Saturday, 10 August 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #10

விஜய கண்ட கோபாலன் 

சோழரா அல்லது பல்லவரா என்று வரலாற்று ஆய்வாளர்களையும் குழப்பக் கூடிய பெயர் விஜய கண்ட கோபாலன். ஒரே பெயருடன், சம காலத்தில், அருகாமைப் பகுதிகளை ஆட்சி செய்தவர்களாக அறியப் படுகிறார்கள் விஜய கண்ட கோபாலன் என்னும் பெயருடைய நெல்லூர்ச் சோழரும், தெலுங்குப் பல்லவரும். கிடைத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு இருவரையும் கீழ்க் கண்டவாறு பிரித்தறியலாம்.

தெலுங்குப் பல்லவர் விஜய கண்ட கோபாலன் 
  
இவர் தெலுங்குப் பல்லவரான வீர கண்ட கோபாலனின் தம்பி.
இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1285 வரையிலான 35 ஆண்டுகள்.
பரமவம்சோத்பவர். 
பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்.
மஹாமண்டலேஸ்வரராக இருந்தவர்.

நெல்லூர்ச் சோழர் விஜயகண்ட கோபாலன் 

இவர் நெல்லூர்ச் சோழரான முதலாம் திக்கனின் மகன். மூன்றாம் மனும சித்தாவின் சகோதரன்.
இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1291 வரையிலான 41 ஆண்டுகள்.
கரிகால சோழ வம்சம்.
காஸ்யப கோத்திரத்தை சேர்ந்தவர்.
சுதந்திர மன்னர். தன் ஆட்சியாண்டைக் குறிப்பிட்டு கல்வெட்டுகளை வெளியிட்டவர். 
மதுராந்தக பொத்தப்பிச் சோழன் என்றும், திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றும் அழைக்கப் பட்டவர். 

தெலுங்குப் பல்லவரான விஜய கண்ட கோபாலனின்  கல்வெட்டுகளாக, 20 கல்வெட்டுகளைத் தன்னுடைய நூலான "The History of Andhra Country 1000 AD - 1500 AD"-ல் குறிப்பிடுகிறார் திருமதி யசோதா தேவி அவர்கள்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 1-ல் 8 கல்வெட்டுக்களும், தொகுதி 2-ல் 26 கல்வெட்டுக்களும் விஜய கண்ட கோபாலனின் கல்வெட்டுக்கள். இவை பெரும்பாலும் நெல்லூர்ச் சோழரான விஜய கண்ட கோபாலனுடையதாகவே இருக்க வேண்டும்.

நெல்லூர்ச் சோழ வம்சத்தினர், ஒரே காலகட்டத்தில் இரண்டு அல்லது மூன்று அரசர்கள் நெல்லூர், காஞ்சிபுரம், திருக்காளத்தி உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். முதலாம் திக்கனின் ஆட்சிக்குப் பின்னர் அவரது மகன்கள் மனும சித்தா, விஜயகண்ட கோபாலன் மற்றும் அவரது மருமகன் அல்லுந்திக்கா உள்ளிட்ட மூவர் ஆட்சி செய்துள்ளனர். முதலாம் திக்கனின் மறைவுக்குப் பின்னர், நெல்லூரை அவரது தாயாதிகள் கைப்பற்றினர். நெல்லூரைத் தனது தாயாதிகளிடமிருந்து மீட்க, காகதீயர்களின் உதவியை நாடினார் திக்கனின் மகன் மனும சித்தா. காகதீயர்களின் துணையுடன், மனும சித்தாவும் அவரது சகோதரன் விஜய கண்ட கோபாலனும் மிகக் கடுமையாகப் போர் புரிந்து நெல்லூரை மீட்டனர். இந்த நெல்லூர்ப் போர், மகா பாரதப் போருக்கு இணையாகப் பேசப் பட்டுள்ளது. 

இந்த வெற்றிக்குப் பின்னர், நெல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு மனும சித்தா ஆட்சி புரிந்துள்ளார். திக்காவின் மருமகன் அல்லுந்திக்கா, காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக யசோதா தேவி அவர்கள் குறிப்பிடுகின்றார். அல்லுந்திக்காவின் ஒரு சில கல்வெட்டுக்களே காஞ்சியில் கிடைக்கின்றன. மாறாக, விஜயகண்ட கோபாலனின் கல்வெட்டுகள் அவரது 2-ம் ஆட்சியாண்டு முதல் 41-ம் ஆட்சியாண்டு வரையில் காஞ்சியில் கிடைக்கின்றன. கல்வெட்டுகளின் செறிவை வைத்துப் பார்க்கும் போது, விஜயகண்ட கோபாலனே காஞ்சியில் ஆட்சி செய்திருப்பதை அறிய முடிகின்றது. அல்லுந்திக்கா, நெல்லூருக்கும் காஞ்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆட்சி செய்திருக்க வேண்டும். குறிப்பாக திருக்காளத்தியைத் தலை நகரகாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கலாம். 

காஞ்சியை ஆட்சி செய்த விஜயகண்ட கோபாலன், நெல்லூர்ச் சோழர் என்பதை வலுப்படுத்தும் காரணிகள்:

1. நெல்லூர்ச் சோழர் விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்காலம் கி.பி. 1250 - லிருந்து 1291 வரையிலான 41 ஆண்டுகள். விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்கு முன்னர், காஞ்சிபுரம் அவரது தந்தை சோழ ஸ்தாபனாச்சார்யா எனப்படும் முதலாம் திக்கனின் கட்டுப்பாட்டில் இருந்தது.

2. விஜய கண்ட கோபாலனின் ஆட்சிக்குப் பின்னர் கி.பி. 1291 முதல் அவரது மகன் வீர கண்ட கோபாலனின் ஆட்சியில் காஞ்சிபுரம் இருந்தது.

3. வீர ராஜேந்திர சோழரின் (மூன்றாம் இராஜேந்திரன்) 18-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று (கி.பி. 1264), கண்ட கோபால திருக்காளத்தி தேவரின் (முதலாம் திக்கன்) மகன் விஜய கண்ட கோபாலன் என்பவரைக் குறிப்பிடுகிறது.

4. உறையூர் புரவராதீஸ்வரர் என தெலுங்குச் சோழர்கள் தங்களை அழைத்துக் கொண்டது போல, காஞ்சி புரவராதீஸ்வரர் எனத் தெலுங்குப் பல்லவர் தங்களை அழைத்துக் கொண்டுள்ளனர். இது அவர்களது தொன்மையையும், நேரடி வம்சத்துடன் அவர்களுக்குள்ள தொடர்பைக் காட்டுவதாகவே அமைந்துள்ளதேத் தவிர அவர்கள் அந்த கால கட்டத்தில் காஞ்சியை ஆட்சி செய்தார்கள் என்னும் பொருளில் வரவில்லை. 

5. மதுராந்தக பொத்தப்பி சோழன் என்னும் பெயரை நெல்லூர்ச் சோழர் இரண்டாவது குடிப் பெயர் போன்றே பயன்படுத்தியுள்ளனர். விஜய கண்ட கோபாலனும் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் என்று குறிப்பிடப் பட்டுள்ளார்.

6. மூன்றாம் மனும சித்தா, தனது எதிரிகளில் முதன்மையானவரான விஜயா (தெலுங்குப் பல்லவர் விஜய கண்ட கோபாலன்) என்னும் அரசனை வென்று அவரது புகழை மங்கச் செய்ததாக திக்கண்ணா குறிப்பிடுகிறார்.   

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, மகாமண்டலேஸ்வரரான தெலுங்குப் பல்லவர் விஜயகண்ட கோபாலன், வலிமை வாய்ந்த நெல்லூர்ச் சோழர் மனும சித்தா, விஜய கண்ட கோபாலன்,அல்லுந்திக்கா ஆகிய மூவர் கூட்டணியையும், அவர்களுக்குத் துணையான காகதீயர்களையும் வென்று காஞ்சியை நெல்லூர்ச் சோழரிடமிருந்து கைப்பற்றி ஆட்சி செய்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே நெல்லூர்ச் சோழரான மதுராந்தக பொத்தப்பிச் சோழன் விஜய கண்ட கோபாலனே  கி.பி. 1250-இலிருந்து கி.பி. 1291 வரையிலான 41 ஆண்டுகள் காஞ்சியை ஆட்சி செய்துள்ளார் என்னும் முடிவுக்கு வரலாம்.

References   

1. The History of Andhra country 1000 AD to 1500 AD - Yashoda Devi
2. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 1
3. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 2
4. Annual Report on Epigraphy 1915-1920 - P 151
5. The Pandya Kingdom - K.A. Neelakanda Sasthiri P 168-169
6. A Collection of the Inscription on copper plates and stones in the Nellore District P 231
#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 10
#விஜயகண்டகோபாலன் 
#வீரகண்டகோபாலன் 
#Vijaygandagopalan 
#Viragandagopalan  

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #9

சோழ ராச்சியப் பிரதிஷ்ட்டாச்சார்யா

மூன்றாம் இராஜராஜ சோழன் பதவியேற்ற காலகட்டத்தில் சோழநாடு முற்றிலும் எதிரிகளால் சூழப் பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் சோழருக்கு அடங்கிய சிற்றரசர்களில்  பெரும்பாலானோர் சோழருக்கு எதிரியாக மாறியிருந்தனர். மூன்றாம் குலோத்துங்கனின் மறைவுக்குப் பின்னர் கி.பி. 1219-ல் பாண்டிய மன்னன் மாறவர்மன்  சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். மூன்றாம் இராஜராஜனை வென்ற சுந்தர பாண்டியன்,  சோழர்களின் ஆயிரத்தளி அரண்மனையில், சோழவளவன் அபிடேக மண்டபத்தில் வீராபிடேகம் செய்து கொண்டான். சோழனின் நிலையறிந்து, சோழனுக்கு உதவிட போசள மன்னன் வீர வல்லாளன் முன் வந்தான். பெரும்படை ஒன்றைத் திரட்டிய வீர வல்லாளன், அதன் செலவிற்காகக் கருணை வரி என்னும் புதிய வரியையும் தன் நாட்டில் விதிதான். தன் மகன் நரசிம்மனைப் பெரும் படையுடன் சோழருக்கு உதவியாக அனுப்பினான். போசளர்கள் தலையீட்டால் பாண்டியன் மூன்றாம் இராஜராஜனிடம் சோழ நாட்டைத் திருப்பி அளித்தான். இந்தப் படையெடுப்பின் போது, போசளப் படை விடுகாதழகிய பெருமாள் என்னும் அதியமானையும், வாணகோவரையனையும், காடவராயனையும் தோற்கடித்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு வீர வல்லாளன், ''சோழ ராச்சியப்  பிரதிஷ்ட்டாச்சார்யன்'' மற்றும் ''பாண்டிய கஜகேசரி'' ஆகிய பட்டங்களையும், நரசிம்மன் ''சோழகுல ஏக ரட்சகன்'' என்னும் பட்டத்தையும் பூண்டனர். 

அதன் பின்னர், கி.பி. 1231-ல் மூன்றாம் இராஜராஜன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். முதலில் சோழர்களின் தூசிப் படையும் பின்னர் பேரணியும் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தன. பாண்டியர்களின் படை சோழரின் தூசிப் படையையும், பேரணியையும் வென்றது. கடுமையாக நடை பெற்ற போரில் சோழர்களுக்கு யானை, குதிரை, காலாட் படைகளில் பெருஞ்சேதம் ஏற்பட்டது. சோழ நாட்டில் இரத்த ஆறு ஓடியது. வெற்றி பெற்ற சுந்தர பாண்டியன், சோழர் தலை நகரான முடி கொண்ட சோழ புரத்தில் விஜயாபிஷேகம் செய்து கொண்டான். ஆனால், சுந்தர பாண்டியனின் இந்த வெற்றி தற்காலிக வெற்றியாக சில மாதங்களே நீடித்தது.

தோல்வியுற்ற இராஜராஜன் துவார சமுத்திரம் நோக்கி செல்வதை அறிந்த காடவராயன் முதலாம் கோப்பெருஞ்சிங்கன், சோழனை சிறை பிடித்து தன்னுடைய தலைநகர் சேந்த மங்கலத்தில் சிறை வைத்தான். ''காடவராயனிடம் காட்டுப் படையும், மிலேச்சப் படையும் இருந்ததால் அவன் வல்லமை பெற்றிருந்தான். அவனுடைய பல தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் கொடியவனாக இருந்த இந்த எதிரி, தன் தலைநகரான ஜெயந்த மங்கலத்தில் இராஜராஜனை சிறை வைத்தான்'' என்று கத்யகர்ணாமிர்தம் என்னும் கன்னட நூல் குறிப்பிடுகிறது. இந்த செய்தியைக் கேள்வியுற்ற போசள மன்னன் வீரநரசிம்மன், மீண்டும் சோழநாடு சென்று இராஜராஜனை அரியணையில் அமர்த்தி ''சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சாரியன்'' என்னும் பட்டத்தைப் பெற்றுத் திரும்பும் வரை தன் வெற்றி முரசு ஒலிக்காது என்று வஞ்சினம் கூறித் தமிழகம் வந்தான். பாண்டியர்களின் நண்பனான மகத நாட்டு வாணகோவரையனை வென்ற நரசிம்மன், ஸ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள பாச்சூரில் ஒரு படையுடன் நிலை கொண்டு, தன் தளபதிகள் அப்பண்ணா மற்றும் சமுத்திர கொப்பையனைக் கோப்பெருஞ்சிங்கனின் நாட்டுக்கு அனுப்பினான். போசளப் படை கோப்பெருஞ்சிங்கன் இருந்த எள்ளேரியையும், கல்லியூர் மூலையையும் (வீராணம் ஏரிக்கரையில் உள்ள கலியமலை), கோப்பெருஞ்சிங்கனின் படைமுதலி  சோழகோன் இருந்த தொழுதகையூரையும் கைப்பற்றியது. கோப்பெருஞ்சிங்கனின் படை முதலிகள் 4 பேரையும் கொன்று கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு கோப்பெருஞ்சிங்கனின் தலைநகர் சேந்தமங்கலம் அடைந்து இராஜராஜனை விடுவித்தது. 

