Thursday, 18 April 2019

சோழங்கன் யார்? #7

இராஜேந்திரரின் கங்கை திக் விஜயம் - சோழ கங்கமும், சோழ கங்கனும் 

இராஜேந்திரனின் கங்கைப் படையெழுச்சிக்குக் காரணம், தான் புதியதாக அமைத்தத் தலைநகரை, கங்கை நீரைக் கொண்டுப் புனிதப் படுத்த எண்ணியதேக் காரணம் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. கங்கை நீரைக் கொண்டு வருவது முதன்மையான நோக்கமாக இருந்தாலும், வட  இந்திய மன்னர்கள், சோழர்ப் படையின் பலத்தை அறியுமாறு செய்வதே இப்படையெடுப்பின் நோக்கமாயிற்று என்கிறார் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரிகள். வட இந்திய மன்னர்களிடம் யாசகம் பெற்றோ அல்லது பகீரதனைப் போன்று தவ வலிமையாலோ கங்கை நீரைக் கொண்டு வர விரும்பாமல், இராஜேந்திரர் தனது தோள் வலிமையின் பேராற்றலால் கங்கை நீரைக் கொண்டு வர விரும்பினார் என்று அறிய முடிகின்றது.    

கங்கை நீரைக் கொண்டு வரும் போது வட இந்திய மன்னர்கள் எதிர்ப்புத் தெரிவித்து தடை செய்யக் கூடும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்த இராஜேந்திரர், அஞ்சா நெஞ்சமும், பெரு வீரமும் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான சோழர்ப் படையை அணி வகுக்கச் செய்தார். அப்பெரும் படையின் தலைவனாகப் புகழ் பூத்த ஒரு மாவீரன் படை நடத்திச் செல்ல தகுந்த ஏற்பாடுகளையும் செய்தார். அந்த மாவீரன் யார் என்ற கேள்விக்கான பதில் தேடுவது ஒரு சவாலான விஷயமாகவே இது வரையில் இருந்துள்ளது. இராஜேந்திரர், போருக்குத் தினவெடுத்த தோள்களுடன் தயார் நிலையில் இருந்தத் தனது களிறுகளில் ஒருவரையும் இந்த திக் விஜயத்திற்கு அனுப்பாமல் விட்டிருப்பாரா என்பது அனைவரின் மனதிலும் இயல்பாக எழும் கேள்வி. இதற்கு முந்தைய போர்களில் மனு குல கேசரியின் பங்களிப்பைப் பார்க்கும் போது, உயிருடன் இருந்திருந்தால் அவரே இந்த விஜயத்தைத் தலைமையேற்றிருக்கக் கூடும் என யூகிக்கலாம். கங்கைப் படையெழுச்சியின் படைத்தலைவன் இராஜாதிராஜன், அரையன் இராஜராஜன் என வெவ்வேறு யூகங்கள் வரலாற்று ஆசிரியர்களால் முன் வைக்கப் படுகின்றன. ஆனால், கிடைத்திருக்கும் தரவுகள் மூலம் இந்த திக் விஜயத்தை மேற்கொண்டது வீரமே துணையாகக் கொண்ட வீரணுக்கன் எனப்படும் வீர ராஜேந்திரரே என்பதை அறிய முடிகின்றது.   

இராஜேந்திரன், தான் வட இந்திய விஜயம் செய்யும் கால கட்டத்தில், சோழ நாட்டில் ஆட்சி அமைதியாக நடை பெற வேண்டித் தக்க ஏற்பாடுகள் செய்து விட்டுப் புறப்பட்டதாகத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகின்றது.  இராஜேந்திரரின் கங்கைப் படையெழுச்சிக்கு முந்தையப் படையெடுப்புகளான இலங்கை, பாண்டிய, சேர மற்றும் சாளுக்கிய படையெடுப்புகள்  இந்தத் தக்க ஏற்பாடுகளின் ஒரு பகுதியேயாகும். 

