வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள்
3. களிறு கங்கை நீருண்ண
சோழர்களின் இராஜ பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும் கலிங்கத்துப் பரணி இராஜேந்திரனின் சிறப்பைப் பின் வருமாருக் குறிப்பிடுகிறது.
“களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில்
காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமும்
கொண்டு மண்டலம் குடையுள் வைத்தது ”
இதற்குப் பொருள் கொண்டவர்கள், இராஜேந்திரனின் யானைப்படைகள் கங்கை நீரை அருந்தியது. மண்ணை என்னுமிடத்தில் கடுஞ்சினத்தோடு கர்ஜனை செய்த இராஜேந்திரன் கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள கடாரம் வெற்றி கொண்டு, ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தான் என்று பொருள் கண்டுள்ளனர். இவ்வாறு பொருள் கொள்ளும் போது , "களிறு கங்கை நீருண்ண" என்ற சொற்றொடர் மற்ற வரிகளுடன் பொருந்தி போகாமல் தொக்கி நிற்பதைக் காணலாம்.
இதனைப் பின் வருமாறுப் பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.
மும்முடிச் சோழனின் களிறு என்று அறியப் பட்டவர் இராஜேந்திர சோழன். அதைப் போன்றே, இங்கும் களிறு என்பதை இராஜேந்திரனின் மகனான வீர ராஜேந்திரன் என்றே பொருள் கொள்ள வேண்டும். இப்போது முழுமையானப் பொருளை பார்ப்போம். இராஜேந்திரனின் களிறு வீர ராஜேந்திரன், கங்கைப் படையெழுச்சியில் வெற்றி பெற, மண்ணை என்னுமிடத்தில் கடுஞ்சினத்தோடு கர்ஜனை செய்த இராஜேந்திரன் கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள கடாரமும் வெற்றி கொண்டு ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தான். அதாவது கங்கை முதல் கடாரம் வரை வெற்றி கொண்டு ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்தவன் என்று பொருள். இதுவேப் பொருத்தமான விளக்கமாக இருக்கும்.
4. ரவி குல திலகஸ்ய ஸைன்யநாத:
கங்கைப் படையெழுச்சிக்கு முந்தைய பாண்டிய நாட்டுப் படையெடுப்பை இராஜேந்திரர் தலைமை தாங்கி சென்றார். அவருடன், அவரது மகன்களில் குறைந்த பட்சம் மனுகுல கேசரியும், இராஜாதிராஜனும் பங்கேற்ற போர் அது. சோழர்கள் மேற்கொண்டப் போர்களில், அரசரோ அல்லது இளவரசரோ பெரும்பாலும் படைத்தலைவனாக இருப்பர். இராஜராஜனின் மாதண்ட நாயகனாக இருந்தவர் இராஜேந்திரர். அதைப் போன்றே இராஜேந்திரரின் தண்ட நாயகர்களாக, இராஜேந்திரரின் மகன்கள் இருந்துள்ளனர். பாண்டிய நாட்டுப் படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிடும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள், படைத்தலைவனை ரவிகுல திலகஸ்ய தண்டநாத: என்று குறிப்பிடுகின்றது. சோழர்கள் சூரிய (ரவி) குலத்தை சேர்ந்தவர்கள். முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், வீர ராஜேந்திரன் உள்ளிட்ட சோழர்கள் ரவி குல திலகம் என அழைக்கப் பட்டவர்கள். எனவே, ரவிகுல திலகஸ்ய தண்டநாத: என்பது, ரவிகுல திலகம் என்பதை இராஜராஜனாகக் கொண்டு முதலாம் இராஜேந்திரரையோ அல்லது ரவிகுல திலகம் என்பதை இராஜேந்திரனாகக் கொண்டு மனுகுல கேசரியையோ அல்லது இராஜாதிராஜனையோ குறிக்க வேண்டும். நீலகண்ட சாஸ்திரிகள் தனது "The Pandyan Kingdom" என்னும் நூலில், ரவிகுல திலகஸ்ய தண்டநாதனை, இராஜேந்திர சோழன் எனக் குறிப்பிடுகிறார்.
இதைப் போன்றே, கங்கைப் படையெழுச்சியின் படைத் தலைவனைக் குறிப்பிடும் போது, ரவி குல திலகஸ்ய சைன்யநாத: என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இது இராஜேந்திரரின் மகனான வீர ராஜேந்திரனையேக் குறிக்க வேண்டும். அதைப் போன்றே சிபிராஜ தண்டநாத: என்பதும் வீர ராஜேந்திரரையேக் குறிக்க வேண்டும்.
5. தோல்வியுற்ற வேந்தர் தலைகளில் கங்கைநீர் நிரப்பப் பட்ட குடங்கள்
இராஜேந்திரரின் கங்கைப் படையெழுச்சியை சிறப்பித்துக் கூறும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள், தோல்வியுற்ற வேந்தர் தலைகளில் கங்கைநீர் நிரப்பப் பட்ட குடங்கள் கொண்டு வரப் பட்டதைக் குறிப்பிடவில்லை. வீர ராஜேந்திரரின் கன்னியாகுமரிக் கல்வெட்டே இதனை நேரடியாகக் குறிப்பிடுகின்றது. எனில், தான் பெற்ற வெற்றியின் சிறப்பை அறிந்து அதில் உள்ள விஷயங்களைத் தவறாமல் குறிப்பிட விரும்பிய வீர ராஜேந்திரன் இந்த நுணுக்கமான விஷயத்தையும் கவனத்தில் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்.
References
1. கலிங்கத்துப் பரணி - புலவர் பி.ரா. நடராசன் P 112
2. The Pandyan Kingdom - K.A.Neelakanda Sasthiri - P -108
3. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநாராயணன் P 520,524,525, 728, 973
4. இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் - சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி P 83,90, 91
5. வீர ராஜேந்திர சோழன் வெளியிட்ட சாராலம் செப்பேட்டுத் தொகுதி - சரித்திரச் செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி P 63
6. Travancore Archaeological Series Vol 3 Part 1 P 146,157
#சோழங்கன்யார் 10
No comments:
Post a Comment