போசளப் படை இராஜராஜனை விடுவித்த அதே சமயத்தில், நரசிம்மன் சுந்தரபாண்டியனுடன் மகேந்திரமங்கலத்தில் போரில் ஈடுபட்டிருந்தான். சுந்தர பாண்டியன் போரில் தோல்வியுற்றான்.நரசிம்மன் இராமேஸ்வரம் வரை சென்று மீண்டான். சுந்தர பாண்டியன் நரசிம்மனுக்கு கப்பம் காட்டுவதாக ஒத்துக் கொண்டான் என்று ஹொய்சாளர் கல்வெட்டு கூறுகிறது.

இதன் பின்னர் சோழப்பேரரசு, கி.பி. 1238-க்கும் 1250-க்கும் இடையே சில ஆண்டுகள், தங்கள் எதிரிகளையும் சிற்றரசர்களையும் பொருட்படுத்தாமல் மீண்டும் தலை தூக்கிற்று. நெல்லூரை ஆண்ட தெலுங்குச் சோழ மன்னர்களின் ஒத்துழைப்புதான் இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது என்று நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார்.  

Refernces 

சோழர் வரலாறு - இராசமாணிக்கனார் 
பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் 
சோழர்கள் - K A நீலகண்ட சாஸ்திரிகள்   
தமிழ்நாட்டு வரலாறு - சோழப் பெரு வேந்தர் காலம் - முதல் தொகுதி

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 9
#சோழராச்சியப்பிரதிஷ்ட்டாச்சார்யா
#பாண்டியகஜகேசரி
#சோழகுலஏகரட்சகன்
#சோழமண்டலப்பிரதிஷ்ட்டாச்சாரியன்

Saturday, 20 July 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #8

சோழஸ்தாபனாச்சார்யா 

தெலுங்குச் சோழர்களில் மிகச்சிறந்த அரசன் முதலாம் திக்கன் என்கிற திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா. இவர் இரண்டாம் மனும சித்தாவின் மகன். இவர் தம்மு சித்தாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர். இவருடைய கல்வெட்டுகள் காஞ்சி, தென் ஆற்காடு, மணிமங்கலம் ஆகிய இடங்கள் வரை கிடைக்கின்றன. இதைக்கொண்டு நெல்லூர், தெற்கில் செங்கல்பட்டு, வடக்கில் கடப்பா வரை இவரது ஆட்சி பரந்து விரிந்திருந்ததை அறியலாம். சம்புவராயர், சேதியராயர், காடவராயர்களை வென்று தன் பேரரசை ஒப்புக்கொள்ளச் செய்தவர்.  இவ்வெற்றியால் கோப்பெருஞ் சிங்கன் சூழ்ச்சிகளை ஒடுக்கினவர். இவர் தொண்டை மண்டலத்தில் பெரும் பகுதியைச் சோழப் பேரரசிற்கு அடங்கியே ஆண்டு வந்தார்.  இருப்பினும் இவரது ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் சோழர்களின் பலம் முற்றிலும் குன்றவில்லையாதலால், சோழர்களின் சிற்றரசாகவே இவர் இருந்தார். மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் கண்டகோபாலன் என்ற பெயரில் இவரும் இவரது மனைவிகளும் இடம்பெறுகின்றனர். இவர் கி.பி. 1209-லிருந்து கி.பி. 1248 வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலம் ஆட்சிசெய்தார். திக்கன், கர்நாடக சோமேஸ்வரனையும், சம்புராஜுவையும் மற்ற சோழகுல எதிரிகளையும் தோற்கடித்து, நேரடிச் சோழரின் ஆட்சியை நிலை நிறுத்தி ‘சோழஸ்தாபனாச்சார்யா’ என்ற பட்டம் பெற்றவர்.

''மதுராந்தப் பொத்தப்பிச் சோழ மனுமசித்தரசன் திருக்காளத்தி தேவன் எனும் கண்டகோபாலன்'' என்று காஞ்சிபுரம் கல்வெட்டுகளில் திக்கன் குறிப்பிடப் படுகிறார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுத் தொகுதிகள் 2-ல் மட்டும், திக்கனின் கல்வெட்டுகள் 30 உள்ளன. 

வேலணாடு சோழர் அழிப்பு 

திக்கண்ண சோமயாஜி எனும் தெலுங்கு கவிஞர், முதலாம் திக்கனின் மகன் மனுமசித்தியின் அரசவைக் கவியும் அமைச்சருமாவார். பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதிய மூவருள் இரண்டாமவர். மகாபாரதம் எழுதும் முன்னர் சோமவேள்வியை நடத்தியவராதலால் சோமயாஜி என அழைக்கப்பட்டார். திக்கண்ண சோமயாஜி எழுதிய ''நிர்வாசனோத்தவ ராமாயணமு'' என்ற நூலின் முன்னுரையில், திக்கனுடைய சாதனையைப் பற்றி விரிவாகவும், நடுநிலையிலும் எழுதிப் பல விபரங்களைத் தந்திருக்கிறார்.  கி.பி. 1210-ல் திக்கா வேலணாண்டு சோழருக்கு எதிரானப் போரை நடத்தினார். இந்தப் போரில் வேலணாண்டு சோழரான பிரிதிவீஸ்வரனின் தலையைக் கொய்து  திக்கன்  பந்து விளையாடியதாக திக்கணா குறிப்பிடுகிறார். இது திக்கனின் காஞ்சிபுரம் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகிறது. இந்த பிரிதிவீஸ்வரனுடன் வேலணாடு சோழ வம்சம் முதலாம் திக்கனின் கையால் முடிவுக்கு வந்தது. 

சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சார்யாவைக் கொன்ற சோழஸ்தாபனாச்சார்யா 

ஹொய்சாள மன்னன் இரண்டாம் நரசிம்மன், மூன்றாம் இராஜராஜனை வென்ற பாண்டியனையும், சோழனை சிறை பிடித்த கோப்பெருஞ்சிங்கனையும் வென்று இராஜராஜனை மீண்டும் சோழ அரியணையில் அமர்த்தி ''சோழ மண்டல பிரதிஷ்ட்டாச்சார்யா'' என்னும் பட்டம் பெற்றவர். இந்த நரசிம்மனுக்கும், திக்கனுக்கும் இடையே அடிக்கடி போர் நிகழ்ந்துள்ளது. கி.பி. 1239-ல் நடைபெற்ற இறுதிப் போரில், திக்கன் நரசிம்மனைக் கொன்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கி.பி. 1240-ல் நரசிம்மனின் மகன் வீர சோமேஸ்வரன் திக்கனுக்கு எதிராகப் படையெடுத்ததை ஹொய்சாளர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆயினும் இந்தப் போரிலும் திக்கனே வெற்றி பெற்று தனது வலிமையை நிலை நாட்டினார்.   

பாண்டியருக்கு எதிரான வெற்றி 

திக்கனின் கால கட்டத்தில் பாண்டியப் பேரரசு, தென்னிந்தியாவின் மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக விளங்கியது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி 1216-1238) மற்றும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி 1238-1253) ஆகியோர் திக்கனின் சம காலத்திய பாண்டிய மன்னர்கள். மூன்றாம் இராஜராஜ சோழன், பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் தோற்கடிக்கப்பட்ட இரு நிகழ்வுகளிலும் ஹொய்சாள மன்னர்கள் வீர வல்லாளன் மற்றும் அவரது மகன் நரசிம்மன் சோழருக்கு உறு துணையாயிருந்து சோழ நாட்டை மீட்டனர். ஆயினும் நரசிம்மனின் மகன் வீர சோமேஸ்வரன் பாண்டியருக்கு ஆதரவான நிலையெடுத்து ''பாண்டிய குல சம்ரக்ஷகன்'' என்னும் பெயர் பெற்றார். பாண்டியரிடம் கடை பிடிக்க வேண்டிய கொள்கை வேறு பட்டதால் சோழருக்கும் ஹொய்சாளருக்கும் இடையே போர் மூண்டது. முதலாம் திக்கன் இப்போரில் சோழனை ஆதரித்தார். சோழருக்கு ஆதரவாக இருந்த ஹொய்சாளர், பாண்டியர் பக்கம் சாய்ந்தபோதும், சோழர்களுக்கு உறுதுணையாக திக்கன் நின்றுள்ளார். இராஜேந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தவுடன்  திக்கன் அவரை ஆதரித்ததாகவும், சோமேஸ்வரனைப் போரில் வென்று, சோழ அரசனை மீண்டும் அரசனாக்கி ''சோழ ஸ்தாபனாச்சாரியான்'' என்னும் பெயர் பெற்றதாகவும் திக்கணா குறிப்பிடுகிறார். தெலுங்கில் மொழி பெயர்க்கப் பட்ட தசகுமார சரிதம் என்னும் நூலில் தெலுங்குக் கவி கேதனா, திக்கன் பாண்டியர்களிடமிருந்து கப்பம் வசூலித்ததையும் (1-16) சொல்லுகிறார்.  

நாணயம் 

முதலாம் திக்கன், கண்ட கோபாலன் பழமாடை, கண்ட கோபாலன் புதுமாடை, கண்ட கோபாலன் வாசிபடா புதுமாடை என்ற பெயரில் நாணயங்களை வெளியிட்டார். திக்கன் தீவிர வைணவப் பற்று மிக்கவர் என்பதால், இவர் வெளியிட்டக் காசிலும் சங்கு இடம் பெற்றுள்ளது. திக்கன் வெளியிட்ட கண்டகோபலன் மாடை காசின் முன் பக்கத்தில் மேலே ''கண்ட'' என்று சோழர் கால எழுத்திலும், வேணு கோபாலன் உருவம் தலை கீழாகவும், இவ்வுருவத்துக்கு இரு புறங்களிலும் 'ஸ்ரீ' என்ற தெலுங்கு எழுத்தும் பொறிக்கப் பட்டுள்ளன. 'கண்ட' என்ற வாசகத்தையும், வேணு கோபாலனது உருவத்தையும் இணைத்துப் பார்த்தோமானால் கண்டகோபாலன் என்ற பெயர் தெளிவாகும்.

படம்: நெல்லூர்ச் சோழர் வெளியிட்ட புஜபலன் மாடை இணையத்திலிருந்து  

Refernces 
சோழர்கள் - K A நீலகண்ட சாஸ்திரிகள் 
சோழர் வரலாறு - இராசமாணிக்கனார் 
பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் 
The History of Andhra country 1000 AD to 1500
தமிழ்நாட்டு வரலாறு - சோழப் பெரு வேந்தர் காலம் - முதல் தொகுதி 

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 8   
#காஞ்சிச்சோழர்  
#நெல்லூர்ச்சோழர்

Sunday, 16 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #7

நெல்லூர்ச் சோழரின் ஆட்சியில் காஞ்சி

நல்லசித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1187-1214 

நெல்லூர்ச் சோழரின் தொடர்ச்சியான வரலாறு, முதலாம் மனும சித்தா மூலம் கி.பி. 1175-ல் ஆரம்பிக்கின்றது. இவருக்குப் பின், இவரது தம்பி பெத்தாவின் மூன்று மகன்களான தயபீமா, நல்லசித்தா மற்றும் எறசித்தா ஆகியோர் ஆட்சியைத் தொடர்ந்தனர். இதில்  தயபீமா மற்றும் நல்லசித்தா ஆகியோர் இணைந்து ஆட்சி செய்தனர். இவர்களே காஞ்சியை நேரடிச் சோழர்களிடமிருந்து  வென்றவர்கள். இவர்களின் கால கட்டத்திலிருந்தே நெல்லூர்ச் சோழர்களின் ஆட்சி காஞ்சியில் ஆரம்பித்தது. நல்லசித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ சோழ மஹாராஜா, காஞ்சியில் "கப்பம் கொண்ண" செய்தியை நெல்லூர்க் கல்வெட்டுகள் (G-1, K.V -13) குறிப்பிடுகின்றன. நல்லசித்தாவின் பட்டங்கள், அவன் சுதந்திரமாக ஆட்சி செய்ததற்கு அடையாளமாக விளங்குகின்றன. இரண்டு காலகட்டங்களில் நெல்லூர்ச் சோழர் சுதந்திரமாக செயல் பட்டிருப்பர் என நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார். அவை: 

1) கி.பி. 1183-92, மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த காலம். 

2) கி.பி. 1214 முதல், மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின் இறுதிக்காலம் வரை- இது அவன் மீண்டும் பாண்டியருடன் போரிட்ட காலப்பகுதி.


