சேர நாட்டுப் படையெடுப்பு - சோழ கேரளன் படி நிகராளியாக முடி சூடல்
இராஜேந்திரன் பாண்டிய நாட்டின் வெற்றியைத் தொடர்ந்து சேர நாட்டின் மீதுப் படையெடுத்துச் சென்று, சேரர்களின் முடியையும், மாலையையும் கைப் பற்றிக் கொண்டு பழந்தீவையும் வெற்றி பெற்றார். யாரும் கிட்டுதற்கரிய அரண்களையுடைய சாந்திமத் தீவில் பரசுராமனால் வைக்கப் பட்டிருந்த செம்பொன் முடியைக் கி.பி.1019-ஆம் ஆண்டு வாக்கில் கைப்பற்றினார்.
இந்த வெற்றிக்குப் பிறகு, இராஜேந்திரன் தனது மகன் மனுகுல கேசரிக்கு சோழகேரளன் என்னும் பட்டம் வழங்கி கேரள நாட்டின் படி நிகராளியாக்கினார். இவரே முதலாவது சோழ கேரளன். பல்வேறு போர்களில் ஈடுபட்ட சோழகேரளன் கி.பி 1021-இல் இறந்தார். இவரது பெயரில் மனு குல கேசரி நல்லூர், சோழ கேரள புரம் முதலிய ஊர்களும், சோழ கேரள விண்ணகரம், மனு குல கேசரீச்சரம் ஆகிய திருமால், சிவன் கோயில்களும் தோன்றியுள்ளன.
இராஜாதிராஜனின் மெய்கீர்த்தி தனது உறவினர்களுக்கு வழங்கப் பட்ட பதவிகளைப் பின் வருமாருக் கூறுகின்றது,
" தன் சிறிய தாதையும் திருத்தமையனுங் குறிகொள் தன்னிளங் கோக்களையும் நெறியுணர் தன்றிரு புதல்வர் தம்மையும் வானவன் வல்லவன் மீனவன் கங்கன் இலங்கையற்கிறைவன் பல்லவன் கன்னகுச்சியர் காவலன் என பொன்னணி சுடர்மணி மகுடஞ்சூட்டி"
இந்த மெய்கீர்த்தி, இராஜாதிராஜன் தனது சிறிய தந்தையை வானவன் என்று முடி சூட்டியதாக கூறுகிறது. வானவன் என்பது சேரர்களைக் குறிப்பிடும் வார்த்தை. இராஜாதிராஜனின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப்படும் மீனவன் என்பது சோழ பாண்டியனையும், கங்கன் என்பது சோழ கங்கனையும், இலங்கையற்கிறைவன் என்பது சோழ இலங்கேஸ்வரனையும், பல்லவன் என்பது சோழ பல்லவனையும் குறிப்பது போல், வானவன் என்பது சோழ கேரளனைக் குறிக்க வேண்டும்.
மனு குல கேசரியின் மரணத்துக்குப் பின் இரண்டாம் இராஜேந்திரன் சோழ பாண்டியனாகவும், முதலாம் இராஜேந்திரரின் தம்பி சோழ கேரளனாகவும் பதவியேற்றிருக்க வேண்டும்.
இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்தி, மகன்களில் ஒருவரை சோழ கேரளனாக முடி சூட்டியதைக் குறிப்பிடுகின்றது. இந்த சோழ கேரளன், மனு குல கேசரியின் மகனாகவும் இருக்கலாம். இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் 6 மகன்களின் பட்டியல் என்பது அவரது சகோதரர்களின் மகன்களையும் சேர்த்ததாகவே இருக்க வேண்டும். ஏனெனில், இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் மகன்களின் பட்டியலில் இடம் பெறும் முடி கொண்ட சோழன் எனப்படும் சுந்தர சோழன், வீர ராஜேந்திரரின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் மகன்களின் பட்டியலிலும் அதே பெயரில் இடம் பெறுகிறார். அதைப் போன்றே வீர ராஜேந்திரரின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் திண் திறல் மைந்தனான கங்கை கொண்ட சோழன் என்பவரும், இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்தியில் குறிப்பிடப் படும் திண் திறல் கடாரம் கொண்ட சோழன் என்பவரும் ஒருவராக இருக்கலாம். திண் என்றால் வலிமை, திறல் என்றாலும் வலிமை. இது வெறும் அடைமொழியாக குறிப்பிடப் பட்டுள்ளதா அல்லது அவரின் தந்தை பெயர் குறித்து வந்துள்ளதா என்பது தெரியவில்லை.
உத்தேசமான சோழ கேரளன் பட்டியல்
1. மனு குல கேசரி - இராஜாதிராஜனின் சகோதரன் - சோழ கேரளன் - கி.பி. 1019 - கி.பி.1021
2. கங்கை கொண்ட சோழன் - முதலாம் இராஜேந்திரரின் தம்பி - சோழ கேரளன் - கி.பி. 1021 - கி.பி. 1052
3. சோழ கேரலன் - இரண்டாம் இராஜேந்திரனின் (அல்லது மனுகுல கேசரியின்) மகன் - சோழ கேரளன் - கி.பி 1052 - ?
References
1. பிற்கால சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் - ப 158-159
2. கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் - மனுகுல கேசரி ஓர் ஆய்வு - பேரா. ம. இராசசேகர தங்கமணி, திருமதி இரா. தமிழ்ப்பொன்னி ப 456-460
3. SII Vol V - No 520
3. SII Vol V - No 520
4. SII Vol 24 - No 23
5. SII Vol VIII - No 1
6. SII Vol VII - No 139
7. SII Vol VII - No 140
8. SII Vol VII - No 881
#சோழங்கன்யார் 5
No comments:
Post a Comment