இராஜேந்திரரின் சாளுக்கிய நாட்டுப் படையெடுப்பு - மனு குல கேசரியின் மரணமும் புதிய படி நிகராளிகள் முடி சூடலும் :
இலங்கை, பாண்டிய மற்றும் சேர நாடுகளை வென்ற பிறகு இராஜேந்திரரின் கவனம் மேலைச்சாளுக்கியம் பக்கம் திரும்பியது. இராஜராஜன், இராஜேந்திரன் மற்றும் அவரது வாரிசுகளுக்கு தகுதி வாய்ந்த எதிரியாக இருந்தது மேலைச் சாளுக்கியமே. எது வரையில் மான்ய கேடத்தைப் பிடிக்கவில்லையோ அதுவரை மலைப் பகுதிகளில் வேட்டையாட மாட்டேன் என இராஜராஜர் சூளுரைக்கும் அளவிற்கு மேலைச் சாளுக்கியர்கள் வலிவுள்ளவர்களாக இருந்தனர். மனுகுல கேசரி, இராஜாதிராஜன், இராஜ மகேந்திரன், மதுராந்தகன் ஆகிய சோழர்களை பலி வாங்கியதும் மேலைச் சாளுக்கியம் தான். அத்தகைய மேலைச் சாளுக்கியமே இராஜேந்திரரின் அடுத்த இலக்காக இருந்தது.
தைல குலத்தின் காலனான இராஜேந்திரன், சோழ பாண்டியனான தன் மகனை மேற்குப் பூமியின் காவலுக்கு வைத்து விட்டு பூமி தேவியின் இடையணியான காஞ்சியை அடைந்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இராஜேந்திரர் ஒவ்வொரு படையெடுப்புக்கு முன்பும் சோழ நாட்டிலும், சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளிலும் பாதுகாப்புக்கு தக்க ஏற்பாடுகள் செய்து விட்டு சென்றதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகின்றது. சோழ கேரளனான மனு குல கேசரி, சாளுக்கிய படையெடுப்பில் பங்கு பெற்ற காரணத்தினாலேயே மேற்குப் பகுதி (சேர நாடு) பாதுகாப்பையும் சோழ பாண்டியன் வசம் இராஜேந்திரர் கொடுத்திருக்க வேண்டும். இராஜேந்திரரின் இதற்கு முந்தைய போர்களிலும் மனு குல கேசரியின் பங்களிப்பு உள்ளதை அறிய முடிகின்றது. மனு குல கேசரியை இராஜேந்திரரின் இரண்டாவது மகனாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால், திருவிந்தளூர்ச் செப்பேடுகள் குறிப்பிடும் இராஜேந்திரரின் முதல் மகன் இராஜராஜன் இவராகவே இருக்கக் கூடும்.
இராஜாதிராஜனின் மெய்கீர்த்தி தனது உறவினர்களுக்கு வழங்கப் பட்ட பதவிகளைக் குறிப்பிடும் போது, சில மெய்கீர்த்திகள் சிறிய தாதையை வானவன் என்றும், திருத்தமையனை வல்லவன் என்றும் குறிப்பிடுகின்றன. வேறு சில மெய் கீர்த்திகள் சிறிய தாதை, திருத்தமையன் இருவருக்கும் வானவன் என்னும் ஒரு பதவியையே பொதுவாகக் குறிப்பிடுகின்றன. இதனை வைத்துப் பார்க்கும் போது முதலாவது மெய் கீர்த்திகளில் குறிப்பிடப் படும் வல்லவன் என்பது வில்லவன் என்றே இருக்கலாம். வில்லவன் என்பது சேரர்களைக் குறிப்பிடும் வார்த்தை. இது உண்மையெனில், மனு குல கேசரி, இராஜாதி ராஜனின் தமையன் என்று பொருள் ஆகும். எனில், திருவிந்தளூர்ச் செப்பேடுகள் குறிப்பிடும், இளமையிலேயே மரணமடைந்த இராஜேந்திரரின் முதல் மகன் இராஜராஜன் இவரே என்னும் முடிவுக்கு வரலாம். கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்த மூன்று அரண்மனைகளில் ஒன்று சோழ கேரளன் மாளிகை என்பதிலிருந்தும் இவரது முக்கியத்துவத்தை அறியலாம்.