எற சித்தா என்கிற புஜபல வீர  எற சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1195-1217

தயபீமா மற்றும் நல்லசித்தாவைத் தொடர்ந்து அவர்களின் தம்பி  றசித்தா கி.பி. 1195-லிருந்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். உறையூர் புரவராதீஸ்வரர், காஞ்சி புரவராதீஸ்வரர், காஞ்சிம் கப்பமு தின்னா  என்று அழைக்கப்பட்டவர்.   றசித்தாவின் மூன்று மகன்களான மனுமசித்தா, பெத்தா, தம்முசித்தா ஆகியோர் இவரது மூன்று கண்களைப் போல் இருந்தனர் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் இராஜராஜனுக்கு அடங்கிய சிற்றரசராக இவர் ஆட்சி செய்துள்ளார். 

ராஜேந்திர மனும சித்தா (II) என்கிற வீர நல்ல சித்தர தேவ சோழ மஹாராஜா - (கி.பி 1199-1220)   

இவர்  ற சித்தாவின் முதல் மகன். மூன்றாம் குலோத்துங்கனின் 23-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இவரை நல்லசித்தரசன் என்று குறிப்பிடுகிறது. இவர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு அடங்கிய சிற்றரசராக ஆரம்ப கால கட்டங்களில் ஆட்சி செய்தாலும், இவரது ஆட்சியின் இறுதி கால கல்வெட்டுகள் குலோத்துங்கனைக் குறிப்பிடவில்லை. கி.பி 1214-ம் ஆண்டு கல்வெட்டொன்று, இவரை காஞ்சிம்கப்ப கொண்ணாட்டி என்று குறிப்பிடுகின்றன. இந்தக் காலகட்டத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்கனின் இறுதி ஆட்சிக் காலம் வரை இவர் தன்னாட்சி செய்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது மூன்றாம் குலோத்துங்கன் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருந்த வேளையில், காஞ்சியை மனுமசித்தா தனியாட்சி புரிந்துள்ளார். இதற்கு முன் இவரது பெரிய தந்தை நல்ல சித்தா, கி.பி. 1183-லிருந்து 1192 வரை தன்னாட்சி செய்து, பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் அடக்கப் பட்டார். அதனைப் போன்றே மூன்றாம் இராஜராஜன் தலையிட்டு அடக்கும் வரை மனும சித்தா (II) தன்னாட்சி புரிந்துள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளைத் தவிர, மூன்றாம் இராஜேந்திரரின் இறுதி ஆட்சிக்காலம் வரை, நெல்லூர்ச் சோழர்கள் நேரடிச் சோழர்களுக்கு உறு துணையாய் இருந்துள்ளனர்.

தம்முசித்தா - கி.பி 1205-1209   

இவர் ராஜேந்திர மனும சித்தா (II) வின் தம்பி. இவர் 5 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்துள்ளார். கி.பி. 1205 -ஆம் ஆண்டைச் சேர்ந்த இவரது ஆரம்ப காலக் கல்வெட்டு, சின்ன காஞ்சிபுரத்திலிருந்து கிடைக்கின்றது. கி.பி. 1208 -ஆம் ஆண்டில், மூன்றாம் குலோத்துங்கனின் வாரங்கல் படையெடுப்பின் போது, இவரும், ஏற சித்தா மற்றும் மனும சித்தா ஆகியோர் குலோத்துங்கன் சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.


#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 7   
#காஞ்சிச்சோழர்  

Sunday, 9 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #6


காஞ்சிச் சோழர்  

மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் முடிவடைந்த நேரடிச் சோழர்களின் ஆட்சிக்குப் பின்பு, கி.பி. 14-15ம் நூற்றாண்டில்,  உறையூர்ச் சோழரின் ஆட்சித் தொடங்கும் வரையில், தமிழகத்தில் சோழர் என்றால், அது காஞ்சிச் சோழர்களைக் குறிப்பதாகவே இருந்தது. கி.பி. 1312-ல், காஞ்சிச் சோழரை வென்ற கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மன், தன்னை சோழ நாட்டுப் பேரரசன் என்றும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றும் கூறிக் கொள்கிறான். 

கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நெல்லூர்ச் சோழர் காஞ்சியையும் ஒரு தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மன் காஞ்சிச் சோழரை வென்றதைப் போல, பாண்டியர்களும் அதே கால கட்டத்தில்  காஞ்சிச்சோழரான வீர கண்ட கோபாலனை வென்றதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து காகதீயர்களின் தளபதி முப்பிடி நாயக்கர் படையெடுத்து வந்து பாஸ்கர ரவிவர்மனையும், பாண்டியரையும் வென்று காஞ்சியைக் கைப்பற்றி, மான வீர சோழமஹாராஜாவை ஆட்சியாளராக நியமித்தார். இதற்கு முன்னரும் பாண்டியர், நெல்லூர்ச் சோழரை வென்று காஞ்சியைக் கைப்பற்றிய போது, காகதீயர்கள் நெல்லூர்ச் சோழருக்குத் துணையாக வந்து காஞ்சியை மீட்டு மீண்டும் நெல்லூர்ச் சோழரை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இதனை வைத்துப் பார்க்கும் போது, பாண்டியரால் தோற்கடிக்கப் பட்ட வீரகண்ட கோபாலனும், காகதீயர்களால் காஞ்சியின் ஆட்சியாளராக நியமிக்கப் பட்ட மானவீராவும் ஒருவராகவே இருக்கலாம். 

தெலுங்குச் சோழர்களில், மிகவும் வலிமை வாய்ந்த வம்சம் நெல்லூர்ச் சோழ வம்சம். இவர்களின் ஆட்சி, கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகள் (கி.பி  1100-1350) நீடித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஆரம்ப கால கட்டங்களில் நேரடிச் சோழர்களுக்கும், பின்னர் காகதீயர்களுக்கும் அடங்கிய சிற்றரசர்களாக இருந்துள்ளனர். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தனியாட்சியும் புரிந்துள்ளனர். கி.பி. 13-ம் நூற்றாண்டு காலகட்டத்தில், தென்னிந்தியாவில் மிக முக்கிய சக்தியாக இவர்கள் இருந்துள்ளனர். 

நெல்லூர்ச் சோழ வம்சம் சங்ககால கரிகால சோழனின் வழி வந்தவர்கள். இந்த வம்சத்தில் முதலில் குறிப்பிடத் தக்கவர் மதுராந்தக பொத்தப்பிச் சோழன். இவர் மதுரையை வென்றதாகவும், பொத்தப்பி என்ற ஊரை உருவாக்கியதாகவும், இந்த காரணங்களால் இவர் இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து குறிப்பிடத்தக்க மற்றோர் அரசன் விச்சயன்  எனப்படும் தெலுங்கு வித்யன். இவர் உஜ்ஜபுரி என்னுமிடத்தில் உச்சியில் கருடன் வைத்த வெற்றித் தூணை நிறுவியுள்ளார். எதிரிகளுக்கு எமன் போன்றவரான வித்யன், ஒரு போரில் பதின்மூன்று படைத் தளபதிகளைக் கொன்று, "பதுமூவரகண்டா" என்னும் பட்டம் பெற்றவர்.

நெல்லூர்ச் சோழர் பட்டியல் :

மதுராந்தக பொத்தப்பிச் சோழன்

விச்சயன்  எனப்படும் தெலுங்கு வித்யன்
முதலாம் மனும சித்தா - கி.பி 1175-1192

மனும சித்தாவின் தம்பி பெத்தாவின் மகன்கள் தயபீமா மற்றும் புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜா - கி.பி 1187-1214 -இவர்களே காஞ்சியை நேரடிச் சோழர்களிடமிருந்து  வென்றவர்கள். இவர்களின் கால கட்டத்திலிருந்தே நெல்லூர்ச் சோழர்களின் ஆட்சி காஞ்சியில் ஆரம்பித்தது.

பெத்தாவின் இளைய மகன் ஏற சித்தன்ன தேவ சோழ மஹாராஜா - கி.பி 1195-1217

ஏற சித்தன்ன தேவாவின் மகன் இரண்டாம் மனும சித்தா என்கிற வீர நல்ல சித்தர தேவ சோழ மஹாராஜா - கி.பி 1189-1210
  
இரண்டாம் மனும சித்தா வின் தம்பி தம்முசித்தா - கி.பி 1205-1209

இரண்டாம் மனும சித்தா வின் மகன் முதலாம் திக்கா (எ)  திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1209-1248

முதலாம் திக்காவின் மருமகன் அல்லு திக்கா  - கி.பி. 1248-1272 - காஞ்சியை தனியாக ஆட்சி செய்தவர்

முதலாம் திக்காவின் மகன்  மூன்றாம் மனும சித்தா (எ) புஜபல வீர மனும சித்தய்ய தேவ சோழ மஹாராஜா  - கி.பி. 1248-1268

முதலாம் திக்காவின் மற்றொரு மகன் விஜய கண்ட கோபாலன் 

மூன்றாம் மனும சித்தாவின் மகன் இரண்டாம் திக்கா (எ) திருக்காளத்தி தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1265-1281

இரண்டாம் திக்காவின்  சகோதரன் மனும கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா - கி.பி 1231-1299

வீர கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா - கி.பி 1292-1316 - காஞ்சியை தனியாக ஆட்சி செய்தவர்

ராஜகண்ட கோபால (எ) ரங்கநாத தேவ சோழ மஹாராஜா - கி.பி. 1299-1325

காஞ்சிச் சோழர் (உத்தேசமானப் பட்டியல்) :   

மானவீர சோழ மஹாராஜா (வீர கண்ட கோபால தேவ சோழ மஹாராஜா?) - கி. பி. 14-ம் நூற்றாண்டு

மானவிஜய சோழ மஹாராஜா - கி. பி. 14-ம் நூற்றாண்டு

குருநாத தேவ சோழ மஹாராஜா - கி. பி. 15-ம் நூற்றாண்டு
   
கொண்டைய தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

சாளக்கிய தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

பெரிய திருமலை தேவ சோழ மஹாராஜா - கி. பி. 16-ம் நூற்றாண்டு

சின்ன திருமலை தேவ சோழ மஹாராஜா -  கி. பி. 16-ம் நூற்றாண்டு
   
வீராதி வீரன் வீர சங்குடையான் சோழ ராஜா - கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டு
   
பெரிய சோழனார் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

சின்ன சோழனார் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு 

அலங்கார ராயன் என்கிற வீர விக்ரம சோழன் -  கி.பி. 18-ஆம் நூற்றாண்டு  
    
கலிராஜேந்திர சோழன் - கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 6
#காஞ்சிச்சோழர்    

Sunday, 2 June 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #5

காஞ்சி 

தொண்டை நாடு சோழர்களுடன் மிக நெருங்கியத் தொடர்புடையது. கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்றி,  அங்கு நாடோடியாகத் திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலை பெறச் செய்தார்.

காஞ்சி நகரத்தைக் கரிகாலன் புதுப்பித்தார். தொண்டை மண்டலத்தைக் காடு கெடுத்து நாடாக்கினார் என்று கலிங்கத்துப் பரணி, பெரிய புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. கரிகாலன் தொண்டை நாட்டைத் திருத்தி, காடுகளை வெட்டி மக்கள் உறைதற்கேற்ற சிற்றூர்கள் ஆக்கினார். அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளை நிலங்கள் ஆக்கினார். தொண்டை நாட்டை 24 கோட்டங்கள் ஆக்கினார். தொண்டை மண்டலத்தின் தலை நகரம் காஞ்சிபுரத்தை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தார். அங்குப் பலரைக் குடியேற்றினார். தொண்டை நாட்டை ஆண்டு வருமாறு தன் மரபினன் ஒருவனை விட்டுத் தன் நாடு மீண்டார் என இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். 

பிற்காலத்தில் பல்லவர்கள் எழுச்சியின் போது தொண்டை நாடு பல்லவர் வசமாயிற்று. ஆதித்த சோழன் கால கட்டத்திலிருந்து தொண்டை நாடு மீண்டும் சோழர் வசமாயிற்று. தொண்டை நாடு பெரும்பாலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும், அது தனி நாடாகவேக் கருதப்பட்டு சோழர்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டு வந்துள்ளது.  தொண்டை நாட்டைத் தனியாக, ஆதித்த கரிகாலன் உள்ளிட்ட சோழ இளவரசர்கள் நிர்வகித்துள்ளனர். முதலாம் இராஜேந்திரன் காலம் முதல் அதி ராஜேந்திரன் காலம் முடிய சோழ இளவரசர்கள் தொண்டை நாட்டை சோழ பல்லவன் என்னும் பெயரில் ஆட்சி செய்துள்ளனர்.

