச் சோழர் - இவர்கள் தெலுங்குச் சோழர் வம்சத்தை சேர்ந்தவர்கள். சங்க காலக் கரிகால சோழனின் இளைய மகன் வழி வந்தவர்கள். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நெல்லூர்ச் சோழர் காஞ்சியையும் ஒரு தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.  கி. பி. 1316-ல் முதலாம் சடையவர்ம பராக்கிரம பாண்டியன், நெல்லூர்ச்  சோழரான வீர கண்ட கோபாலனைத் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து காகதீயர்களின் தளபதி முப்பிடி நாயக்கர் படையெடுத்து வந்து பாண்டியனை வென்று காஞ்சியைக் கைப்பற்றி, மான வீர சோழமஹாராஜாவை ஆளுநராக நியமித்தார். இந்த மான வீரா என்பவரும் பாண்டியரால் தோற்கடிக்கப் பட்ட வீரகண்ட கோபாலனும் ஒருவராகவே இருக்கலாம். இந்தக் கால கட்டத்துக்குப் பின் காஞ்சியை ஆட்சி செய்த தெலுங்குச் சோழர்கள், மானவீராவின் வம்சத்தினராக இருக்கக்கூடும். இவர்கள் காஞ்சி புரவராதிஸ்வரர், காஞ்சி ராஜு மற்றும் கரிகால ராஜா என அழைக்கப் பட்டவர்கள்.

2. பிற்கால உறையூர்ச் சோழர் - இவர்களும் தெலுங்குச் சோழர் வம்சத்தை சேர்ந்தவர்கள். சங்க காலக் கரிகால சோழனின் இளைய மகன் வழி வந்தவர்கள். நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சியின் மறைவுக்குப் பின்னர், உறையூரைத்  தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். மூன்றாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்பு, விஜயநகர அரசர்கள் காலத்தில் இவர்கள் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். விஜய நகர குமார கம்பண்ணனின் படையெடுப்பின் போது, உடன் வந்த சோழர்கள் இவர்களாக இருக்கக் கூடும். குமார கம்பண்ணனின் படை, கி.பி. 1371-ல் ஸ்ரீரங்கத்தை முகம்மதியரிடமிருந்துக் கைப்பற்றியது. குமார கம்பண்ணனின் படைத் தளபதி ஒருவர் ஸ்ரீரங்க ஸ்தாபனாச்சார்யா என்று அழைக்கப் படுகிறார். இந்தக் கால கட்டத்திலிருந்தோ அல்லது இரண்டாம் தேவ ராயன் கால கட்டத்திலிருந்தோ, தெலுங்குச் சோழர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கியிருக்க வேண்டும். இவர்கள், விஜயநகர அரசர்களின் தென் மண்டல அதிகாரிகளாக (தெக்ஷண புசம்)  கல்வெட்டுகளில் குறிக்கப் படுகின்றனர். ஸ்ரீரங்கம் கோயில் இவர்களின் கட்டுப் பாட்டில் இருந்துள்ளது.  உறையூர் புரவராதீஸ்வரர் என அழைக்கப் பட்டவர்கள்.