இதனைப் போன்றே, இராஜாதிராஜர் இளவரசராக முடி சூட்டப்பட்டாரா என்பதும் ஆய்வுக்குரிய விஷயம். அவர் இளவரசராக முடி சூட்டப் பட்டதற்கு உறுதியான ஆதாரம் ஏதேனும் உள்ளதா அல்லது அவரது ஆட்சியாண்டைக் கொண்டு இளவரசராகப் பதவியேற்றதாகக் கணக்கிடுகிறார்களா எனத் தெரியவில்லை. அவரது ஆட்சியாண்டைக் கொண்டு கணக்கிட்டுள்ளார்கள் எனில், அவர் சோழ பாண்டியனாகப் பதவியேற்றுள்ளதிலிருந்தே ஆட்சியாண்டுக் கணக்கிடப் பட்டிருப்பதாகக் கருதலாம். அவர் இளவரசராக முடி சூட்டப் பட்டிருந்தால், திருவிந்தளூர்ச் செப்பேடுகள் கூறுவது போல், இராஜேந்திரர், தனது மற்றொரு மகனான இரண்டாம் இராஜேந்திரரைத் தனக்கு பின் முடி சூட்ட வேண்டும் என சொல்லியிருக்க வாய்ப்புகள் குறைவு. இரண்டாம் இராஜேந்திரரும், வீர ராஜேந்திரரும் முதலாம் இராஜேந்திரரின் வார்த்தையையும், அமைச்சர்களின் விருப்பத்தையும் மீறி மூத்தவரான இராஜாதிராஜரை முடி சூட்டியிருக்க வேண்டும். வீர ராஜேந்திரரின் மெய் கீர்த்தி குறிப்பிடும் ''அரும்பெறல் தமயனை ஆலவந்தானை இரும்புவி புகழும் ராஜாதி ராஜன் புகழ் ஒலி மணிமுடி சூட்டி'' எனக் குறிப்பிடுவது இந்நிகழ்வாகவும் இருக்கலாம்.
கலி காலத்திற்குக் காலனான இராஜேந்திரன், கலியின் அடைக்கலமான சாளுக்கிய அரசன் ஜெயசிம்மனை வெல்வதற்காக, காஞ்சியிலிருந்து கி.பி. 1021-ஆம் ஆண்டில் பெரும்படையுடன் புறப்பட்டு சென்றதாகத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. சோழேந்திரர்களில் சிங்கம் போன்றவனுடைய படையும் ஜெயசிம்மனுடைய படையும் ஒன்றோடொன்று சினத்தோடு பெரும்போர் புரிந்தன. எண்ணற்ற அம்புகள் மழையால் திசைகள் மறைக்கப் பட்டதாக செப்பேடுகள் கூறுகின்றன. வலிமை பொருந்திய இரட்டபாடி ஏழரை லட்சம் சோழர்கள் வசமாயிற்று. ஜெயசிம்மன் பயந்தும், தன் புகழுக்கு என்றென்றும் பங்கம் ஏற்படும் வகையிலும் புறமுதுகு காட்டி, எங்கேயோ மறைந்து கொண்டான். சோழர்ப் படை வெற்றி பெற்ற போதிலும், சோழ கேரளன் இப்போரில் வீர மரணம் அடைந்தார்.
இப்போர் துங்கபத்திரை எல்லையை நிலையாக்கும் போராகவே விளங்கியது. மேலைச்சாளுக்கியர் அது கடந்து தெற்கிலும், சோழர் அது கடந்து வடக்கிலும் வென்றனராயினும் இரண்டும் நீடிக்கவில்லை. மற்ற நாடுகளை வென்றதைப் போல், இராஜேந்திரர் சாளுக்கியத்தை முழுமையாக வென்றிருந்தால், அவரது வட இந்தியப் படையெழுச்சியின் விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். சோழர் ஆதிக்கம் பெரும்பான்மையான இந்தி ய நிலப் பரப்பை உள்ளடக்கி, இந்திய வரலாறும், சோழர் வரலாறும் மாற்றி எழுதப் பட்டிருக்கக் கூடும்.
இராஜேந்திர சோழனின் கங்கைப் படையெழுச்சிக்கு முந்தைய இலங்கை, பாண்டிய, சேர, சாளுக்கிய நாட்டுப் படையெடுப்புகளில் ஒரு ஒற்றுமை தெரிகின்றது. ஒவ்வொருப் படையெடுப்பின் வெற்றிக்குப் பின்னரும் தனது மகன்களில் ஒருவரை படிநிகராளியாக வெற்றி பெற்ற நாட்டில் முடி சூட்டியிருக்கின்றார். அதைப் போன்றே ஒவ்வொரு படையெடுப்புக்குப் பின்னரும், அடுத்தப் படையெடுப்புக்கு முன்பு ஒரு சிறிய கால இடைவெளி இருந்துள்ளது. இந்த கால இடைவெளி சுமார் 6 மாத காலமாக இருந்திருக்கலாம். படைகளுக்கு தேவையான ஒய்வு கொடுக்கவும், அடுத்த படையெடுப்பிற்கான சரியானத் திட்டமிடலுக்கும் இந்தக் கால கட்டம் பயன் பட்டிருக்க வேண்டும். இதில் பாண்டிய மற்றும் சேர நாட்டுப் படையெடுப்பு மட்டும் தொடர்ச்சியாக நடந்துள்ளதாக அறிய முடிகின்றது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது, இராஜேந்திரர் கங்கைப் படையெடுப்பிற்கான முன்னேற்பாடுகளை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செயல் படுத்தியுள்ளார் என்பது விளங்கும்.