முதலாம் குலோத்துங்கன் முதலான சோழப் பேரரசின் நிலையை நீலகண்ட சாஸ்திரிகள் பின் வருமாறுக் குறிப்பிடுகிறார்.  "முதலாம் குலோத்துங்கனின் ஆட்சி முதல், கப்பம் கட்டுகிற சிற்றரசர்களின் எண்ணிக்கையும், மத்திய அரசில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கும், சோழர் ஆட்சியின் சிறப்புமிகு இயல்புகளாகத் தெரிகின்றன. அரசருடைய பிரதிநிதிகளாயிருந்து, இவர்கள் அதிகாரம் செலுத்தியதால், மத்திய ஆட்சியின் பலம் குறைந்து, அதனுடைய நேரடி நிர்வாகத்திலிருந்து பல பகுதிகள் விலகி நின்றன. அவை ஏறத்தாழ தங்கள் பகுதிகளில் தன்னுரிமையோடு விளங்கின. சிற்றரசர்கள் தங்களுக்குள் உடன்பாடுகளை செய்து கொண்டார்கள். சோழப் பேரரசின் முடிவு காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு உறுதியான சான்று என்று இதைக் கொள்ளலாம். சிற்றரசர்கள், எந்தக் கொள்கையும் இல்லாமல், தங்கள் தங்கள் சுய நலன்களுக்கு ஏற்றவாறு, சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி நடந்து கொண்டனர். சோழப் பேரரசு என்ற நினைவு சிதைந்தது. மத்திய அரசில் திறமை இல்லாதவர்களின் கைக்கு நிர்வாகம் மாறும் போது பேரரசு சிதைந்து விடும் நிலை இருந்தது. ஆனால், மூன்றாம் குலோத்துங்கன் அப்படிப்பட்ட வல்லமை இழந்த அரசனல்லன். எவ்வளவோ தொல்லைகள் இருந்தாலும், நாட்டின் ஒற்றுமையையும், தன்னுடைய அதிகாரத்தையும் நிலை நாட்டுவதில் அவன் வெற்றி கொண்டான். காஞ்சிபுரம் இவனுடைய ஆட்சியில் சில ஆண்டுகளுக்கு இவன் கையை விட்டு நழுவியது. அந்த நகரை மீண்டும் கைப்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வருங்காலத்தில் நிகழக் கூடிய செயல்களுக்கு இவை தெளிவான அறிகுறிகளாக விளங்கின."

முதலாம் இராஜராஜன் காலத்தில், தெலுங்குச் சோழரான ஜடா சோடவீமன் சாளுக்கிய மன்னன் சக்திவர்மனை வென்று அவனைக் காஞ்சி வரையில் துரத்தி வந்தான். இராஜராஜன், ஜடா சோடவீமனைப் போரில் கொன்று வேங்கி நாட்டை சக்தி வர்மனுக்குத் திருப்பி அளித்தார். இந்தக் கால கட்டத்துக்குப் பிறகு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், நெல்லூர்ச் சோழரான நல்ல சித்தா என்கிற புஜபல வீர நல்ல சித்தன்ன தேவ  சோழ மஹாராஜாவால் காஞ்சி வெல்லப் பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் காஞ்சியைக் கைப்பற்றி, நெல்லூர்ச் சோழரை மீண்டும் நேரடிச் சோழர்க்கு அடங்கிய சிற்றரசனாக மாற்றினார். இந்தக் கால கட்டம் முதல் நெல்லூர்ச் சோழர், காஞ்சியில் நிரந்தரமாகத் தங்கள் ஆட்சியைத் தொடர்ந்துள்ளனர்.  சோழருக்குப் பின், பாண்டியர், காகதீயர் போன்றோரால் காஞ்சி வெல்லப் பட்டாலும், நெல்லூர்ச் சோழர்கள் தொடர்ந்துப் பேரரசுகளின் மேலாதிக்கத்தை ஏற்றும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தன்னிச்சையாகவும் காஞ்சியில் ஆட்சியைத் தொடர்ந்துள்ளனர்.  


#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 5   
#தெலுங்குச்சோழர் 
#காஞ்சிச்சோழர்  

Saturday, 25 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #4

கரிகால சோழ வம்சம் - தெலுங்குச்சோழர் 

தென்னிந்திய வரலாற்றில் நேரடிச் சோழர்களின் பங்கு மகத்தானது. அதனைப் போன்றே, தெலுங்குச் சோழர்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால், நேரடிச் சோழர்களும் மற்ற தென்னிந்திய அரசுகளும் பேசப்பட்ட அளவு தெலுங்குச் சோழர்கள் பேசப் படவில்லை.

தெலுங்குச் சோழர்கள் தங்களைக் காவிரி நதியின் கரைகளை உயர்த்திக்கட்டிய பணியில் பங்குபெற்ற திரிலோசனனும் மற்ற அரசர்களும் அடிபணிந்த கரிகாலன் குல விளக்குகள் என்று குறிப்பிடுகின்றனர்.   

கரிகால சோழன் வம்சத்தில் மூத்த மகன் வழி வந்த நேரடிச் சோழர் உறையூர், பழையாறை எனத் தங்களின் ஆட்சியைத் தொடர்ந்தனர். கரிகாலன் வம்சத்தில் இரண்டாவது மகன் தசாவர்மன் வழி வந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள். 

இந்த  தெலுங்குச் சோழர்கள், கரிகாலனின் வட இந்தியப் படையெழுச்சியின் போதோ அல்லது கரிகாலன் காவேரிக்குக் கரையெழுப்பும் போது உதவ மறுத்த த்ரிலோச்சன பல்லவனை வென்ற பிறகோ அங்கு ஆட்சி செய்ய அனுப்பப் பட்டவர்களாக இருக்க வேண்டும். தெலுங்குச் சோழர் என்னும் பதம் ஒரு அடையாளப் பெயராக, மூத்த கிளையினரான நேரடிச் சோழர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட கூறப்படும் வார்த்தை. இது முதன் முதலில், இந்தியக் கல்வெட்டுத் துறைத் தலைமை ஆய்வாளராகப் பணி செய்த ராய் பகதூர் வெங்கய்யா என்பவரால் கி.பி. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப் படுத்தப்பட்டது. மற்றபடி அவர்கள் கரிகால சோழ வம்சம் என்றே அழைக்கப் பட்டுள்ளனர். 

தெலுங்குச் சோழர்களின் குறிப்புகள், கரிகாலனின் தந்தை ஜடா சோழன் (இளஞ்சேட்சென்னி?), அயோத்தியா தேசத்திலிருந்து தெற்கு நோக்கி படை எடுத்து வந்து, திரவிள பஞ்சகத்தை வென்று, காவேரிக் கரையில் ஆட்சி செய்த உறையூர் மன்னனை வீழ்த்தி அந்த நாட்டைக் கைப்பற்றியதாகக் குறிப்பிடுகிறது. சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர்கள் என்பதை கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இருப்பினும், கரிகாலனின் தந்தையின் காலகட்டத்தில் தான் அவர்கள் அயோத்தியிலிருந்து வந்திருப்பார்களா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். கரிகாலனின் காலத்துக்கு வெகு காலம் முன்பே சோழர்கள் காவேரிப் பூம்பட்டினத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள். பரசுராமர் கால கட்டத்தில் வாழ்ந்த, காவேரிக்குக் குடகிலிருந்து புகார் வரை வழித் தடம் அமைத்த காந்தமன் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. எனில், முந்தைய கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை கரிகாலனின் தந்தையான ஜடா சோழன் மீது ஏற்றிக் கூறப் பட்டிருக்கலாம். 
 
தெலுங்குச் சோழர்களின் முக்கிய கிளைகள்

1. ரேணாண்டு சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்த நந்திவர்மன் (கி.பி. 550)  வழி வந்தவர்கள். 
2. பொத்தப்பிச் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த தசாவர்மனின் வழி வந்தவர்கள்
3. கோனிதேனா சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த தசாவர்மனின் வழி வந்தவர்கள் 
4. நிடுகல் சோழர் - கரிகாலனின் வம்சத்தில் வந்தவர்கள்
5. நெல்லூர்ச் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்த மதுராந்தக பொத்தப்பி சோழனின் வழி வந்தவர்கள்
6. எருவா சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்
7. கண்டூர் சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்
8. ஹேமாவதி சோழர் - கரிகாலனின்  வம்சத்தில் வந்தவர்கள்

i ) வேலணாண்டு சோழர் - மற்ற சோழர்களைப் போன்று சத்ரிய மரபும், சூரிய குலமும் அல்லாமல் நான்காம் வருணத்தில் (சதுர்த்தன்வய) பிறந்த இந்திரசேனாவின் வம்சத்தில் வந்தவர்கள். சோட கங்கேய ராஜா, சோட கொங்க ராஜா, சோடய்ய ராஜா என்று அழைக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு சோழர் என்ற பெயர் வந்ததற்கான காரணம் அறிய முடியவில்லை. குண்டூர், பித்தர்புரம் போன்ற பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். 

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 4

Sunday, 19 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #3

கரி காலன் 

சோழ வம்சத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மன்னன், கரிகால சோழன். கரிகாலனின் பெருமையாக கூறப் படுபவனவற்றில் முக்கியமானவை இரண்டு விஷயங்கள். ஒன்று அவருடைய போர் வெற்றிகள் குறிப்பாக வட இந்தியப் போர் வெற்றி மற்றும் இமயத்தில் புலிச்சின்னத்தைப்  பொறித்தது. மற்றொன்று, காவேரியின் போக்கை சீர் படுத்த அமைக்கப் பட்ட கல்லணை. 

கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோரின் படையெடுப்புகளில் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருமே சக்கரவர்த்தி ஆவதற்குரிய போர் வழி முறைகளையேப் பின் பற்றியுள்ளனர். ஒரு அரசன், தன்னைச் சக்கரவர்தியாகப் பிரகடனப் படுத்திக் கொள்வதற்கு முன்னர் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை வென்றுத் தன்னடிப் படுத்த வேண்டும். இதற்குரிய வழி முறையாக அரசனது பலம் வாய்ந்த படை முதலில் தெற்கு நோக்கிப் படையெடுத்து தென் பகுதி நாடுகளை வெல்ல வேண்டும். பின்னர் மேற்கு நோக்கிப் படையெடுத்து மேற்குப் பகுதி நாடுகளைத் தன்னடிப் படுத்த வேண்டும். அதன் பின்னர் வடக்கு நோக்கிப் படையெடுத்து வட பகுதி நாடுகளைத் தன்னடிப் படுத்த வேண்டும். இறுதியாக கிழக்குப் பகுதி நாடுகளைப் படையெடுத்து வெல்ல வேண்டும். ஒரு சக்கரம் சுழல்வது போல் இந்தப் போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். தன்னைச் சுற்றியுள்ள அனைத்து  நாடுகளையும் வென்ற பிறகு அந்த அரசன், சக்கரவர்தியாகக் கருதப் படுவார். கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகிய மூவருமே இத்தகையப் போர் நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளனர். மூவருக்குமே இதை செயல் படுத்துவதற்குரியக் காரணிகளாக உயர்ந்த நோக்கங்கள் இருந்துள்ளன.காவேரியின் போக்கை சீர் படுத்த வேண்டிய நோக்கம் கரிகாலனுக்கும், சிவனுக்கு தக்ஷிண மேரு எனப்படும் மிகப் பெரிய ஆலயம் அமைக்க வேண்டிய நோக்கம் சிவபாத சேகரனுக்கும், இந்தியாவிலேயே மனிதர்களால் வெட்டப்பட்ட மிகப் பெரிய ஏரியை அமைத்து, தக்ஷிண மேருவுக்கு இணையான ஆலயத்தை அமைத்து தனது புதிய தலை நகரை நிர்மாணிக்க வேண்டிய நோக்கம் இராஜேந்திரனுக்கும் இருந்துள்ளன. 

கரிகாலனின் போர்ச் செயல்கள் பொருநராற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப் பட்டுள்ளன. கரிகாலனின் படையெழுச்சியை இராசமாணிக்கனார் பின்வருமாறு வரிசைப் படுத்துகிறார்.

1. கரிகாலன் முதலில் சேர, பாண்டியருடன் வெண்ணியில் போரிட்டு வென்றார்.

2. பின்னர் நாகப் பட்டினத்தைத் தலை நகராகக் கொண்ட பன்றி நாட்டை வென்றார். பிறகு தென் பாண்டி நாட்டை அடிப்படுத்து மேற்கே சென்றார்.

3. கற்கா (பாலக்காடு), வேள்நாடு (திருவாங்கூர்), குட்டம் (கொச்சி), குடம் (தென் மலையாளம்), பூழி (வட மலையாளம்) ஆகிய பகுதிகளைக் கொண்ட சேர நாட்டை அடைந்து, அந்நாடுகளை வென்று தன் பேரரசில் சேர்த்துக் கொண்டார்.

4. இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர் என்பாரை (இடை நில அரசரை) வென்றார். இருங்கோவேள் முதலிய வேளிரைத் தனக்கு அடக்கியவர் ஆக்கினார்.

5. பின்னர் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்று, நாடோடியாகத் திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலை பெறச் செய்தார். 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினார்.

6. பிறகு திருக்கோவிலூரைத் தலை நகராகக் கொண்ட மலையமானை வென்றார்.

7. வேங்கடம் வரை வெற்றி கொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ்சேனையுடன் புறப்பட்டார். வடுகர் சிற்றரசர் பலரை வென்றார்.

8. பின்னர் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மீண்டார். அது சமயம் கரிகாலனை வரவேற்று மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம் கொடுத்தான். வச்சிர நாட்டு மன்னன் கொற்றப் பந்தர் அளித்தான். அவந்தி வேந்தன் தோரண வாயில் வழங்கினான். சோழ மன்னர்களின் வரலாற்றைக் கரிகாலன் இமயத்தில்  பொறித்ததாகக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடுகின்றது.