3. பிச்சாவரம் சோழகோனார் - இவர்கள் சோழகோன் வம்சத்தை சேர்ந்தவர்கள். இமய மலைக்கு தெற்கில் உள்ள கௌட (வங்காளம்) தேசத்தை சேர்ந்த ஐந்தாம் மனுவின் (மானவ? - கி.பி 625-626) மூத்த மகன் இரண்யவர்மன் வழி வந்தவர்கள். சோழர்கள் நலிவுற்றிருந்த கி.பி. 7-ம் நூற்றாண்டு கால கட்டத்தில், வியாக்கிர முனிவரால் சோழகோன் என்னும் பட்டம் அளிக்கப்பட்டு, சோழ தேசத்தின் பகுதியான சிதம்பரத்தின் அரசனாக, தில்லையில் இரண்ய வர்மன் முடி சூட்டப்பட்டதாக கோயிற்புராணம் மூலம் அறிய முடிகின்றது. கொற்றவன் குடி, பித்தர்புரம் (பிச்சாவரம்),  தீவுக்கோட்டை, கொள்ளிடம், அரசூர், தொழுதூர், புவனகிரி உள்ளிட்ட சிதம்பரம் பகுதியின் ஆட்சியாளர்களாக சோழகோன் வம்சம் இருந்துள்ளனர்.  பராந்தக சோழன் காலத்திலிருந்தே சோழகோன் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. நேரடிச்சோழர், வாணகோவரையர், காடவராயர், பாண்டியர், செஞ்சி நாயக்கர், அரியலூர் மழவராயர், உடையார் பாளையம் ஜமீன் ஆகியோரின் அதிகாரிகளாக சோழகோனார் இருந்துள்ளதைக் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவர்கள் அரசனின் உடன் கூட்டத்து அதிகாரிகளாக, அகம்படி முதலி, சாமந்த முதலி, வர முதலி போன்ற பதவிகளையும், பிள்ளை (கோயில் பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும் படி ஆணையிடும் அதிகாரி), பண்டாரத்தார் (கருவூல அதிகாரி)  முதலிய பதவிகளையும் வகித்துள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் காலம் முதல் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலம் முடிய சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தை சோழகோனார் கவனித்து வந்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி பார்ப்பதற்கு முன், நேரடிச் சோழர்கள், தெலுங்குச் சோழர்கள், சோழகோன் ஆகியோரின் பெயர்கள் அழைக்கப் படும் முறையைத் தெரிந்து கொள்வோம்.

நேரடிச் சோழர்கள் : உடையார் ஸ்ரீ கோப்பர/ராஜ கேசரி வன்மரான _______ சோழ தேவர்

தெலுங்குச் சோழர்கள் : சோழ மஹாராஜா / தேவ சோழ மஹாராஜா/ மஹாராஜா/ மஹாமண்டலேசுவரர்/ உறையூர் புரவராதீஸ்வரர் / கரிகாலகுலம் / கரிகால சோழராஜா

சோழகோன் : சோழகோன் / சோழகோனார் /சோழகன் /சோழகனார் / மஹாராஜா

நேரடிச் சோழர்கள் மட்டுமல்லாது, தெலுங்குச் சோழர்களும், சோழகோனாரும் சில இடங்களில் வெறும் "சோழன்" என்று குறிப்பிடப் படும்போது, மற்ற காரணிகளைக் கொண்டே அவர்கள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 2

Friday, 3 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #1

பாரதத்தின் தொன்மையான வரலாறு, திராவிடேஸ்வரரான மனுவிலிருந்து தொடங்குகிறது. ஊழிப் பெரு வெள்ளத்திலிருந்து மக்களையும் மற்ற உயிர்களையும் காப்பாற்றிய மனு, புதியப் பேரரசை இந்தியாவில் நிறுவினார். பாரதத்தின் இரண்டு முக்கிய அரச குலங்கள் இந்த மனுவிடமிருந்து தோன்றின. மனுவின் மகன் இக்ஷ்வாகுவிலிருந்து தோன்றியது சூரிய குலம். மனுவின் மகள் இளாவிலிருந்து (இளா = இளவரசி?)  தோன்றியது சந்திர குலம். 

இக்ஷ்வாகுவின் பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும், ஐலன்(இளா) பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும் உண்டாகி அவர்கள் ஆங்காங்கே இந்த பாரத வர்ஷத்தை ஆண்டனர் என்று  மஹாபாரதம் சபாபர்வத்தில் கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். பாரதத்தில் எந்த மன்னன் எந்தப் பகுதியை ஆண்டாலும் அவர்களது மூலம் இந்த இரண்டு பரம்பரைகளில் ஏதேனும் ஒன்றில்தான் ஆரம்பித்திருக்கும் என்கிறார் கிருஷ்ணன்.

சூரிய குலமும், சந்திர குலமும் தோன்றி கிட்டத்தட்ட 35 தலைமுறைகள் கழித்துப் பரசுராமர் காலகட்டத்தில் தோன்றியது அக்னி குலம். தொல்குடி சத்ரியர்களை அழிப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டப் பரசுராமர் மேற்கொண்ட தொடர்ச்சியானப் போரினால், பாரதத்தில் சத்ரிய அரசர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. இறுதியில், சூரியகுல சத்ரியரான இராமரை எதிர்க்கும் போதே, பரசுராமரின் சக்தி அழிந்தது. இந்தக் காலகட்டத்தில், அசுரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. அசுரர்களின் ஆட்சியில் அதர்மம் அதிகரித்தது. அசுரர்களை அழிப்பதற்காக, பொதியமாமுனி, சம்பு மாமுனி, வசிஷ்டமாமுனி ஆகியோர் செய்த வேள்வியில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அம்சமாகத் தோன்றியவர்கள் அக்னி குல ஷத்ரியர்கள். இவர்களைப் பரசுராமர் ஆசிர்வதித்ததாகக் கூறப்படுகிறது. 

