இராஜேந்திரரின் பாண்டிய நாட்டுப் படையெடுப்பு - சோழ பாண்டியன் படி நிகராளியாக முடி சூடல்
ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கு எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018-ல் மேற்கொண்டார். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளி பொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இராஜேந்திரன், இராஜாதிராஜனை சோழ பாண்டியன் என்னும் பட்டத்துடன் பாண்டிய நாட்டை ஆளும்படி படிநிகராளியாக நியமித்தார். இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் உறுதி செயகின்றன.
சோழ பாண்டியர்கள் ஒருவர் பின் ஒருவராக மாறவர்மன், ஜடாவர்மன் என்னும் பாண்டிய மன்னர்களின் மாறிவரும் சிங்காதனப் பெயர்களைச் சூடிக் கொண்டனர். இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், இராஜ மகேந்திரன் மற்றும் வீர ராஜேந்திரனின் மகன் கங்கை கொண்ட சோழன் ஆகிய நால்வரும் வரிசையாக சோழ பாண்டியன் என பதவி வகித்தவர்கள். இவர்களில் யார், எந்த பெயருடன் சோழ பாண்டியன் என ஆட்சி செய்தார்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. சோழ பாண்டியர்களின் முறையானப் பெயர்களைக் கண்டறிய வீர ராஜேந்திரனின் மகனான கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்று உதவுகின்றது. கங்கை கொண்ட சோழன், ஜடாவர்மன் சோழ பாண்டியன் என அந்தக் கல்வெட்டின் மூலம் அறியப் படுகின்றார். எனவே இவருக்கு முன் பதவி வகித்தவர் பாண்டிய மன்னர்களின் ஒழுகலாற்றின் படி மாறவர்மன் என்னும் பெயருடையவராக இருக்க வேண்டும். அதாவது மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன் என்பவர் இராஜ மகேந்திரனாக இருக்க வேண்டும். அவருக்கும் முன்பு பதவி வகித்தவர் ஜடாவர்மன் என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். எனவே இரண்டாம் இராஜேந்திரனே ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன். இவருக்கு முன்பு சோழ பாண்டியனான இராஜாதி ராஜனே மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்.
இந்த மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனை, முதலாம் இராஜேந்திரரின் தம்பி மகன் என கணிக்கிறார் குடந்தை N. சேதுராமன் அவர்கள். கூழம்பந்தலில் உள்ள இராஜாதிராஜனின் 33-ம் ஆட்சியாண்டின் கல்வெட்டின் துணை கொண்டு இந்த முடிவிற்கு வந்துள்ளார். ஆனால், அதில் கூறப்பட்டிருக்கும் மெய் கீர்த்தி, தனது உறவினர்களுக்கு இராஜாதி ராஜன் பதவிகள் கொடுத்துள்ளதைக் குறிப்பிடுகின்றதே தவிர யார் யாருக்கு என்னென்ன பதவிகள் என்று குறிப்பிடவில்லை. மெய் கீர்த்தி குறிப்பிடும், "கன்னி காவலர் தென்னவர் மூவருள் வானகம் இருவருக்கருளி கானகம் ஒருவருக்களித்து" என்னும் தொடரை ராஜாதிராஜனின் உறவினர்களுக்கு அளிக்கப் பட்ட பதவிகளாகக் கருதியுள்ளார் திரு. சேதுராமன் அவர்கள். உண்மையில் இந்த வரிகள், இராஜாதிராஜன் பாண்டியர்களை வென்றதைக் குறிப்பிடும் வரிகள். அவரின் மற்ற மெய் கீர்த்திகளின் துணை கொண்டு இதை ஆராய்ந்தோமானால் அது விளங்கும். அவரது மற்ற மெய் கீர்த்திகள் பின் வருமாறு குறிப்பிடுகின்றன.