9. இமயத்தை வென்ற பின், பெரும் கப்பற்படையுடன் இலங்கை சென்று அதனை வென்று தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆள விட்டு மீண்டார். மீண்ட போது, 12,000 குடிகளைச் சோழ நாட்டிற்கு கொண்டு வந்தார் என் கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

குடகில் தோன்றிய காவிரியை, சோழ நாட்டின் காவேரிப் பூம்பட்டினம் வரை வழித்தடம் அமைத்துக் கொண்டு வந்தவர் காந்தமன் என்னும் சோழ மன்னன். இந்தக் காவேரியில் அவ்வப் போது வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். "செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற் கன்னியின்" வெள்ளப் பெருக்கால் உண்டாகும் தீமையை மாற்ற, காவிரி ஆற்றின் இரு மருங்கும்  கரை அமைக்க முடிவு செய்தார் கரிகாலன். கரிகாலனால் வெல்லப் பட்ட அரசர்களும், இலங்கையிலிருந்துக் கொண்டு வரப் பட்ட மக்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். ஆனால், திரிலோச்சன பல்லவன் என்னும் அரசன் மட்டும் இந்தப் பணிக்கு உடன் பணியவில்லை. கரிகாலன், திரிலோச்சன பல்லவனை அடக்கி காவேரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபட வைத்தார். 

கரிகாலன் சோழ வம்சத்தின் ஆணி வேர் மட்டுமில்லை. இந்தக் கரி காலனிடமிருந்து இரண்டு புதிய வம்சங்களும் தோன்றியுள்ளன. தெலுங்குச் சோழர்களின் குறிப்புகள், கரிகாலனின் மகன் மகிமானனுக்கு கரிகாலன், தசாவர்மன், தொண்டைமான் என்று மூன்று மகன்கள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. இதில் தசாவர்மனின் வழி வந்தவர்களே கரிகால சோழ வம்சம் எனப் படும் தெலுங்குச் சோழர்கள். அதனைப் போன்றே மூன்றாவது மகன் தொண்டைமான் என்பவரிடமிருந்து தொண்டைமான் வம்சம் தோன்றியுள்ளது.

கரிகாலன், பல்லவ வம்சத்தினரான த்ரிலோச்சன பல்லவனை வென்றார். பல்லவர்கள் தங்களை பரத்வாஜ் கோத்திரத்தினராக குறிப்பிடுகின்றனர். மேலும் பல்லவர்கள் அக்னி குலத்தவர்களாகக் கருதப் படுகின்றனர். கரிகால சோழனின் மகனுக்கும் நாக இளவரசிக்கும் பிறந்தவர் தொண்டைமான். தொண்டைமான் வழி வந்த அறந்தாங்கி தொண்டைமான்கள் சூரிய குலத்தவர்களாக் குறிப்பிடப் படுகின்றனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது பல்லவ வம்சம் வேறு, தொண்டைமான் வம்சம் வேறு என்று அறிய முடிகின்றது. மேலதிக ஆய்வுகள் இதனைத் தெளிவு படுத்தக் கூடும்.



#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 3

Thursday, 9 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #2

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பரின் மகன் அம்பிகாபதியும், சோழ இளவரசியும் காதலித்ததாகக் குற்றம் சுமத்தப் பட்டனர். இதனால் சோழ இளவரசி மரணமடைய, அம்பிகாபதிக்கு சோழ மன்னன்  மரண தண்டனை விதிக்க, சோழ மன்னனின் கோபத்துக்கு பயந்து கம்பர் நாட்டை விட்டு வெளியேறினார். "கவிச்சக்கரவர்த்தி" என எந்த சோழ மன்னரால் பாராட்ட பட்டாரோ, அதே சோழ மன்னனுக்கு பயந்து நாடோடியாய் வாழ்ந்து இறந்தார் கம்பர்.

சோழ வம்சாவளியைக் குறிப்பிடும் மெக்கென்ஸி சுவடிகளில் ஒன்று, கம்பரின் பாடல் ஒன்றை பின்வருமாருக் குறிப்பிடுகிறது.

"வில்லம்பு சொல்லம்பு மேதனியில் ரெண்டுண்டு
வில்லம்பில் சொல்லம்பே மேலம்பு - வில்லம்பு
பட்டுதடா யென்மார்பில் பார்வேந்தர் வுன்குலத்தெ
சுட்டுதடா யென்வாயில் சொல்"

கம்பரின் அந்த அறம்பட்டு அந்த சோழன் எனப்பட்டவன் அத்தோடே ஆண்டுப் போய்விட்டான். அதன் பிற்காலம், சோழ தேசத்துக்கு ராஜியாதிபத்தியம் பண்ணவன் சோழன் என்று பேர் வைத்துக் கொண்டார்கள் என்கிறது சுவடி.

கம்பரின் சாபமோ, சோழ இளவரசியின் சாபமோ அல்லது இயற்கையின் சுழற்சியோ, மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சி முடிவடைந்தது. பாண்டியர்களிடம் போரில் தோல்வி, மைய அரசின் பலவீனம், சிற்றரசர்களின் ஒத்துழைப்பின்மை, தொடர்ச்சியாக சோழ தேசத்தில் ஏற்பட்ட பஞ்சங்கள், மாறி வரும் அரசியல் சூழல் எனப் பல்வேறு காரணிகள் சோழர்களை பலவீனம் ஆக்கி, மூன்றாம் இராஜேந்திரனோடு நேரடிச் சோழர்களை அரசியலில் இருந்து ஒதுங்க வைத்திருக்க வேண்டும். பேரரசுக்கான நோக்கத்துடன், பாண்டியர், ஹொய்சாளர், காடவராயர் மற்றும் தெலுங்குச் சோழர் மிக்க வலிமையுடன் சோழர்களைச் சுற்றிப் பெரு முனைப்பு காட்ட, பல்வேறு காரணங்களால் பலவீனமான சோழர்கள், இந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டனர். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வீழ்ச்சியடைய ஆரம்பித்த மைய அரசின் பலம், மூன்றாம் இராஜேந்திரன் காலத்தில் இறுதி மூச்சினை எட்டியது.

மூன்றாம் இராஜராஜன் மற்றும் மூன்றாம் இராஜேந்திரன் காலத்தில் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்னும் சோழரின் பட்டத்தைப் பயன்படுத்தாத சிற்றரசர்களே தமிழகத்தில் இல்லை எனும் சூழல் உருவாகியது. இது சோழர்களின் பலவீனத்தை உணர்த்துவதாகவும், ஒவ்வொரு சிற்றரசும் சோழருக்கு இணையாக தங்களை உயர்த்திக்கொள்ள முற்பட்டதையும் காட்டுகின்றது. வயதான வேங்கையின் மரணத்தை எதிர் நோக்கியிருப்பது போல, சோழர் ஆட்சியின் முடிவு எப்போது நிகழும் என ஒவ்வொரு அரசும் எதிர் நோக்கிக் காத்திருந்தன. கி.பி. 1279-க்குப் பிறகு நேரடிச் சோழர்களின் ஆட்சி பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாம் இராஜேந்திரருக்குப் பின்னும் நேரடிச் சோழர் ஆட்சி செய்திருந்தால், அவர்கள் ஒன்றிரண்டு தலைமுறைகள் கங்கை கொண்ட சோழ புரத்திலேயே தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் அதற்குரிய சான்றுகள் ஏதும் இல்லை. எனவே மூன்றாம் இராஜேந்திரருடன் நேரடிச் சோழர்களின் "ஆட்சி" முடிவடைந்ததாகக் கருதலாம்.

மூன்றாம் இராஜேந்திர சோழனின் கால கட்டத்திற்குப் பின்பு, தமிழகத்தில் குறிப்பிடப் படும் சோழர்கள், சோழ மகாராஜா எனப்படும் தெலுங்குச் சோழர்கள் மற்றும் சோழகோன் எனப்படும் அதிகாரிகளே. அவர்களைக் குறைந்த பட்சம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. காஞ்சிச் சோழர் - இவர்கள் தெலுங்குச் சோழர் வம்சத்தை சேர்ந்தவர்கள். சங்க காலக் கரிகால சோழனின் இளைய மகன் வழி வந்தவர்கள். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நெல்லூர்ச் சோழர் காஞ்சியையும் ஒரு தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.  கி. பி. 1316-ல் முதலாம் சடையவர்ம பராக்கிரம பாண்டியன், நெல்லூர்ச்  சோழரான வீர கண்ட கோபாலனைத் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து காகதீயர்களின் தளபதி முப்பிடி நாயக்கர் படையெடுத்து வந்து பாண்டியனை வென்று காஞ்சியைக் கைப்பற்றி, மான வீர சோழமஹாராஜாவை ஆளுநராக நியமித்தார். இந்த மான வீரா என்பவரும் பாண்டியரால் தோற்கடிக்கப் பட்ட வீரகண்ட கோபாலனும் ஒருவராகவே இருக்கலாம். இந்தக் கால கட்டத்துக்குப் பின் காஞ்சியை ஆட்சி செய்த தெலுங்குச் சோழர்கள், மானவீராவின் வம்சத்தினராக இருக்கக்கூடும். இவர்கள் காஞ்சி புரவராதிஸ்வரர், காஞ்சி ராஜு மற்றும் கரிகால ராஜா என அழைக்கப் பட்டவர்கள்.

2. பிற்கால உறையூர்ச் சோழர் - இவர்களும் தெலுங்குச் சோழர் வம்சத்தை சேர்ந்தவர்கள். சங்க காலக் கரிகால சோழனின் இளைய மகன் வழி வந்தவர்கள். நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சியின் மறைவுக்குப் பின்னர், உறையூரைத்  தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். மூன்றாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்பு, விஜயநகர அரசர்கள் காலத்தில் இவர்கள் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். விஜய நகர குமார கம்பண்ணனின் படையெடுப்பின் போது, உடன் வந்த சோழர்கள் இவர்களாக இருக்கக் கூடும். குமார கம்பண்ணனின் படை, கி.பி. 1371-ல் ஸ்ரீரங்கத்தை முகம்மதியரிடமிருந்துக் கைப்பற்றியது. குமார கம்பண்ணனின் படைத் தளபதி ஒருவர் ஸ்ரீரங்க ஸ்தாபனாச்சார்யா என்று அழைக்கப் படுகிறார். இந்தக் கால கட்டத்திலிருந்தோ அல்லது இரண்டாம் தேவ ராயன் கால கட்டத்திலிருந்தோ, தெலுங்குச் சோழர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கியிருக்க வேண்டும். இவர்கள், விஜயநகர அரசர்களின் தென் மண்டல அதிகாரிகளாக (தெக்ஷண புசம்)  கல்வெட்டுகளில் குறிக்கப் படுகின்றனர். ஸ்ரீரங்கம் கோயில் இவர்களின் கட்டுப் பாட்டில் இருந்துள்ளது.  உறையூர் புரவராதீஸ்வரர் என அழைக்கப் பட்டவர்கள்.

3. பிச்சாவரம் சோழகோனார் - இவர்கள் சோழகோன் வம்சத்தை சேர்ந்தவர்கள். இமய மலைக்கு தெற்கில் உள்ள கௌட (வங்காளம்) தேசத்தை சேர்ந்த ஐந்தாம் மனுவின் (மானவ? - கி.பி 625-626) மூத்த மகன் இரண்யவர்மன் வழி வந்தவர்கள். சோழர்கள் நலிவுற்றிருந்த கி.பி. 7-ம் நூற்றாண்டு கால கட்டத்தில், வியாக்கிர முனிவரால் சோழகோன் என்னும் பட்டம் அளிக்கப்பட்டு, சோழ தேசத்தின் பகுதியான சிதம்பரத்தின் அரசனாக, தில்லையில் இரண்ய வர்மன் முடி சூட்டப்பட்டதாக கோயிற்புராணம் மூலம் அறிய முடிகின்றது. கொற்றவன் குடி, பித்தர்புரம் (பிச்சாவரம்),  தீவுக்கோட்டை, கொள்ளிடம், அரசூர், தொழுதூர், புவனகிரி உள்ளிட்ட சிதம்பரம் பகுதியின் ஆட்சியாளர்களாக சோழகோன் வம்சம் இருந்துள்ளனர்.  பராந்தக சோழன் காலத்திலிருந்தே சோழகோன் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. நேரடிச்சோழர், வாணகோவரையர், காடவராயர், பாண்டியர், செஞ்சி நாயக்கர், அரியலூர் மழவராயர், உடையார் பாளையம் ஜமீன் ஆகியோரின் அதிகாரிகளாக சோழகோனார் இருந்துள்ளதைக் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவர்கள் அரசனின் உடன் கூட்டத்து அதிகாரிகளாக, அகம்படி முதலி, சாமந்த முதலி, வர முதலி போன்ற பதவிகளையும், பிள்ளை (கோயில் பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும் படி ஆணையிடும் அதிகாரி), பண்டாரத்தார் (கருவூல அதிகாரி)  முதலிய பதவிகளையும் வகித்துள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் காலம் முதல் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலம் முடிய சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தை சோழகோனார் கவனித்து வந்துள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி பார்ப்பதற்கு முன், நேரடிச் சோழர்கள், தெலுங்குச் சோழர்கள், சோழகோன் ஆகியோரின் பெயர்கள் அழைக்கப் படும் முறையைத் தெரிந்து கொள்வோம்.

