வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள்
6. கரி காலன் வீர ராஜேந்திரன்
வீர ராஜேந்திரனுக்கு கரிகாலன் என்றொரு பெயர் உண்டு. இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் உறையூர் பகுதியின் படி நிகராளியாக இருந்ததனால் இந்தப் பெயர் வந்தது என்றொரு கருத்து இருந்தாலும், கங்கைப் படையெழுச்சியில் ஏற்பட்ட நிகழ்வுகளும் அவருக்கு கரிகாலன் என்றப் பெயர் வரக் காரணிகளாக இருந்திருக்கலாம்.
கரிகாலன் :
சோழர்களின் இராஜ பரம்பரையைக் குறிப்பிடும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கரிகாலனைப் பின் வருமாருக் குறிப்பிடுகின்றன.
காலத்வாத் கரிணாம் கலேக்ஷ ஸகல க்ஷோணி ப்ருதாம் நாயகம்
யம் ப்ராஹூ: கலிகாலம் உன்னதிமதாம் அக்ரேஸரம் ஸத்குணை:
காஞ்சீம் ய: ச நவீ சகார கனகை: ஸோபூத் அமுஷ்யான்வயே
காவேரி தட பந்தன ப்ரகடித ஸ்பீதாத்ம கீர்த்தி: ந்ருப:
இதன் பொருள்:
யானைகளுக்கும் (கரி) கலிகாலத்திற்கும் காலனானதால் கலிகாலன் எனப்பட்ட, அரசர்களுக்கு அரசன் அந்தக் குலத்தில் தோன்றினான். அவன் நற்குணங்களால் உயர்ந்தவர்களில் முதல்வனாகத் திகழ்ந்தவன். காஞ்சி நகரைத் தங்கத்தால் புதுக்கியவன். காவேரியின் கரைகளைக் கட்டித் தன் திரண்ட புகழைக் காட்டிய அரசன்.
கரிகாலன் என்ற சொல்லிற்குப் பலவாறான விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால், திருவாலங்காட்டுச் செப்பேடுகள் யானைகளுக்கும் (கரி) கலிகாலத்திற்கும் காலனானதால் கரிகாலன் என அழைக்கப் பட்டதாகக் குறிப்பிடுகிறது.
கங்கை திக் விஜயத்தின் கரிகாலன்:
மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்றே, கரிகாலன் என்னும் பெயர் வரக் கூடிய நிகழ்வுகள் இரண்டு, திருவாலங்காட்டுச் செப்பேடுகளில், கங்கை திக் விஜயத்தின் போது குறிப்பிடப் படுகின்றது. அவை:
1. கலி ராஜ நியோக காரிணம் ஸபலம் ஸானுஜம் ஒட்டம் ஆஹவே
ஸ ந்ருபோ வினிஹத்ய வீர்யவான் அத மத்தேப பரிக்ரஹம் சகார
வீர்யவானான அரசன் (வீர ராஜேந்திரன்) கலியரசனின் ஆணையை நிறைவேற்றும் ஒட்ட அரசனை தம்பியோடும் படையோடும் கொன்று மதம் கொண்ட யானைகளைக் கைப்பற்றினான்.
2. தத்ர மத்த கஜம் கஞ்சித் அபிதாவந்தம் உச்மு(ன்மு)கம்
அகாதயத் ஸ்வயம் தேவ: ஸ்வாரூதே(டே)னைவ (ஹ)ஸ்தினா
அந்தப் போரில் அரசன் தன்னைத் தாக்க ஓடிவந்த யானையைத் தான் ஏறியிருக்கும் யானையைக் கொண்டு தானே கொன்றான்.
இந்த இரண்டு நிகழ்வுகளும், ஒட்ட தேசப் போரின் போது நிகழ்ந்தவை. ஒட்ட தேசம், கங்கைப் படையெழுச்சியின் போது ஏழாவதாக வெல்லப் பட்ட நாடு. இவை இரண்டுமே, வீர ராஜேந்திரரைக் குறிக்கிறது எனில், அவருக்குக் கரிகாலன் என்னும் பெயர் இதன் காரணமாகவே வந்திருக்க வேண்டும்.
வீர ராஜேந்திரரின் சாராலம் செப்பேடுகளும், கரிகாலன் என்னும் பெயருக்கானக் காரணத்தைப் பின் வருமாருக் குறிப்பிடுகின்றது:
வீரசோள ந்ருபதி: கரிகால: காலயன்: கலி பலம் ஸகலம் ஸ:
தர்ம்ம ஸாஸன ஸமுச்சயமுச்சம் வ்யாதநோத் பரதஸார ஸமேதம்
இதன் பொருள், கரிகாலன் என்னும் பெயருடைய அந்த வீரசோழன், கலியின் முழு பலத்தையும் அழித்தான், அறத்தின் ஆட்சியை உச்சமாக நிலை நிறுத்தினான், பரதனின் சாரத்தைப் பரப்பினான் என்பதாகும்.
சோழர்களில் இதற்கு முன் இமயம் வரைப் படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்பியவர் கரிகாலன். அவரைப் போன்றே கங்கை வரைப் படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்பியவர் வீர ராஜேந்திரன். இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, கரிகாலன் என்ற பெயர் வீர ராஜேந்திரருக்கு கங்கைப் படையெழுச்சியின் போதே வந்திருக்க வேண்டும் என்று கருதலாம்.
References
1. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 525,526,974
2. இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் - சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி P 92-93
3. வீர ராஜேந்திர சோழன் வெளியிட்ட சாராலம் செப்பேட்டுத் தொகுதி - சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி P 67-68
#சோழங்கன்யார் 11
No comments:
Post a Comment