"மன்னு பல்லூழியுள் தென்னவர் மூவருள் மாநாபரணன் பொன்முடி ஆநா பரு (மணிப் பசுந்தலை)ப் பொருகளத் தரிந்து வாரளவியகழல் முனைவையிற் பிடித்துத் தந்திவாரணக் கடக் களிற்றால் உதைப்பித்தருளி அந்தமில் பெரும்புகழ் சுந்தர பாண்டியன் ஒற்றை வெண்குடையும் கற்றை வெண் கவரியும் சிங்காதனமும் வெங்களத் திழந்து தன்முடி விழ தலை விரித் தடிதளர்ந்தொடத் தொல்லையில முல்லையூர் துரத்தி".
இராஜாதி ராஜன் மூன்று பாண்டியர்களுடன் போரிட்டு, மூவருள் மானாபரணனை போர்க்களத்தில் தலை அரிந்தும், வீர கேரளன் தலையை யானையைக் கொண்டு காலால் உதைப்பித்துக் கொன்றும், மூன்றாவது பாண்டியனான சுந்தர பாண்டியனை வெண்குடை, சிங்காதனம் ஆகியவற்றை இழந்து மணி முடி கீழே விழத் தலை விரி கோலமாகக் காட்டிற்குள் துரத்தினான் எனக் கூறுகின்றது. இதேக் கருத்தைத்தான் கூழம்பந்தல் கல்வெட்டும், "கன்னி காவலர் தென்னவர் மூவருள் வானகம் இருவருக்கருளி கானகம் ஒருவருக்களித்து" என்று குறிப்பிடுகின்றது. அதாவது பாண்டியர்கள் மூவருள் வானகம் (வானலோகம்) இருவருக்களித்து, கானகம் ஒருவருக்களித்ததாக அதுக் குறிப்பிடுகின்றது. எனவே, மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன், குடந்தை N. சேதுராமன் அவர்கள் குறிப்பிடுவது போல் முதலாம் இராஜேந்திரரின் தம்பி மகன் இல்லை. திருவாலங்காட்டுச் செப்பேடுகள், பாண்டிய நாட்டுப் போருக்குப் பின் (கி.பி. 1018) சோழ பாண்டியன் நியமிக்கப் பட்டதைக் குறிப்பிடுகின்றது. எனவே இராஜாதிராஜனே, மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன் என்னும் முடிவுக்கு வரலாம்.
மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் 20 முதல் 25-ம் ஆண்டு வரையிலான கல்வெட்டுக்களேக் கிடைக்கின்றன. ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் 30-ம் ஆண்டு வரையிலானக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இராஜாதிராஜன் கி.பி. 1018-ல் சோழ பாண்டியனாக முடி சூட்டிய பின் 25 ஆண்டுகள் எனில் கி.பி 1043-ஐ குறிக்கும். இதன் பின் கி.பி. 1044-ல் அவர் சோழ மன்னனாக முடி சூடினார். இரண்டாம் இராஜேந்திரன் கி.பி. 1021-ல் சோழ பாண்டியனாக முடி சூட்டிய பின் 30 ஆண்டுகள் எனில் கி.பி 1051-ஐ குறிக்கும். இதன் பின் கி.பி. 1052-ல் அவர் சோழ மன்னனாக முடி சூடினார். எனவே மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் 25 ஆண்டு கால ஆட்சி இராஜாதிராஜனுடனும், ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் 30 ஆண்டு கால ஆட்சி இரண்டாம் இராஜேந்திரனுடனும் ஒத்துப் போகின்றன.
ஆனால் இராஜாதிராஜனின் முதல் 19 ஆண்டு கால கல்வெட்டுகளும், இரண்டாம் இராஜேந்திரனின் 24 முதல் 29-ம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகளும் கிடைக்கவில்லை. இதற்கானக் காரணங்களை பார்ப்போம்.
இராஜாதிராஜன் கி.பி. 1018-ல் பாண்டிய நாட்டின் வெற்றிக்குப் பிறகு சோழ பாண்டியனாக முடி சூட்டப் பட்டார். அதனைத் தொடர்ந்த கேரள நாட்டின்போர்களிலும், பின்பு கங்கைப் படையெழுச்சிக்கான முன்னேற்பாடுகள், நாட்டு நிர்வாகம் என இளவரசருக்கான வேலைகளை அவர் கவனித்திருக்க வேண்டும்.