பாரத வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்த காலகட்டம் இது. பரசுராமர் ஷேத்திரம் எனப்படும் கேரளத்தின் நிலப் பகுதி கடலிலிருந்து வெளிப்பட்டது, குடகிலிருந்து காவேரி வெளிப்பட்டது,  குடகிலிருந்து வெளிப்பட்ட காவேரிக்கு  பூம்புகார் வரை அகத்தியரின் துணையுடன் காந்தமன் என்னும் சோழ மன்னன் வழித்தடம் அமைத்தது போன்ற நிகழ்வுகள் இந்த கால கட்டத்தில் நிகழ்ந்தவையே. இவற்றை நோக்கும் போது, கடற்கோள் மற்றும் நில நடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவு இக்காலத்தில் ஏற்பட்டு, பாரதத்தின் நில அமைப்பில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் கருதலாம். அக்னி குல சத்ரியர்களான சேரர், இந்தக் கால கட்டத்திலிருந்தே கேரளத்தில் ஆட்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். சோமசுந்தரேசப் பெருமானுக்கும், தடாதகைப் பிராட்டியான மீனாட்சிக்கும் மைந்தனாகப் பிறந்த உக்கிரகுமார பாண்டியன் என்கிற கடல் வடிவலம்ப நின்ற பாண்டியன் வேலெறிந்து கடல் பொங்கியதை நிறுத்தியதாகக் கூறப்படும் கால கட்டமும் இதுவாகவே இருக்கக் கூடும். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளால் தொடங்கப் பட்டு அகத்தியனார், குன்றெறிந்த முருக வேள் உள்ளிட்டோர் உறுப்பினராய் இருந்த பாண்டியர்களின் முதலாம் தமிழ்ச் சங்கம் கடற்கோளால் அழிந்ததும் இந்தக் காலகட்டத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். 

இந்தியாவின் தொல்குடி அரசர்கள் பெரும்பாலும் சூரிய குலம், சந்திர குலம் மற்றும் அக்னி குலம் ஆகிய மூன்று குலத்தின் வழி வந்தவர்களே. தமிழகத்தின் தொல் குடி வேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூவேந்தர்களும் முறையே அக்னி, சூரிய மற்றும் சந்திர குலத்தவர்கள்.

மனுவின் மகன் இக்ஷ்வாகு முதலான சூரிய குலத்தில், மூத்த கிளையான இக்ஷவாகு வம்சம், பட்டத்து இளவரசர்கள் மூலம் தொடர (பெரும்பாலும் மூத்த மகன்), சக்தி வாய்ந்த இளைய மகன்களின் மூலம் அவ்வப்போது கிளை வம்சங்கள் தோன்றியுள்ளன. ரகு வம்சம், சிபி வம்சம்(செம்பியன்), சோழ வம்சம், கரிகாலன் வம்சம்(தெலுங்குச் சோழர்கள்) போன்றவை அவ்வாறே தோன்றியிருக்க வேண்டும். சோழன் என்னும் பெயர் வருவதற்கு முன்னால் சோழர்கள்  சிபி வம்சம்(செம்பியன்) என்றே அழைக்கப்பட்டுள்ளனர். சிபி வம்சத்தில் தோன்றிய சுராதிராசன் என்கிற சோழன் என்னும் அரசனைத் தொடர்ந்து சோழ வம்சத்தின் ஆட்சி தோன்றியது. சோழன் என்னும் மன்னனின் பெயரை ஒட்டியே சோழ வம்சம் என்னும் பெயர் வந்ததே அன்றி சோறு, சூழ்ந்தது போன்ற காரணப்பெயர்களை ஒட்டி வரவில்லை. மன்னரின் பெயரைக்கொண்டே வம்சங்கள் அழைக்கப்படுவது சூரிய குலத்தில் இருந்த வழக்கம். 