இராஜேந்திரர் கங்கை திக் விஜயம் செய்யும் கால கட்டத்தில் சோழ நாட்டிலும், சோழர்கள் வென்ற பகுதிகளிலும் ஆட்சி செய்த படி நிகராளிகள் பின்வருமாறு இருந்துள்ளனர்:

இலங்கை - சோழ இலங்கேஸ்வரன் - இராஜ மகேந்திரன் 
பாண்டிய நாடு - சோழ பாண்டியன் - இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன் 
சேர நாடு - சோழ கேரளன் - கங்கை கொண்ட சோழன் 
பல்லவ நாடு - மதுராந்தகன் 

இலங்கையில் சோழ லங்கேஸ்வரனாக இராஜ மகேந்திரனும், பாண்டிய நாட்டில் சோழ பாண்டியனாக இரண்டாம் இராஜேந்திரனும், சேர நாட்டில் சோழ கேரளனாக இராஜேந்திரரின் தம்பி கங்கை கொண்ட சோழனும், தொண்டை மண்டலத்தில் சோழ பல்லவனாக மதுராந்தகனும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ள, சோழ நாட்டின் பாதுகாப்பை இராஜாதிராஜன் வசம் ஒப்படைத்து விட்டு, இராஜேந்திரன், வீரணுக்கன் எனப்பட்ட வீர ராஜேந்திரனுடன் கங்கைப் படையெழுச்சிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். இதில், இராஜேந்திரரின் தம்பி கங்கைப் படையெழுச்சியில் கலந்து கொண்டிருந்தால், இரண்டாம் இராஜேந்திரரே சேர நாட்டுப் பாதுகாப்பினையும் சேர்த்துப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். அதைப் போன்றே மதுராந்தகன் தக்க வயதுடையவராக இல்லாதிருந்தால், இராஜாதிராஜனே சோழ நாடு, தொண்டை மண்டலம் என இரண்டுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்திருக்கக் கூடும். 

கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளுக்கு இதைப் பட்டப் பகுதி வேங்கி நாடு. இது சோழர்களுக்கு உறவினரானக் கீழைச் சாளுக்கியர்கள் ஆண்ட பகுதி என்பதாலும் அதற்குத் தெற்கேயிருந்தப் பகுதி சோழராட்சிக்கு உட்பட்டிருந்ததாலும், வட நாட்டுப் படையெழுச்சி வேங்கி நாட்டின் வடக்கிலிருந்துத் தொடங்கியிருக்க வேண்டும். 

இந்த வட இந்திய விஜயம் கி.பி. 1021-ல் ஆரம்பித்து கி.பி. 1023 வரை ஏறத்தாழ இரண்டாண்டுகள் நடை பெற்றுள்ளது. இந்த நீண்ட கால கட்டத்தில், தான் சோழ நாட்டை விட்டு வெகு தொலைவில் இருப்பது சோழ நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக விளையும் என்பதாலும், முன்னேறிச் செல்லும் சோழ நாட்டுப் படைக்கு ஆபத்து ஏற்படின் தக்க சமயத்தில் உதவுவதற்கு வேண்டியும், இராஜேந்திரன் கோதாவரி ஆற்றங்கரையில் ஒரு படையுடன் நிலை கொண்டு, வீரணுக்கன் தலைமையில் வட நாட்டுப் படையெழுச்சிக்கு சோழர் படையை அனுப்பியிருக்க வேண்டும். 

இராஜேந்திரர் வென்ற வட இந்திய மன்னர்களை ஒழுங்கு படுத்திக் கூறுவதில் திருவாலங்காட்டுச் செப்பேடும், இராஜேந்திரரின் மெய் கீர்த்தியும் முரண் படுகின்றன. வட நாட்டுப் போர் நிகழ்ச்சிகள் முடிவு பெற்றதுடன் எழுதப் பட்டது மெய் கீர்த்தி. இப்படையெழுச்சி முடிவு பெற்று சில ஆண்டுகள் கழித்து எழுதப் பெற்றது திருவாலங்காட்டுச் செப்பேடுகள். எனவே இராஜேந்திரரது மெய் கீர்த்தியில் கூறப் படுகின்ற முறையை ஏற்றுக்கொளவதே சிறந்தது என்பது வரலாற்று அறிஞர்களின் முடிவு.

வீர ராஜேந்திரன் தலைமையிலான சோழர்ப்படை வென்ற பகுதிகள்:

1. வீரம் நிறைந்த போர்ப் படையினரைக் கொண்ட சக்கரக் கோட்டம்
2. மதுரா மண்டலம்
3. வளம் நிறைந்த நாமணைக்கோணம்
4. வெஞ்சின வீரர்கள் உள்ள பஞ்சப்பள்ளி 
5. பசுமையான வயல்களையுடைய  மாசுணி தேசம் 
6. அழிவில்லாதப் பெருமையுடைய ஆதிநகர் 
7. அடர்தியானக் காடுகளால் பாதுகாக்கப் பட்ட ஒட்டர தேசம் 
8. பிராமணர்கள் நிறைந்திருந்த கோசல நாடு 
9. தேனீக்கள் நிறைந்த தண்டபுத்தி
10.  எண்டிசையும் புகழ் பெற்ற தக்காண லாடம்
11. மழை ஓய்வு ஒழிச்சலின்றி பெய்யும் வங்காள தேசம்
12. முத்துக் குளிக்கும் கடலோரத்தில் உள்ள உத்தரலாடம் 

