"உபாசகஜனலங்கார" என்னும் பௌத்த நூல் குறிப்பிடும் சோழ கங்கன் :
பாலி மொழியில் கி.பி. 11-ம் நூற்றாண்டில், மஹாதீர ஆனந்தா என்பவரால் எழுதப்பட்ட உபாசகஜனலங்கார (The Upasakajanalankara) என்னும் பௌத்த நூல், சோழ கங்கன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த நூலைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றினை Dr. பார்னட் அவர்கள் கி.பி. 1901-ல், "The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland" இதழில் வெளியிட்டிருக்கிறார். அந்த நூல், சோழ கங்கன் என்னும் சோழ அரசன், புத்த துறவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று புத்த விகாரங்களை பண்டு பூமண்டலத்தில் (Pandubhumandale) ஏற்படுத்திக் கொடுத்தார் எனக் குறிப்பிடுகின்றது. இந்த சோழ கங்கன் என்பவர் பாண்டிய நாட்டில் (Pandubhumandale) படிநிகராளியாக இருந்தவர் என்று Dr. பார்னட் குறிப்பிடுகின்றார். மேலும், இதில் குறிப்பிடப்படும் சோழ கங்கன் என்பவர் அனந்த வர்மன் என்பது அவரின் கருத்து.
தென்னிந்தியக் கல்வெட்டுகள் மூன்றாம் தொகுதியினைப் பதிப்பித்த திரு ஹுல்ஷ் அவர்கள் இதனை மறுத்துள்ளார். பௌத்த நூலில் குறிப்பிடப்படும் சோழ கங்கன் என்பவர் சோழ வம்சத்தை சேர்ந்தவர், ஆனால் அனந்த வர்மன் கீழை கங்கர் இனம் என்பதனால், இந்த சோழ கங்கன் அனந்த வர்மனாக இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிடுகிறார். முதலாம் இராஜேந்திரனே இந்த சோழ கங்கன் என்பது ஹுல்ஷ் அவர்களின் முடிவு. இராஜேந்திர சோழன் தனது தந்தையின் கால கட்டத்தில் பாண்டிய நாட்டின் படி நிகராளியாக இருந்திருக்கலாம் என்பது அவருடைய கணிப்பு. மேலும் கங்கைப் படையெழுச்சியின் வெற்றிக்குப் பின் கங்கை கொண்ட சோழன் என்று அறியப்பட்டவர் இராஜேந்திர சோழன். சோழ கங்கன் என்பதும் அவருடைய பெயரே, தன்னுடைய பெயரைக் கொண்டே சோழ கங்கம் என்னும் ஏரியையும் அவர் வெட்டுவித்தார் என்பதும் அவரின் வாதம். முதலாம் இராஜேந்திரன், படி நிகராளியாக இருந்தார் என்றால் அது இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில். சோழ கங்கன் என்னும் பெயர் கங்கை வெற்றிக்குப் பின்னர் வந்தது என்றால், பிற்காலத்தில் வரக் கூடிய பெயரை அவர் முன்னரே சூடியிருக்க வாய்ப்பு இல்லை. கங்கவாடி உள்ளிட்ட பகுதிகளின் படி நிகராளியாக இருந்த போது அந்தப் பெயர் வந்ததென்றால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை. இராஜராஜன், கங்கவாடி உள்ளிட்ட பகுதிகளின் படி நிகராளியாக இராஜேந்திரனை நியமிக்கும் போது பஞ்சவன் மாராயன் என்றும் தண்டமஹா நாயகன் என்றும் தான் குறிப்பிட்டுள்ளார். மேலும் படி நிகராளிகள் சோழ என்னும் அடை மொழியோடு சோழ பாண்டியன், சோழ கங்கன் என இராஜேந்திரன் காலம் முதல் தான் அழைக்கப் பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது இராஜேந்திரராக இருக்க வாய்ப்புக் குறைவு.
பௌத்த நூல் குறிப்பிடும் சோழ கங்கன், இராஜேந்திர சோழன் இல்லையெனில், பண்டுபூமண்டலம் என்பது பாண்டிய நாட்டைக் குறித்தது எனில், அது இராஜேந்திர சோழரின் மகனான இராஜ மகேந்திரனைக் குறிக்கலாம். இராஜ மகேந்திரன் கி.பி. 1038 முதல் 1052 வரை சோழ கங்கன் என்னும் பெயருடன் படி நிகராளியாக கங்கவாடிப் பகுதியை நிர்வகித்தவர். கி.பி. 1052-ல், இரண்டாம் இராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் இவரே சோழ பாண்டியன் என்னும் பெயருடன் பாண்டிய நாட்டில் படி நிகராளியாக இருந்தவர். எனவே, பௌத்த நூல் குறிப்பிடும் பண்டுபூமண்டலம் என்பதை பாண்டிய நாடு எனக் கருதினோமானால், அதில் குறிப்பிடப்படும் சோழ கங்கன் என்பது இராஜ மகேந்திரனாக இருக்கலாம்.
ஆனால், ''உபாசகஜனலங்கார'' குறிப்பிடும் பண்டுபூமண்டலம் என்பது இலங்கையையேக் குறிக்க வேண்டும். "உபாசகஜனலங்கார" பாலி மொழியில் எழுதப்பட்ட நூல். பண்டு என்னும் பாலி வார்த்தைக்கு இளஞ்சிவப்பு (அ) காவி உடை என்று பொருள். இது புத்த பிட்சுகள் அணியும் உடையின் நிறம். எனவே, புத்த பிட்சுகள் வசிக்கும் நாடாகிய இலங்கை என்று பொருள் கொள்ளலாம். அல்லது பண்டு என்னும் மன்னர்கள் ஆண்ட நாடான இலங்கை என்று பொருள் கொள்ளலாம். விக்கம பண்டு என்னும் மன்னன் இலங்கையில் கி.பி 1044 முதல் 1047 வரை ரோஹணப் பகுதியை ஆண்டுள்ளார். விக்கம பண்டுவைத் தொடர்ந்து அவரது மகன் பராக்கிம பண்டு கி.பி. 1053 வரை ஆட்சி செய்துள்ளார். இதே கால கட்டத்தில் தான் (கி.பி. 1038- 1052), சோழகங்கன் என்னும் பெயர் கொண்ட வீர ராஜேந்திரன் சோழ இலங்கேஸ்வரனாக இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார். எனவே, உபாசகஜனலங்கார குறிப்பிடும் சோழ கங்கன், வீர ராஜேந்திரனே என்னும் முடிவுக்கு வரலாம்.
References
1. The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland for 1901 - The Upasakajanalankara - L.D.Barnett P 88-89
2. SII Vol III Part I & II Page 22
3. பிற்கால சோழர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தார் ப - 178,199
4. Chola Pandiyan, Chola Gangan, Chola Lankeswaran,Chola Keralan - N. Sethuraman P 51
#சோழங்கன்யார் 12
No comments:
Post a Comment