சோழ கேரளனான மனு குல கேசரியின் மரணத்துக்குப் பின் இராஜேந்திரர் புதிய படி நிகராளிகளை நியமித்திருக்க வேண்டும். அவர்கள்:
1. சோழ பாண்டியன் - இரண்டாம் இராஜேந்திரன்
2. சோழ கேரளன் - கங்கை கொண்ட சோழன் (இராஜேந்திரரின் தம்பி)
3. சோழ பல்லவன் - மதுராந்தகன்
இராஜாதிராஜனின் மெய் கீர்த்தி, தனது தம்பியை பல்லவனாக முடி சூட்டினான் எனக் கூறுகின்றது. பல்லவனாக முடி சூட்டப்பட்டவர் மதுராந்தகன் என முனைவர் பத்மாவதி அவர்கள் தனது "சோழ இலங்கேஸ்வரன் யார்" என்னும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். மதுராந்தகன் தக்க வயதுடையவராக இருந்திருந்தால், இந்த சாளுக்கிய வெற்றிக்குப் பின்னர், அவர் சோழ பல்லவனாக முடி சூட்டப் பட்டார் எனக் கருதலாம்.
முதலாம் இராஜேந்திர சோழர் காலம் முதல் வீர ராஜேந்திரன் காலம் வரையிலான உத்தேசமான சோழ பல்லவர்களின் பட்டியல்
1. மதுராந்தகன் - முதலாம் இராஜேந்திர சோழரின் மகன் - சோழ பல்லவன் - (கி.பி. 1021) - கி.பி.1053
2. ?(வீர ராஜேந்திரன் - கரிகால சோழன் - கி.1054 - கி.பி. 1063)*
3. மதுராந்தகன் - வீர ராஜேந்திர சோழரின் மகன் - சோழ பல்லவன் - கி.பி. 1063 - 1067
* கி.1054 - கி.பி. 1063 கால கட்டத்துக்கு முன்பும் பின்பும் சோழ பல்லவர்கள் நியமிக்கப் பட்டுள்ளதை வைத்துப் பார்க்கும் போது, இந்தக் கால கட்டத்திலும் யாரேனும் தொண்டை மண்டலத்தின் படி நிகராளியாக இருந்திருக்க வேண்டும். இரண்டாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் வீர ராஜேந்திரனுக்கு "கரிகால சோழன்" என்னும் பெயர்/பதவி வழங்கப் பட்டுள்ளது. கோழிமன் தொடுகழல் வீர சோழன் என்னும் அடை மொழியைக் கொண்டு இவர் உறையூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கரிகாலனைத் தொடர்பு படுத்தும் இடங்கள் உறையூர் மற்றும் தொண்டை மண்டலம். காடுகளை அழித்து நாடாக மாற்றித் தொண்டை மண்டலம் என்னும் பகுதியை உருவாக்கியவர் கரிகாலன். எனவே வீர ராஜேந்திரன் படி நிகராளியாளாக இரண்டாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உறையூரைத் தனியாகவோ அல்லது கூடுதல் பொறுப்பாகத் தொண்டை மண்டலத்துடன் சேர்த்தோ ஆட்சி செய்து இருக்கலாம். முதலாம் இராஜராஜனின் அண்ணன் ஆதித்த "கரிகாலனும்" தொண்டை மண்டலத்தை நிர்வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
References
1. SII Vol 8 No. 199 : P 98-99
2. SII VOL 5: 520 P 208
3. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 521-523
4. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 277-278
5. தென்னாட்டுப் போர்க்களங்கள் - பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் P 243-244
6. கங்கை கொண்ட இராஜேந்திர சோழன் - மனுகுல கேசரி ஓர் ஆய்வு - பேரா. ம. இராசசேகர தங்கமணி, திருமதி இரா. தமிழ்ப்பொன்னி ப 456-460
#சோழங்கன்யார் 6
No comments:
Post a Comment