இத்தனை நாடுகளையும் வென்று, சோழர்ப் படை கங்கையை அடைந்தது. இந்தப் படையெடுப்பின் போது, சோழர்ப்படை, யானைகளைப் பாலமாக்கி நதியைக் கடந்தது. மீதியுள்ள படை, முன்புள்ள படையின் யானை, குதிரை, காலாள் முதலியோர்ப் பயன் படுத்தியதால் காய்ந்த நதியைக் காலால் கடந்தது.
கங்கை நீரோடுத் தனது திக் விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பிய வீர ராஜேந்திரனை, கோதாவரி ஆற்றங்கரையில் பெரு மகிழ்ச்சியோடு இராஜேந்திரன் வரவேற்றார். இந்த கங்கை வெற்றியை மிகப் பெரிய வெற்றியாக சோழர்கள் மட்டுமல்லாது, மற்ற மன்னர்களும் கருதியுள்ளனர். கங்கை வெற்றியின் காரணமாக ராஜேந்திரர், கங்கை கொண்ட சோழன் என்றும், வீர ராஜேந்திரர் கங்கை கொண்டான் என்றும் விருதுப்பெயர் பூண்டுள்ளனர்.  

இந்த  கங்கை வெற்றியினைக் கொண்டு, கங்கை கொண்ட சோழ புரத்தில் ஒரு ஏரி உருவாக்கப் பட்டது. நம் நாட்டில் மனிதர்களால் அமைக்கப் பட்ட ஏரிகளில் இதுவே பெரியது. நீரினால் அமைக்கப்பட்ட ஜயஸ்தம்பம் எனப்படும் அந்த ஏரியின் பெயர் சோழ கங்கம்.

இந்த கங்கை வெற்றிக்குப் பின் வீர ராஜேந்திரன், சோழ கங்கன் என்றும் சோழங்கன் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார். எனவே, முதன்முதலில் சோழங்கன் என்று அறியப் பட்டவர் வீர ராஜேந்திரரே என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சோழனார் குடும்பங்களின்  குடிப்பெயரும்  சோழங்கனார் என இவரைத் தொடந்தே மாறியிருக்க வேண்டும். கீழை கங்கர்களின் குடிப் பெயரும் சோழங்க தேவர் என இவரது மகள் வயிற்றுப் பேரன் அனந்த வர்மன் மூலம், இவரதுப் பெயரைக் கொண்டே மாறியுள்ளதையும் அறிய முடிகின்றது. 

கங்கை வெற்றிக்குப் பின்பு, சோழகங்கன் என்னும் பெயரோடு வீர ராஜேந்திரன் கங்கவாடி உள்ளிட்ட பகுதிகளின் படி நிகராளியாக கி.பி. 1037 வரை நிர்வகித்திருக்கக் கூடும். வீர ராஜேந்திரரைத் தொடர்ந்து அவரதுத் தமையன் இராஜ மகேந்திரன் கி. பி. 1037-லும், அவரைத் தொடர்ந்து இவர்களின் தம்பி மதுராந்தகன் கி.பி 1054-லும் சோழ கங்கன் எனப் பதவி வகுத்துள்ளதை முறையே இராஜாதிராஜன் மற்றும் இரண்டாம் இராஜேந்திரனின் மெய் கீர்த்திகளிலிருந்து அறியலாம். 

உத்தேசமான சோழ கங்கர்களின் பட்டியல் :

1. சோழ கங்கன் I - வீர ராஜேந்திரன் - கி.பி. 1023 - 1037
2. சோழ கங்கன் II - இராஜ மகேந்திரன் - கி.பி. 1037- 1054
3. சோழ கங்கன் III - மதுராந்தகன் - கி. பி. 1054 - 1061 

வீர ராஜேந்திரன் கங்கைப் படையெழுச்சியின் படைத் தலைவனாக இருந்திருக்கலாம் என்பதற்கும், சோழகங்கன் என அழைக்கப் பட்டதற்கும் உள்ள தரவுகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். 

References 

1. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 523-526
2. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 280-284
3. முதலாம் இராசேந்திர சோழன் - ம. இராசசேகர தங்கமணி P 107-133, 162
4. தென்னாட்டுப் போர்க்களங்கள் - பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் P 244-251 
5. SII Vol 3 No. 28,29
6. SII Vol 5 No. 647
#சோழங்கன்யார் 7

No comments:

Post a Comment