இராஜேந்திரரின் இலங்கைப் படையெடுப்பு - சோழஇலங்கேஸ்வரன் படிநிகராளியாக முடிசூடல்
இராஜேந்திரர், கி.பி 1017-ல் இலங்கையின் மீதுப் படையெடுத்து, இலங்கையை வெற்றி கொண்டதோடு, இலங்கை மன்னனின் மணி முடியையும், பராந்தக சோழன் காலத்தில் பாண்டியர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த பாண்டியர்களின் சுந்தர மணி முடியையும், இந்திரன் ஆரத்தையும் கைப்பற்றியதோடு, இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனையும் அவர் மனைவியையும் சிறை பிடித்து வந்தார். சிங்கள மன்னன் 12 ஆண்டுகள் சோழ நாட்டு சிறையில் இருந்து பின் கி.பி. 1029-ல் உயிர் நீத்தான்.
இராஜேந்திரர், இலங்கையை வென்ற பிறகு தன் நாடு திரும்பும் போது, இலங்கையில் தன் பிரதிநிதியாக சோழ இலங்கேஸ்வரன் என்னும் பட்டத்துடன் தனது மகன்களில் ஒருவரை நியமித்து இருக்க வேண்டும். அவரின் பெயர் ஜெயங்கொண்ட சலாமேகன்.
சோழர்கள் ஒருவர் பின் ஒருவராக ராஜகேசரி, பரகேசரி என்னும் தங்களின் முன்னோர்களின் பெயர்களை சிங்காதனப் பெயர்களாக சூடிக் கொண்டனர். இதைப் போன்றே சோழ இலங்கேஸ்வரர்களும் ஒருவர் பின் ஒருவராக அபைய சலாமேகன், சங்கப் போதிவர்மன் என்னும் சிங்கள மன்னர்களின் மாறிவரும் சிங்காதனப் பெயர்களைச் சூடிக் கொண்டனர். இந்த ஜெயங்கொண்ட சலாமேகன் என்பவரே முதலாவது சோழ இலங்கேஸ்வரன் என்று கலாநிதி கா. இந்திரபாலா குறிப்பிடுகின்றார். ஆனால், இந்த ஜெயங்கொண்ட சலாமேகன் இராஜேந்திர சோழனின் படைத் தலைவனான மூவேந்த வேளானாக இருக்கக் கூடும் என கணிக்கிறார் அவர். இராஜேந்திரர், தனது மகன்களையே சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழ கங்கன், சோழ இலங்கேஸ்வரன் எனப் பட்டம் கொடுத்து படி நிகராளிகளாக நியமித்துள்ளார். எனவே இந்த சோழ இலங்கேஸ்வரனும் இராஜேந்திரரின் மகனாகவே இருக்க வேண்டும்.
ஜெயங்கொண்ட சோழன் என்பது முதலாம் இராஜாதிராஜனின் பெயர். ஆனால், இராஜாதிராஜன் இதற்குப் பின் கி.பி. 1018-ல் பாண்டியர்களுடன் நடை பெற்றப் போரில் வெற்றி பெற்ற பிறகு, சோழ பாண்டியன் என முடி சூட்டப் பட்டவர். அதன் பின் நடை பெற்ற கேரளப் போரின் வெற்றிக்குப் பிறகு, இராஜேந்திரரின் மற்றொரு மகனான மனு குல கேசரி சோழ கேரளன் என முடி சூட்டப் பட்டவர். கி.பி. 1021-ல் மனு குல கேசரி இறந்த பிறகு, இரண்டாம் இராஜேந்திரனும் சோழ பாண்டியனாக முடி சூட்டப் பட்டுள்ளார். வீர ராஜேந்திரன், இரண்டாவது சோழ இலங்கேஸ்வரனாக கி.பி. 1038-ல் சங்கப் போதிவர்மன் என்னும் பெயருடன் பதவியேற்றவர். எனில், எஞ்சிய இராஜ மகேந்திரனே இங்குக் குறிப்பிடப் படும் ஜெயங்கொண்ட சலாமேகனாக இருக்க வேண்டும். இராஜ மகேந்திரன் கி.பி 1017 - லிருந்து கி.பி 1037 வரை சோழ இலங்கேஸ்வரனாக பதவி வகித்திருக்க வேண்டும்.
இலங்கைப் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள், இலங்கையில் உள்ள கந்தளாய் (கங்க தலா (கங்கை தடாகம்) = கந்தளாய்) சிவன் கோயிலின் ஒரு கல்வெட்டினை கி.பி. 1972-ல் பதிப்பித்தார். அது கந்தளாயான ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து சபையாரால் எழுதப் பட்ட சாசனம். அந்த கல்வெட்டின் வாசகத்தை விளக்கக் குறிப்புகளோடு கா. இந்திரபாலா வெளியிட்டார். இந்தக் கல்வெட்டே முதன் முதலில் சோழ இலங்கேஸ்வரன் பற்றி கண்டறியப்பட்டக் கல்வெட்டு. இதனைப் பற்றி, "சோழ இலங்கேஸ்வரன் யார்" என்னும் விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ள முனைவர் பத்மாவதி அவர்கள், இந்த கல்வெட்டில் குறிப்பிடப் படும் சங்கப் போதிவர்மன், வீர ராஜேந்திரன் தான் என பல்வேறு சான்றுகளைக் கொண்டு நிறுவியுள்ளார்.எனவே இராஜ மகேந்திரனைத் தொடர்ந்து, இரண்டாவது சோழ லங்கேஸ்வரனாக சங்கப் போதிவர்மன் என்னும் பெயருடன் வீர ராஜேந்திரன் கி.பி. 1038 பிப்ரவரியில் பதவியேற்றார்.
இரண்டாம் இராஜேந்திரரின் ஆட்சிக் காலத்தில் கரிகால சோழன் என்று உறையூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை வீர ராஜேந்திரன் சோழ லங்கேஸ்வரனாகவே தொடர்ந்து பதவி வகித்திருக்க வேண்டும். இவருக்குப் பின் இரண்டாம் இராஜேந்திரரின் மகன் உத்தம சோழன், விக்ரம சலாமேகன் என்னும் பெயருடன் சோழ லங்கேஸ்வரனாகப் பதவி வகித்துள்ளார்.
உத்தேசமானசோழஇலங்கேஸ்வரர்கள் பட்டியல் :
1. சோழஇலங்கேஸ்வரன்
I - ஜெயங்கொண்டசலாமேகன் - இராஜமகேந்திரன் - கி.பி. 1017 - 1037
2. சோழஇலங்கேஸ்வரன்
II - சங்கப்போதிவர்மன் - வீரஇராஜேந்திரன் - கி.பி. 1038 - 1054
3. சோழஇலங்கேஸ்வரன்
III - விக்ரமசலாமேகன் - உத்தமசோழன் (இரண்டாம்இராஜேந்திரரின்மகன்) - கி.பி. 1055 - (1070)
References
1. பிற்காலசோழர்வரலாறு
- சதாசிவபண்டாரத்தார் - ப 156-158
2. இலங்கைத்தமிழ்சாசனங்கள் - பேராசிரியர்சி. பத்மநாதன் P
26,63,187
3. அருண்மொழிஆய்வுத்தொகுதி - சோழஇலங்கேஸ்வரன்யார்? - முனைவர்பத்மாவதி ப 192-199
4. கங்கைகொண்டஇராஜேந்திரசோழன் - இராசேந்திரனும்இலங்கையும் - புலவர்முனைவர்செ. இராசுப
415-419
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா ?
ReplyDelete