சங்ககாலத்தில், கரிகாலன் ஆட்சியில் பெரும் எழுச்சியைப் பெற்றது சோழப் பேரரசு. சங்ககாலத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படும் களப்பிரர் காலத்திலும் தாக்குப் பிடித்து, விஜயாலய சோழன் காலத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற்றது. முதலாம் இராஜராஜன் மற்றும் அவரது மகன்  இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் மேன்மையின் உச்சத்தைத் தொட்ட சோழப் பேரரசின் ஆட்சி, இடையில் நான்கு தலைமுறை சாளுக்கிய சோழர்களின் ஆட்சியையும் சேர்த்து மூன்றாம் இராஜேந்திரன் காலத்துடன் கி.பி. 1279-ல் முடி வடைந்தது. 

இந்த கால கட்டத்திற்குப் பின்பும் தமிழக வரலாற்றில் சோழர் என சில அரசர்கள் குறிக்கப் படுகின்றனர். அவர்களில் சிலர்,

1. கி.பி 13-ம் நூற்றாண்டின் இறுதியில், சிதம்பரம் கோயிற்புராணம் எழுதிய உமாபதி சிவாச்சாரியாரை ஆதரித்த வீர வர்ம சோழன்

2. கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரவி வர்மன் குலசேகரன் எனப்படும் கேரள மன்னனால் வெல்லப்பட்ட சோழன்

3. கி.பி 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குமார கம்பனின் படையெடுப்பின் போது குறிப்பிடப்படும் சோழன்
  
4. கி.பி 15-ம் நூற்றாண்டில், சோழ பீமன், சோழ நாராயணன் என அழைக்கப் பட்ட சோழன்

5. கி.பி 16-ம் நூற்றாண்டின்  முற்பகுதியில் கிருஷ்ண தேவராயரின் கால கட்டத்தில் மதுரையை வென்ற வீர சேகர சோழன்

6.  கி.பி 16-ம் நூற்றாண்டில் அச்சுதராயரின் கால கட்டத்தில்  சோழகுலத்திலகன்,  பொன்னம்பலநாத ஸ்ரீ பாத சேகரன் என்று அழைக்கப் பட்ட சோழன்

7. கி.பி 16-ம் நூற்றாண்டின் மத்தியில் சதாசிவராயர் காலத்தில், ஸ்ரீரங்கத்து நாராயண ஜீயரை அழைப்பித்து விசாரித்த சோழன்

8. கி.பி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் விட்டலேஸ்வர சந்தா மாலை இயற்றப் பட்ட விட்டலேஸ்வர சோழன்

9. கி.பி 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரெகுநாத நாயக்கர் போரிட்டு வென்ற பெரிச்சி சோழகன்

10. ரெகுநாத நாயக்கருக்கு ஆதரவாக பெரிச்சி சோழகனைக் கொன்ற செங்கிளி நாட்டு வேதாந்தி சோழன்

11. சோழகன், சோழகனார் எனஅழைக்கப்படும் சோழகோன்

12. கலி ராஜேந்திர சோழன்

13. பெரிய சோழனார்

14. சின்ன சோழனார்
  
15. கி.பி 17/18-ம் நூற்றாண்டில் செப்பேடு வெளியிட்ட கரிகால சோழ ராஜா 

இதே கால கட்டத்தில் குறிப்பிடப் படும் மற்ற சோழர்கள் 

இவர்கள் யார்? 

சோழன் என்று வருவதால் இவர்கள் அனைவரையும் விஜயாலய சோழன் மற்றும் இராஜராஜ சோழன் வழி வந்த நேரடிச் சோழ மரபினராகக் கருதலாமா? அல்லது இவர்கள் வேறு மரபினரா?

இவற்றிற்கான விடையைத் தேடுவோம். கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் இவர்களை ஓரளவு அடையாளம் காண முடிகின்றது. அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம். மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் முடிவடைந்த நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சிக்குப் பிந்தைய சோழர் பற்றிய ஆய்வில் இது ஒரு ஆரம்ப கட்ட முயற்சி. வரலாற்று ஆய்வாளர்கள் மேலதிக ஆய்வுகள் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ள களம் இது.


#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 1