Saturday, 20 April 2019

சோழங்கன் யார்? #9


வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள்  

2. கங்கைக் கரை பிராமணர்களின் குடியேற்றம் 

திரிலோசன சிவாசாரியாரது சித்தாந்த சாராவளி உரையில், இராஜேந்திரன் கங்கைக் கரையிலிருந்து பல சைவர்களை அழைத்து வந்து காஞ்சி மாநகரிலும், சோழ நாட்டிலும் குடியேற்றினார் என்று கூறப்பட்டுள்ளது.

வீர ராஜேந்திரனின் சாராலம் செப்பேடுகளும், கன்னியாகுமரிக் கல்வெட்டும், அவர் 40,000 பிராமணர்களை சோழ நாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, கங்கவாடி மற்றும் குலூத நாட்டில்  குடியேற்றியதைக் குறிப்பிடுகின்றன. 

பிராமணர்கள் நிறைந்தது கோசல நாடு. இது கங்கைப் படையெடுப்பின் போது வெல்லப்பட்ட நாடு. 

40,000 என்ற எண்ணிக்கையையும், பிராமணர்கள் நிறைந்த கோசல நாட்டிலிருந்தே பிராமணர்கள் குடியேற்றப் பட்டிருக்க வேண்டும் என்பதையும் வைத்துப் பார்க்கும் போது, இது கங்கைப் படையெடுப்பு என்னும் பெரியப் படையெடுப்பின் போதே நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
எனவே, வீர ராஜேந்திரரே கங்கைப் படையெழுச்சியின் வெற்றிக்குப் பின்னர் நாடு திரும்பும் போது கோசல நாடு மற்றும் கங்கைக் கரையிலிருந்து 40,000 பிராமணர்களை அழைத்து வந்து சோழ நாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, கங்கவாடி மற்றும் குலூத நாடுகளில் குடியேற்றியிருக்க வேண்டும். திரிலோசன சிவாசாரியாரது சித்தாந்த சாராவளி உரையிலும், வீர ராஜேந்திரரின் சாரால செப்பேடுகளிலும் குறிப்பிடுப் படும் இந்த நிகழ்வுகள் ஒரே நிகழ்வாகவே இருக்கலாம்.

References 

1. சோழர்கள் - நீல கண்ட சாஸ்திரி P 284
2. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 975
3. Travancore Archaeological Series Vol 3 Part 1 P 148-149

#சோழங்கன்யார் 9

No comments:

Post a Comment