நேரடிச் சோழர்கள் : உடையார் ஸ்ரீ கோப்பர/ராஜ கேசரி வன்மரான _______ சோழ தேவர்

தெலுங்குச் சோழர்கள் : சோழ மஹாராஜா / தேவ சோழ மஹாராஜா/ மஹாராஜா/ மஹாமண்டலேசுவரர்/ உறையூர் புரவராதீஸ்வரர் / கரிகாலகுலம் / கரிகால சோழராஜா

சோழகோன் : சோழகோன் / சோழகோனார் /சோழகன் /சோழகனார் / மஹாராஜா

நேரடிச் சோழர்கள் மட்டுமல்லாது, தெலுங்குச் சோழர்களும், சோழகோனாரும் சில இடங்களில் வெறும் "சோழன்" என்று குறிப்பிடப் படும்போது, மற்ற காரணிகளைக் கொண்டே அவர்கள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 2

Friday, 3 May 2019

மூன்றாம் இராஜேந்திர சோழனுக்குப் பிந்தைய சோழர் #1

பாரதத்தின் தொன்மையான வரலாறு, திராவிடேஸ்வரரான மனுவிலிருந்து தொடங்குகிறது. ஊழிப் பெரு வெள்ளத்திலிருந்து மக்களையும் மற்ற உயிர்களையும் காப்பாற்றிய மனு, புதியப் பேரரசை இந்தியாவில் நிறுவினார். பாரதத்தின் இரண்டு முக்கிய அரச குலங்கள் இந்த மனுவிடமிருந்து தோன்றின. மனுவின் மகன் இக்ஷ்வாகுவிலிருந்து தோன்றியது சூரிய குலம். மனுவின் மகள் இளாவிலிருந்து (இளா = இளவரசி?)  தோன்றியது சந்திர குலம். 

இக்ஷ்வாகுவின் பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும், ஐலன்(இளா) பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும் உண்டாகி அவர்கள் ஆங்காங்கே இந்த பாரத வர்ஷத்தை ஆண்டனர் என்று  மஹாபாரதம் சபாபர்வத்தில் கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். பாரதத்தில் எந்த மன்னன் எந்தப் பகுதியை ஆண்டாலும் அவர்களது மூலம் இந்த இரண்டு பரம்பரைகளில் ஏதேனும் ஒன்றில்தான் ஆரம்பித்திருக்கும் என்கிறார் கிருஷ்ணன்.

சூரிய குலமும், சந்திர குலமும் தோன்றி கிட்டத்தட்ட 35 தலைமுறைகள் கழித்துப் பரசுராமர் காலகட்டத்தில் தோன்றியது அக்னி குலம். தொல்குடி சத்ரியர்களை அழிப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டப் பரசுராமர் மேற்கொண்ட தொடர்ச்சியானப் போரினால், பாரதத்தில் சத்ரிய அரசர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. இறுதியில், சூரியகுல சத்ரியரான இராமரை எதிர்க்கும் போதே, பரசுராமரின் சக்தி அழிந்தது. இந்தக் காலகட்டத்தில், அசுரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. அசுரர்களின் ஆட்சியில் அதர்மம் அதிகரித்தது. அசுரர்களை அழிப்பதற்காக, பொதியமாமுனி, சம்பு மாமுனி, வசிஷ்டமாமுனி ஆகியோர் செய்த வேள்வியில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அம்சமாகத் தோன்றியவர்கள் அக்னி குல ஷத்ரியர்கள். இவர்களைப் பரசுராமர் ஆசிர்வதித்ததாகக் கூறப்படுகிறது. 

பாரத வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்த காலகட்டம் இது. பரசுராமர் ஷேத்திரம் எனப்படும் கேரளத்தின் நிலப் பகுதி கடலிலிருந்து வெளிப்பட்டது, குடகிலிருந்து காவேரி வெளிப்பட்டது,  குடகிலிருந்து வெளிப்பட்ட காவேரிக்கு  பூம்புகார் வரை அகத்தியரின் துணையுடன் காந்தமன் என்னும் சோழ மன்னன் வழித்தடம் அமைத்தது போன்ற நிகழ்வுகள் இந்த கால கட்டத்தில் நிகழ்ந்தவையே. இவற்றை நோக்கும் போது, கடற்கோள் மற்றும் நில நடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவு இக்காலத்தில் ஏற்பட்டு, பாரதத்தின் நில அமைப்பில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் கருதலாம். அக்னி குல சத்ரியர்களான சேரர், இந்தக் கால கட்டத்திலிருந்தே கேரளத்தில் ஆட்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். சோமசுந்தரேசப் பெருமானுக்கும், தடாதகைப் பிராட்டியான மீனாட்சிக்கும் மைந்தனாகப் பிறந்த உக்கிரகுமார பாண்டியன் என்கிற கடல் வடிவலம்ப நின்ற பாண்டியன் வேலெறிந்து கடல் பொங்கியதை நிறுத்தியதாகக் கூறப்படும் கால கட்டமும் இதுவாகவே இருக்கக் கூடும். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளால் தொடங்கப் பட்டு அகத்தியனார், குன்றெறிந்த முருக வேள் உள்ளிட்டோர் உறுப்பினராய் இருந்த பாண்டியர்களின் முதலாம் தமிழ்ச் சங்கம் கடற்கோளால் அழிந்ததும் இந்தக் காலகட்டத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். 

இந்தியாவின் தொல்குடி அரசர்கள் பெரும்பாலும் சூரிய குலம், சந்திர குலம் மற்றும் அக்னி குலம் ஆகிய மூன்று குலத்தின் வழி வந்தவர்களே. தமிழகத்தின் தொல் குடி வேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் எனப்படும் மூவேந்தர்களும் முறையே அக்னி, சூரிய மற்றும் சந்திர குலத்தவர்கள்.

மனுவின் மகன் இக்ஷ்வாகு முதலான சூரிய குலத்தில், மூத்த கிளையான இக்ஷவாகு வம்சம், பட்டத்து இளவரசர்கள் மூலம் தொடர (பெரும்பாலும் மூத்த மகன்), சக்தி வாய்ந்த இளைய மகன்களின் மூலம் அவ்வப்போது கிளை வம்சங்கள் தோன்றியுள்ளன. ரகு வம்சம், சிபி வம்சம்(செம்பியன்), சோழ வம்சம், கரிகாலன் வம்சம்(தெலுங்குச் சோழர்கள்) போன்றவை அவ்வாறே தோன்றியிருக்க வேண்டும். சோழன் என்னும் பெயர் வருவதற்கு முன்னால் சோழர்கள்  சிபி வம்சம்(செம்பியன்) என்றே அழைக்கப்பட்டுள்ளனர். சிபி வம்சத்தில் தோன்றிய சுராதிராசன் என்கிற சோழன் என்னும் அரசனைத் தொடர்ந்து சோழ வம்சத்தின் ஆட்சி தோன்றியது. சோழன் என்னும் மன்னனின் பெயரை ஒட்டியே சோழ வம்சம் என்னும் பெயர் வந்ததே அன்றி சோறு, சூழ்ந்தது போன்ற காரணப்பெயர்களை ஒட்டி வரவில்லை. மன்னரின் பெயரைக்கொண்டே வம்சங்கள் அழைக்கப்படுவது சூரிய குலத்தில் இருந்த வழக்கம். 

சங்ககாலத்தில், கரிகாலன் ஆட்சியில் பெரும் எழுச்சியைப் பெற்றது சோழப் பேரரசு. சங்ககாலத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படும் களப்பிரர் காலத்திலும் தாக்குப் பிடித்து, விஜயாலய சோழன் காலத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற்றது. முதலாம் இராஜராஜன் மற்றும் அவரது மகன்  இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் மேன்மையின் உச்சத்தைத் தொட்ட சோழப் பேரரசின் ஆட்சி, இடையில் நான்கு தலைமுறை சாளுக்கிய சோழர்களின் ஆட்சியையும் சேர்த்து மூன்றாம் இராஜேந்திரன் காலத்துடன் கி.பி. 1279-ல் முடி வடைந்தது. 

இந்த கால கட்டத்திற்குப் பின்பும் தமிழக வரலாற்றில் சோழர் என சில அரசர்கள் குறிக்கப் படுகின்றனர். அவர்களில் சிலர்,

1. கி.பி 13-ம் நூற்றாண்டின் இறுதியில், சிதம்பரம் கோயிற்புராணம் எழுதிய உமாபதி சிவாச்சாரியாரை ஆதரித்த வீர வர்ம சோழன்

2. கி.பி 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரவி வர்மன் குலசேகரன் எனப்படும் கேரள மன்னனால் வெல்லப்பட்ட சோழன்

3. கி.பி 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குமார கம்பனின் படையெடுப்பின் போது குறிப்பிடப்படும் சோழன்
  
4. கி.பி 15-ம் நூற்றாண்டில், சோழ பீமன், சோழ நாராயணன் என அழைக்கப் பட்ட சோழன்

5. கி.பி 16-ம் நூற்றாண்டின்  முற்பகுதியில் கிருஷ்ண தேவராயரின் கால கட்டத்தில் மதுரையை வென்ற வீர சேகர சோழன்

6.  கி.பி 16-ம் நூற்றாண்டில் அச்சுதராயரின் கால கட்டத்தில்  சோழகுலத்திலகன்,  பொன்னம்பலநாத ஸ்ரீ பாத சேகரன் என்று அழைக்கப் பட்ட சோழன்

7. கி.பி 16-ம் நூற்றாண்டின் மத்தியில் சதாசிவராயர் காலத்தில், ஸ்ரீரங்கத்து நாராயண ஜீயரை அழைப்பித்து விசாரித்த சோழன்

8. கி.பி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் விட்டலேஸ்வர சந்தா மாலை இயற்றப் பட்ட விட்டலேஸ்வர சோழன்

9. கி.பி 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரெகுநாத நாயக்கர் போரிட்டு வென்ற பெரிச்சி சோழகன்

10. ரெகுநாத நாயக்கருக்கு ஆதரவாக பெரிச்சி சோழகனைக் கொன்ற செங்கிளி நாட்டு வேதாந்தி சோழன்

11. சோழகன், சோழகனார் எனஅழைக்கப்படும் சோழகோன்

12. கலி ராஜேந்திர சோழன்

13. பெரிய சோழனார்

14. சின்ன சோழனார்
  
15. கி.பி 17/18-ம் நூற்றாண்டில் செப்பேடு வெளியிட்ட கரிகால சோழ ராஜா 

இதே கால கட்டத்தில் குறிப்பிடப் படும் மற்ற சோழர்கள் 

இவர்கள் யார்? 

சோழன் என்று வருவதால் இவர்கள் அனைவரையும் விஜயாலய சோழன் மற்றும் இராஜராஜ சோழன் வழி வந்த நேரடிச் சோழ மரபினராகக் கருதலாமா? அல்லது இவர்கள் வேறு மரபினரா?

இவற்றிற்கான விடையைத் தேடுவோம். கிடைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் இவர்களை ஓரளவு அடையாளம் காண முடிகின்றது. அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம். மூன்றாம் இராஜேந்திர சோழனுடன் முடிவடைந்த நேரடிச் சோழப் பேரரசின் ஆட்சிக்குப் பிந்தைய சோழர் பற்றிய ஆய்வில் இது ஒரு ஆரம்ப கட்ட முயற்சி. வரலாற்று ஆய்வாளர்கள் மேலதிக ஆய்வுகள் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ள களம் இது.


#நேரடிச்சோழருக்குப்பிந்தையசோழர்கள் 1

Friday, 26 April 2019

சோழங்கன் யார்? #15


"வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்" என்ற வீரராஜேந்திரனின் மெய் கீர்த்தி கூறும் ஒற்றை வரி, மிக நீண்ட வரலாறு உடையது. கங்கை திக்விஜயத்தில் ஆரம்பித்த அவரது போர்ப் பயணம், முதலாம் இராஜேந்திரன், இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், இராஜ மகேந்திரன் மற்றும் தன்னுடைய ஆட்சியின் இறுதிக் காலம் வரை பெரும்பாலான நேரங்களில் போர்க் களத்திலேயே கழிந்துள்ளது. கங்கைப் படையெழுச்சியின் படைத்தலைவன், தந்தையைப் போன்றே கடல் கடந்து கடாரம் வென்றவன் என்னும் புகழுக்குரியவர்.  மனுகுல கேசரி, இராஜாதிராஜன், இராஜ மகேந்திரன், மதுராந்தகன் எனத் தன்னுடைய நான்கு சகோதரர்களின் உயிர் குடித்த சாளுக்கியத்தை ஐந்து முறை வென்று, தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம் முடித்தவன் என்ற பெருமைகளை உடையவர். கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோருக்கு இணையான பெரு வீரனெனத் திகழ்ந்தவர் வீர ராஜேந்திரர். 