கி.பி. 1021-ல் சோழ கேரளனான இவரின் சகோதரர் மனு குல கேசரி இறந்த பின்பு, ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்னும் பெயருடன் இரண்டாம் இராஜேந்திரனு ம் சோழ பாண்டியனாக நியமிக்கப் பட்டார். இரண்டாம் இராஜேந்திரனே, பாண்டிய நாட்டில் நிரந்தமாகத் தங்கி பாண்டிய நாட்டு நிர்வாகத்தினை கவனித்திருக்க வேண்டும். இதனாலேயே, ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் கல்வெட்டுகள் நிறையக் கிடைக்கின்றன. இது போன்ற சூழ்நிலையே, இரண்டாம் இராஜேந்திரனுக்கும் கி.பி. 1044-ல் இளவரசனாகப் பதவியேற்ற பின் நிகழ்ந்திருக்க வேண்டும். இவையே, மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் முதல் 19 ஆண்டுகள் வரையிலான கல்வெட்டுகளும், ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் 24 முதல் 29-ம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகளும் கிடைக்கப் பெறாததற்கு காரணமாக இருக்கலாம்.
மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் 20-ம் ஆண்டு முதலானக் கல்வெட்டுகள் கிடைப்பதற்கு காரணம் அந்தக் கால கட்டத்தில் செய்யப் பட்ட அரசியல் மாற்றங்களே ஆகும். மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியனின் 20-ம் ஆண்டு என்பது கி.பி. 1037/38.
கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கி.பி. 1036-ல் கட்டி முடிக்கப் பட்டதாகக் கருதப் படுகிறது. அதனைத் தொடர்ந்து, சோழ நாட்டின் படி நிகராளிகளின் பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதுவரை சோழ இலங்கேஸ்வரனாகப் பதவி வகித்து வந்த இராஜ மகேந்திரன், சோழ கங்கன் என்னும் பெயருடன் கங்கவாடிப் பகுதியின் படி நிகராளியாக கி.பி. 1037-ல் பதவியேற்றார். சோழ கங்கனான வீர ராஜேந்திரன், சோழ இலங்கேஸ்வரனாக கி.பி. 1038-ல் பதவியேற்றார். இராஜாதிராஜனும் இந்தக் கால கட்டத்தில் தான் சோழ பாண்டியனாக, பாண்டிய நாட்டில் நிரந்தரமாகத் தங்கியிருக்க வேண்டும். இதுவே அவரின் 20-ம் ஆண்டு முதலான சோழ பாண்டியனின் கல்வெட்டுகள் கிடைப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
உத்தேசமான சோழ பாண்டியர்கள் பட்டியல்
1. சோழ பாண்டியன் I - மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன் - இராஜாதிராஜன் - 25 ஆண்டுகள் - கி.பி. 1018 - 1043
2. சோழ பாண்டியன் II - ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் - இரண்டாம் இராஜேந்திரன் - 30 ஆண்டுகள் - கி.பி. 1021 - 1051 (30th year A. R. No. 395 of 1929-30 SII XIV ப 93, Chola Pandiyan-Chola Gangan-Chola Lankesvaran-Chola Keralan - N. Sethuraman P 65 Note 24)
3. சோழ பாண்டியன் III - மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன் - இராஜ மகேந்திரன் - கி.பி. 1054 - 1062
4. சோழ பாண்டியன் IV - ஜடாவர்மன் சோழ பாண்டியன் - கங்கை கொண்ட சோழன் - கி.பி. 1063 - 1069 (A. R. No. 642 of 1916.)
References
1. பிற்கால சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் - ப 158
2. A.R.E 642 of 1916
3. SII Vol 7 No. 1046 P 504
4. SII Vol 24 No. 23 : P 16
5. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 520
6. இராஜேந்திரன் செய்திக் கோவை - பதிப்பாசிரியர் முனைவர் சீ. வசந்தி, ஆசிரியர் வெ. இராமமூர்த்தி P 20
No comments:
Post a Comment