சகல புவனாசிரியன், ஸ்ரீ மேதினி வல்லவன், மகாராஜாதிராஜன், பரமேசுவரன், பரம பட்டாரகன், ரவிகுல திலகன், சோழகுல சேகரன், பாண்டிய குலாந்தகன், ஆகவமல்லகுல காலன், ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்ட ராஜசேகரன், ராஜாஸ்ரயன், ராஜராஜேந்திரன், வல்லப வல்லபன், வீர சோழன், கரிகாலச்சோழன், வீரன் இரட்ட ராஜகுல காலன், வீரணுக்கன், சோழ கங்கன், சோழங்கன், கங்கை கொண்டான், சோழ லங்கேஸ்வரன், ஹரசரண சேகரன் என்பவை இவருக்கு வழங்கப் பட்ட பெயர்கள். வீரணுக்கன் விஜயம், பண்டு பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, வீர சோழியம் என நான்கு நூல்கள் ஒரு சோழன் மீது இயற்றப்பட்ட நிகழ்வும், இவர் ஒருவருக்கே இருக்கக் கூடும். பழம்பெரும் அரச குடும்பங்களின் குடிப் பெயரும் இவரது பெயரால் மாற்றமடைந்துள்ளதைப் பார்க்கும் போது, இவரது பெருமை விளங்கும். வீர ராஜேந்திரன் இன்னும் பல்லாண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால், வரலாற்றின் போக்கே வேறு வகையாக மாறியிருக்கும் என்று நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார். 

வீர ராஜேந்திரன் மற்றும் இவரது மகன் அதிராஜேந்திரனின் மரணத்துக்குப் பின் நடந்த போர்களில் முக்கியமானவை, இவரது வாரிசுகளுக்கிடையே நடத்தப் பெற்றவையே. ஒரு புறம் இவரது (தங்கை வழி) மருமகன் குலோத்துங்கன் சோழ நாட்டு அரியணையிலும், மறு புறம் இவரது மருமகன் விக்கிரமாதித்யன் சாளுக்கிய தேசத்திலும், இன்னொரு புறம் இவரது மகள் வயிற்றுப் பேரன் அனந்த வர்மன் கலிங்கத்திலும் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

சோழங்கன் யார் என்ற தேடல், சோழர் வரலாற்றின் சில இருண்ட பக்கங்களுக்கு வெளிச்சம் காட்டியிருக்கிறது. முதலாம் இராஜேந்திரன் காலம் முதல் அதி ராஜேந்திரன் காலம் முடிய 3 சோழ லங்கேஸ்வரர்கள், 4 சோழ பாண்டியர்கள், 3 சோழ கேரளர்கள், 3 சோழ பல்லவர்கள் மற்றும் 3 சோழ கங்கர்கள் எனக் கட்டுக்கோப்பான சோழப் பேரரசின் ஆட்சி முறையை அறிய முடிகின்றது. வீர ராஜேந்திரரின் ஆட்சியும், அவரைத் தொடர்ந்து அதி ராஜேந்திரரின் ஆட்சியும், நீண்ட காலம் தொடர்ந்திருந்தால், இந்தக் கட்டமைப்பு நீடித்து சோழப் பேரரசு வேறு பரிணாமத்திற்கு சென்றிருக்கக் கூடும். இருப்பினும் சாம்ராஜ்யங்கள் வீழ்வதும், வீழ்வது எழுவதும் இயற்கையின் நியதி. நான்கு தலைமுறைகள் நீடித்த சாளுக்கிய சோழரின் ஆட்சிக்குப் பின், மீண்டும் வீர ராஜேந்திரரின் வம்சமே ஆட்சிக்கு வந்துள்ளதையும் அறிய முடிகின்றது. குறிப்பாக மூன்றாம் குலோத்துங்கன், தான் வீர ராஜேந்திரரின் வழி வந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், கரிகாலன், வீர ராஜேந்திரன், சோழங்கன், கோனேரின்மைக் கொண்டான், ஹரசரண சேகரன் என்ற வீர ராஜேந்திரனின் பெயர்களைப் பூண்டதுடன், வீர ராஜேந்திரரின் "புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்" என்னும் மெய் கீர்த்தியையும் பயன்படுத்தி, பல்வேறு வழிகளில் தான் வீர ராஜேந்திரரின் வம்சம் என்பதை நிரூபித்துச் சென்றுள்ளார். மூன்றாம் இராஜேந்திரருடன் சோழர்களின் ஆட்சி முடிந்துள்ளது. ஆனால் சிலர், மூன்றாம் இராஜேந்திரருடன் சோழர்கள் அனைவரும் இறந்து விட்டனர் அல்லது காணாமல் போய் விட்டார்கள் என்று கருதுகிறார்கள். சோழர்கள் காலத்தில் வாழ்ந்த அத்தனை மக்களின் வழி வந்தவர்களும் இன்றும் இருக்கும் போது, சோழர்கள் மட்டும் காற்றில் கற்பூரமாய் கரைந்து விட்டார்கள் என்று நம்புவது என்ன விதமான நம்பிக்கை என்று புரியவில்லை. சோழர்கள் எப்போதும் சூப்பர்மேன்களாகவே இருக்க வேண்டும் என்னும் அவர்களின் அதீத ஆசையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எழுவது விழும், வீழ்வது எழும் என்னும் இயற்கையின் நியதிக்கு சோழர்களும் விதி விலக்கானவர்கள் அல்ல.

இந்தத் தேடலில் சில புதிய விஷயங்கள் கிடைத்துள்ளன. அவை,

1. இயற்கைப் பேரழிவாலேயே சோழர்கள் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழ புரத்திற்கு குடி பெயர்ந்தனர் 
2. முதலாவது சோழ லங்கேஸ்வரன் - இராஜ மகேந்திரன்
3. இராஜாதிராஜன் - மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்
4. மனு குல கேசரி - இராஜேந்திரரின் முதல் மகன் இராஜராஜன்
5. முதலாம் இராஜேந்திரரின் தம்பி கங்கை கொண்ட சோழன், இரண்டாவது சோழ கேரளனாக பதவி வகித்தது 
6. கங்கைப் படையெழுச்சியின் படைத் தலைவன் வீர ராஜேந்திரன் 
7. சோழங்கன் என்னும் பெயர் வீர ராஜேந்திரரிடமிருந்தே வந்துள்ளது 
8. கங்கை கொண்ட சோழபுரம் பகுதியிலுள்ள சோழனார் குடும்பங்களின் குடிப்பெயர் சோழங்கனார் என வீர ராஜேந்திரரைத் தொடந்தே மாறியுள்ளது 
9. கீழை கங்கர்களின் குடிப் பெயர் சோழகங்க தேவர் என வீரராஜேந்திரரின் பெயர் கொண்டே அவரது மகள் வயிற்றுப் பெயரன் அனந்த வர்மன் மூலம் மாறியுள்ளது 
10. நான்கு தலைமுறை சாளுக்கிய சோழரின் ஆட்சிக்குப் பின் வீர ராஜேந்திரரின் வம்சமே சோழர் ஆட்சியைத் தொடர்ந்தது 

இவை அனைத்தும், வரலாற்று ஆய்வாளர்கள் மேலாய்வு செய்யும் போது உறுதிப் படுத்தப் படும் என்று நம்புகிறேன். விஜயாலயன் முதல் மூன்றாம் இராஜேந்திரன் வரையிலான சோழர் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, ஒவ்வொரு மன்னரின், தமிழகம் மற்றும் வெளியிடங்களில் உள்ள  அவர்களின் கல்வெட்டுகளையும் தொகுத்து, தனித்தனி தொகுதிகளாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மட்டும் சிரமம் எடுத்து செய்யக் கூடிய விஷயங்கள், பொதுவானப் பார்வைக்கு வரும் போது, பல்வேறு கருத்துக்களையும் உள்ளடக்கிய உண்மையான முழுமையான சோழர் வரலாறு எழுதப்படும். கல்வெட்டு ஆய்வாளர்களும், காலமும் கைக் கொடுத்தால் இந்தப் பணி செவ்வனே நிறைவேறும்.




#சோழங்கன்யார் 15

Thursday, 25 April 2019

சோழங்கன் யார்? #14

வீரராஜேந்திர சோழகங்கன்  

வீர ராஜேந்திரனுக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவரை சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும், இன்னொருவரை கலிங்க நாட்டு மன்னன் இராஜராஜனுக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். வீர ராஜேந்திரனின் புதல்வி இராஜசுந்தரியே கலிங்க மன்னன் இராஜராஜனை திருமணம் செய்தவர்.  வீர ராஜேந்திரனின் மகள் ராஜசுந்தரிக்கும், கலிங்க மன்னன் இராஜராஜனுக்கும் பிறந்த மகனே புகழ் பெற்ற அனந்தவர்மன். 70 ஆண்டுகள் கலிங்கத்தை ஆட்சி செய்ததும், பூரி ஜகந்நாதர் கோவிலைக் கட்டியதும், 350 வருடங்களுக்கு மேல் இன்றைய ஒரியா பகுதியை அரசாண்ட கீழைகங்க வம்சத்தை தோற்றுவித்ததும் இந்த அனந்த வர்மனே. முதலாம் குலோத்துங்கனுக்கு திறை கட்ட மறுத்து, அதன் மூலம் நடை பெற்ற கலிங்கத்துப் போரும் இந்த அனந்த வர்மனுக்கு எதிராக நிகழ்ந்தவையே.  

 இந்த அனந்த வர்மன் தனது தாய் வழிப் பாட்டன் வீர ராஜேந்திரரனின் பெயரான 'சோழ கங்கன்' என்பதனைக் கொண்டே 'சோழ கங்க தேவன்' என்ற புதியக் குடிப் பெயரினைத் தனது கீழை கங்க வம்சத்திற்கு உருவாக்கியிருக்க வேண்டும்.

இதனை உறுதி செய்வது போல் அனந்த வர்மன், வீர ராஜேந்திர சோழகங்கன் என்னும் பெயருடன் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றிருக்கிறார்.


இதனைப் போன்றே  முதலாம் குலோத்துங்கன் தனது தாய் வழிப் பாட்டன் பெயரால்  இராஜேந்திர சோழன் என அழைக்கப் பட்டுள்ளார்.
இரண்டையும் நோக்கும் போது தாய் வழிப் பாட்டன் பெயரை குடிப்பெயரோடு மகள் வழிப் பெயரன்கள் வைத்துக் கொள்ளும் மரபு அந்தக் காலத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

முதலாம் குலோத்துங்கனின் தாய் அம்மங்காதேவி, வீர ராஜேந்திரரின் சகோதரி. அனந்த வர்மனின் தாய் இராஜசுந்தரி, வீர ராஜேந்திரரின் மகள். எனில், குலோத்துங்கன், அனந்த வர்மனுக்கு சித்தப்பா முறை. குலோத்துங்கனும் தன்னைப் போன்றே தாய் வழி மூலம் சோழ தேசத்தின் உறவினன் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே, அனந்த வர்மன், குலோத்துங்கனுக்கு திறை கட்ட மறுத்திருக்க வேண்டும்.  முதலாம் குலோத்துங்கனுக்கும், அனந்த வர்மனுக்கும் இடையேயான கலிங்கத்துப் போருக்கான பின்னணியும் இதுவாகவே இருக்க வேண்டும்.   

References 

1. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி IV - ப 177
1. தமிழ் நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - P 199
3. Epigraphia Indica XXIX P 46
4. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 395,397

#சோழங்கன்யார் 14

Wednesday, 24 April 2019

சோழங்கன் யார்? #13

சோழங்கன், கங்கை கொண்டான் 

வீர ராஜேந்திரன், சோழலங்கேஸ்வரனாக இலங்கையில் கி.பி.1038-54 காலகட்டத்தில்  ஆட்சி செய்துள்ளார். இந்தக் கால கட்டத்தில், இவர் சோழங்கன் என்றே அறியப் பட்டிருக்கிறார். இலங்கைப் பேராசிரியர் வேலுப் பிள்ளையும், 'சோழ லங்கேஸ்வரன்', 'சோழகங்கன்' இருவரும் ஒருவரே எனக் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் வட பகுதியில், பருத்தித்துறை ---> நெல்லியடி ---> சாவகச்சேரி வீதியின் 5-ஆம் மைல் கல்லின் வடக்கும் தெற்குமாக அமைந்துள்ள பெரிய பகுதி காரணவாய் எனப்படும். இதன் தெற்கு எல்லையில் பரவைக் கடல் உள்ளது. இங்கு கங்கை கொண்டான், சோழங்கன் என்னும் ஊர்கள் அமைந்துள்ளன. கங்கை கொண்டான் என்ற பெயரை வைத்துப் பார்க்கும் போது, இது கங்கை வெற்றிக்குப் பின்னர், இராஜேந்திர சோழன் காலத்திலேயே குறிப்பாக வீர ராஜேந்திரன் சோழ லங்கேஸ்வரனாகப் பதவி வகித்த காலத்திலேயே அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இராஜேந்திரர், கங்கை வெற்றிக்குப் பின் கங்கை கொண்ட சோழன் என்று அறியப் பட்டவர். அதைப் போன்றே கடார வெற்றிக்குப் பின் கடாரங்கொண்டான் என அழைக்கப் பட்டவர். எனில், இங்கு குறிப்பிடப் படும் கங்கை கொண்டான் என்பது வீர ராஜேந்திரரையேக் குறிக்க வேண்டும். அதைப் போன்றே சோழங்கன் என்பதும் வீர இராஜேந்திரரையேக் குறிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இவை இரண்டும் முதலாம் இராஜேந்திரரைக் குறிக்க வேண்டும். எனினும் மற்ற தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, இவை வீர ராஜேந்திரரையே குறிப்பிடுகின்றன  என்பது புலனாகின்றது.

தோம்புகளில் இடம்பெற்றுள்ள “சோழங்கன்புலம்”, “சோழங்கன் வளவு” முதலான காணிப் பெயர்கள் இன்றும் மக்கள் வழக்கிலுள்ளன.

References 

1.  குளக்கோட்டன் தரிசனம் .84-85
2.  இலங்கை இடப்பெயர் ஆய்வு -2  108
3.  பேராசிரியர் இ. பாலசுந்தரம் http://varanyontrium.ca/index.php?option=com_content&view=article&id=195:2014-03-13-16-45-55&catid=98&Itemid=653


#சோழங்கன்யார் 13

Tuesday, 23 April 2019

சோழங்கன் யார்? #12

"உபாசகஜனலங்கார" என்னும் பௌத்த நூல் குறிப்பிடும் சோழ கங்கன் :

பாலி மொழியில் கி.பி. 11-ம் நூற்றாண்டில், மஹாதீர ஆனந்தா என்பவரால் எழுதப்பட்ட உபாசகஜனலங்கார (The Upasakajanalankara) என்னும் பௌத்த நூல், சோழ கங்கன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த நூலைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றினை Dr. பார்னட் அவர்கள் கி.பி. 1901-ல், "The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland"  இதழில் வெளியிட்டிருக்கிறார். அந்த நூல், சோழ கங்கன் என்னும் சோழ அரசன், புத்த துறவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று புத்த விகாரங்களை பண்டு பூமண்டலத்தில் (Pandubhumandale) ஏற்படுத்திக் கொடுத்தார் எனக் குறிப்பிடுகின்றது. இந்த சோழ கங்கன் என்பவர் பாண்டிய நாட்டில் (Pandubhumandale) படிநிகராளியாக இருந்தவர் என்று Dr. பார்னட் குறிப்பிடுகின்றார். மேலும், இதில் குறிப்பிடப்படும் சோழ கங்கன் என்பவர் அனந்த வர்மன் என்பது அவரின் கருத்து. 

தென்னிந்தியக் கல்வெட்டுகள் மூன்றாம் தொகுதியினைப் பதிப்பித்த திரு ஹுல்ஷ் அவர்கள் இதனை மறுத்துள்ளார். பௌத்த நூலில் குறிப்பிடப்படும்  சோழ கங்கன் என்பவர் சோழ வம்சத்தை சேர்ந்தவர், ஆனால் அனந்த வர்மன் கீழை கங்கர் இனம் என்பதனால், இந்த சோழ கங்கன் அனந்த வர்மனாக  இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிடுகிறார். முதலாம் இராஜேந்திரனே இந்த சோழ கங்கன் என்பது ஹுல்ஷ் அவர்களின் முடிவு. இராஜேந்திர சோழன் தனது தந்தையின் கால கட்டத்தில் பாண்டிய நாட்டின் படி நிகராளியாக இருந்திருக்கலாம் என்பது அவருடைய கணிப்பு. மேலும் கங்கைப் படையெழுச்சியின் வெற்றிக்குப் பின் கங்கை கொண்ட சோழன் என்று அறியப்பட்டவர் இராஜேந்திர சோழன். சோழ கங்கன் என்பதும் அவருடைய பெயரே, தன்னுடைய பெயரைக் கொண்டே சோழ கங்கம் என்னும் ஏரியையும் அவர் வெட்டுவித்தார் என்பதும் அவரின் வாதம். முதலாம் இராஜேந்திரன், படி நிகராளியாக இருந்தார் என்றால் அது இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில். சோழ கங்கன் என்னும் பெயர் கங்கை வெற்றிக்குப் பின்னர் வந்தது என்றால், பிற்காலத்தில் வரக் கூடிய பெயரை அவர் முன்னரே சூடியிருக்க வாய்ப்பு இல்லை. கங்கவாடி உள்ளிட்ட பகுதிகளின் படி நிகராளியாக இருந்த போது அந்தப் பெயர் வந்ததென்றால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை. இராஜராஜன், கங்கவாடி உள்ளிட்ட பகுதிகளின் படி நிகராளியாக இராஜேந்திரனை நியமிக்கும் போது பஞ்சவன் மாராயன் என்றும் தண்டமஹா நாயகன் என்றும் தான் குறிப்பிட்டுள்ளார். மேலும் படி நிகராளிகள் சோழ என்னும் அடை மொழியோடு சோழ பாண்டியன், சோழ கங்கன் என இராஜேந்திரன் காலம் முதல் தான் அழைக்கப் பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது இராஜேந்திரராக இருக்க வாய்ப்புக் குறைவு. 

பௌத்த நூல் குறிப்பிடும் சோழ கங்கன், இராஜேந்திர சோழன் இல்லையெனில், பண்டுபூமண்டலம் என்பது பாண்டிய நாட்டைக் குறித்தது எனில், அது இராஜேந்திர சோழரின் மகனான இராஜ மகேந்திரனைக் குறிக்கலாம். இராஜ மகேந்திரன் கி.பி. 1038 முதல் 1052 வரை சோழ கங்கன் என்னும் பெயருடன் படி நிகராளியாக கங்கவாடிப் பகுதியை நிர்வகித்தவர். கி.பி. 1052-ல், இரண்டாம் இராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் இவரே சோழ பாண்டியன் என்னும் பெயருடன் பாண்டிய நாட்டில் படி நிகராளியாக இருந்தவர். எனவே, பௌத்த நூல் குறிப்பிடும் பண்டுபூமண்டலம் என்பதை பாண்டிய நாடு எனக் கருதினோமானால், அதில் குறிப்பிடப்படும் சோழ கங்கன் என்பது இராஜ மகேந்திரனாக இருக்கலாம்.   

ஆனால், ''உபாசகஜனலங்கார'' குறிப்பிடும் பண்டுபூமண்டலம் என்பது இலங்கையையேக் குறிக்க வேண்டும். "உபாசகஜனலங்கார" பாலி மொழியில் எழுதப்பட்ட நூல். பண்டு என்னும் பாலி வார்த்தைக்கு இளஞ்சிவப்பு (அ) காவி உடை என்று பொருள். இது புத்த பிட்சுகள் அணியும் உடையின் நிறம். எனவே, புத்த பிட்சுகள் வசிக்கும் நாடாகிய இலங்கை என்று பொருள் கொள்ளலாம். அல்லது பண்டு என்னும் மன்னர்கள் ஆண்ட நாடான இலங்கை என்று பொருள் கொள்ளலாம். விக்கம பண்டு என்னும் மன்னன் இலங்கையில் கி.பி 1044 முதல் 1047 வரை ரோஹணப் பகுதியை ஆண்டுள்ளார். விக்கம பண்டுவைத் தொடர்ந்து அவரது மகன் பராக்கிம பண்டு கி.பி. 1053 வரை ஆட்சி செய்துள்ளார். இதே கால கட்டத்தில் தான் (கி.பி. 1038- 1052), சோழகங்கன் என்னும் பெயர் கொண்ட வீர ராஜேந்திரன் சோழ இலங்கேஸ்வரனாக இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார். எனவே, உபாசகஜனலங்கார குறிப்பிடும் சோழ கங்கன், வீர ராஜேந்திரனே என்னும் முடிவுக்கு வரலாம்.      


References 

1. The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland for 1901 -   The Upasakajanalankara - L.D.Barnett P 88-89
2. SII Vol III Part I & II Page 22
3. பிற்கால சோழர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தார் ப - 178,199
4. Chola Pandiyan, Chola Gangan, Chola Lankeswaran,Chola Keralan  - N. Sethuraman P 51


#சோழங்கன்யார் 12

Monday, 22 April 2019

சோழங்கன் யார்? #11


வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள்  
 
6. கரி காலன் வீர ராஜேந்திரன் 

வீர ராஜேந்திரனுக்கு கரிகாலன் என்றொரு பெயர் உண்டு. இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் உறையூர் பகுதியின் படி நிகராளியாக இருந்ததனால் இந்தப் பெயர் வந்தது என்றொரு கருத்து இருந்தாலும், கங்கைப் படையெழுச்சியில் ஏற்பட்ட நிகழ்வுகளும் அவருக்கு கரிகாலன் என்றப் பெயர் வரக் காரணிகளாக இருந்திருக்கலாம்.  

கரிகாலன் :

சோழர்களின் இராஜ பரம்பரையைக் குறிப்பிடும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கரிகாலனைப் பின் வருமாருக் குறிப்பிடுகின்றன.

காலத்வாத் கரிணாம் கலேக்ஷ ஸகல க்ஷோணி ப்ருதாம் நாயகம் 
யம் ப்ராஹூ: கலிகாலம் உன்னதிமதாம் அக்ரேஸரம் ஸத்குணை:
காஞ்சீம் ய: ச நவீ சகார கனகை: ஸோபூத் அமுஷ்யான்வயே 
காவேரி தட பந்தன ப்ரகடித ஸ்பீதாத்ம கீர்த்தி: ந்ருப:

இதன் பொருள்:
யானைகளுக்கும் (கரி) கலிகாலத்திற்கும் காலனானதால் கலிகாலன் எனப்பட்ட, அரசர்களுக்கு அரசன் அந்தக் குலத்தில் தோன்றினான். அவன் நற்குணங்களால் உயர்ந்தவர்களில் முதல்வனாகத் திகழ்ந்தவன். காஞ்சி நகரைத் தங்கத்தால் புதுக்கியவன். காவேரியின் கரைகளைக் கட்டித் தன் திரண்ட புகழைக் காட்டிய அரசன்.

கரிகாலன் என்ற சொல்லிற்குப் பலவாறான விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால், திருவாலங்காட்டுச் செப்பேடுகள் யானைகளுக்கும் (கரி) கலிகாலத்திற்கும் காலனானதால் கரிகாலன் என அழைக்கப் பட்டதாகக் குறிப்பிடுகிறது.

கங்கை திக் விஜயத்தின் கரிகாலன்:

மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்றே, கரிகாலன் என்னும் பெயர் வரக் கூடிய நிகழ்வுகள் இரண்டு, திருவாலங்காட்டுச் செப்பேடுகளில், கங்கை திக் விஜயத்தின் போது குறிப்பிடப் படுகின்றது. அவை:

1. கலி ராஜ நியோக காரிணம் ஸபலம் ஸானுஜம் ஒட்டம் ஆஹவே 
ஸ ந்ருபோ வினிஹத்ய வீர்யவான் அத மத்தேப பரிக்ரஹம் சகார 

வீர்யவானான அரசன் (வீர ராஜேந்திரன்)  கலியரசனின் ஆணையை நிறைவேற்றும் ஒட்ட அரசனை தம்பியோடும் படையோடும் கொன்று மதம் கொண்ட யானைகளைக் கைப்பற்றினான்.

2. தத்ர மத்த கஜம் கஞ்சித் அபிதாவந்தம் உச்மு(ன்மு)கம் 
அகாதயத் ஸ்வயம் தேவ: ஸ்வாரூதே(டே)னைவ (ஹ)ஸ்தினா  

அந்தப் போரில் அரசன் தன்னைத் தாக்க ஓடிவந்த யானையைத் தான் ஏறியிருக்கும் யானையைக் கொண்டு தானே கொன்றான்.

இந்த இரண்டு நிகழ்வுகளும், ஒட்ட தேசப் போரின் போது நிகழ்ந்தவை. ஒட்ட தேசம், கங்கைப் படையெழுச்சியின் போது ஏழாவதாக வெல்லப் பட்ட நாடு. இவை இரண்டுமே, வீர ராஜேந்திரரைக் குறிக்கிறது எனில், அவருக்குக் கரிகாலன் என்னும் பெயர் இதன் காரணமாகவே வந்திருக்க வேண்டும்.

வீர ராஜேந்திரரின் சாராலம் செப்பேடுகளும், கரிகாலன் என்னும் பெயருக்கானக் காரணத்தைப் பின் வருமாருக் குறிப்பிடுகின்றது:

வீரசோள ந்ருபதி: கரிகால: காலயன்: கலி பலம் ஸகலம் ஸ:
தர்ம்ம ஸாஸன ஸமுச்சயமுச்சம் வ்யாதநோத் பரதஸார ஸமேதம்  

இதன் பொருள், கரிகாலன் என்னும் பெயருடைய அந்த வீரசோழன், கலியின் முழு பலத்தையும் அழித்தான், அறத்தின் ஆட்சியை உச்சமாக நிலை நிறுத்தினான், பரதனின் சாரத்தைப் பரப்பினான் என்பதாகும்.

சோழர்களில் இதற்கு முன் இமயம் வரைப் படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்பியவர் கரிகாலன். அவரைப் போன்றே கங்கை வரைப் படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்பியவர் வீர ராஜேந்திரன். இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, கரிகாலன் என்ற பெயர்  வீர ராஜேந்திரருக்கு கங்கைப் படையெழுச்சியின் போதே வந்திருக்க வேண்டும் என்று கருதலாம். 

References 

1. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 525,526,974 
2. இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் - சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி  P 92-93   
3. வீர ராஜேந்திர சோழன் வெளியிட்ட சாராலம் செப்பேட்டுத் தொகுதி -  சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி  P 67-68

#சோழங்கன்யார் 11