கங்கை கொண்ட சோழபுரம்
முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் சோழர்களின் தலைநகரம் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழ புரத்திற்கு மாற்றப் பட்டது. அதன் பின்பு, மூன்றாம் இராஜேந்திரனுடன் சோழர்களின் ஆட்சி முடியும் வரையில் கங்கை கொண்ட சோழபுரமே, சோழர்களின் தலை நகராக இருந்தது.
சோழர்களின் தலை நகரம் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழ புரத்திற்கு மாற்றப் பட்டதற்கு ஆய்வாளர்கள் வெவ்வேறு காரணங்களை யூகிக்கின்றனர். அவை,
1. சோழர்களின் குல தெய்வம் தில்லை சிவன் கோயிலுக்கு அருகில் தலை நகரம் அமைய வேண்டும் என்பது .
2. அடிக்கடி போர் நடப்பதனால், தஞ்சையின் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன.
3. சோழர்களின் கடற்படை, கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகில் உள்ள கொள்ளிடம் மூலம் எளிதாக அணுக முடியும் என்பது.
ஆனால், கோயிலொழுகு என்னும் நூல், சோழர்களின் தலைநகரம் மண்மாரிப் பெய்து மூழ்கிப் போனதால், சோழர்கள் கங்கை கொண்ட சோழ புரத்திற்கு இடம் பெயர்ந்ததாகக் குறிப்பிடுகின்றது. எனவே, இயற்கைப் பேரழிவாலேயே, சோழர்கள் தஞ்சையை விட்டு, அந்த இயற்கைப் பேரிடரால் அதிகம் பாதிக்கப் படாதப் பகுதியான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடி பெயர்ந்திருக்க வேண்டும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நகரினை கங்கை நீரைக் கொண்டுப் புனிதப் படுத்த இராஜேந்திரர் எண்ணியிருக்க வேண்டும். இராஜேந்திர சோழரின் கங்கைப் படையெழுச்சிக்குக் காரணம், தான் புதியதாக அமைத்தத் தலைநகரை கங்கை நீரைக் கொண்டுப் புனிதப் படுத்த எண்ணியதே என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
இராஜேந்திரரின் கங்கைப் படையெழுச்சி மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு துல்லியமாக செயல்படுத்தப் பட்ட ஒன்று. இராஜேந்திரர் காலத்து முக்கியமான படையெடுப்புகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. கங்கைப் படையெழுச்சி
2. கடாரப் படையெடுப்பு
கங்கைப் படையெழுச்சியின் முன்னேற்பாடுகள்
கங்கைப் படையெழுச்சிக்கு முன்பு இராஜேந்திரர் மேற்கொண்ட இலங்கை, பாண்டிய, சேர மற்றும் சாளுக்கியப் படையெடுப்புகள், கங்கைப் படையெழுச்சியின் முன்னேற்பாடாகவேக் கருதலாம். ஒரு தேர்ந்த சதுரங்க ஆட்டத்தைப் போன்றே இந்தப் படையெடுப்புகளை நடத்தியுள்ளார் இராஜேந்திரர். இந்த சதுரங்க ஆட்டத்தின் ராஜா, ராணி இரண்டுமே இராஜேந்திர சோழர் தான். ஒவ்வொருப் படையெடுப்பிலும் களிறுகள் மட்டுமே மாறியிருக்கின்றன.
மும்முடிச்சோழனின் களிறு என்று அழைக்கப் பட்டவர் இராஜேந்திரன். இராஜேந்திரனின் களிறுகள் ஏழு. இராஜேந்திரர் சோழ மன்னராகப் பதவியேற்ற போது, அவருக்கு 50 வயது இருக்கக் கூடும் என்று குறிப்பிடுகிறார் டாக்டர் இராசமாணிக்கனார். முதலாம் ராஜாதிராஜன் காலத்தில் ராஜேந்திரரின் கடைசி மகனுக்குப் பதவி வழங்கப் படாமல், இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் அவருக்குப் பதவி வழங்கப் பட்டதை வைத்துப் பார்க்கும் போது, அதற்கு முந்தைய கால கட்டத்தில் அவர் மிகவும் இளைய வயதுடையவராக இருந்திருக்கலாம் என முனைவர் பத்மாவதி அவர்கள் தன்னுடைய இலங்கேஸ்வரன் யார் என்னும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இராஜேந்திரரின் மற்ற மகன்கள் கிட்டத்தட்ட சம வயதுடையவர்களாகவே, அதாவது முன்னவருக்கும் பின்னவருக்கும் ஓரிரு வயது வித்தியாசம் உடையவர்களாகவே இருந்துள்ளனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இராஜேந்திரரின் கங்கைப் படையெழுச்சிக்கு முன்பு, குறைந்த பட்சம் அவரது ஐந்து மகன்களான மனு குல கேசரி, இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், இராஜ மகேந்திரன் மற்றும் வீர ராஜேந்திரன் ஆகியோர் ஆட்சிக்கும், படைத்தலைமைக்கும் தயார் நிலையிலேயே இருந்துள்ளனர் என்பது நன்கு விளங்கும்.
References
1. கோயிலொழுகு - P 5
2. சோழர் செப்பேடுகள் - புலவர் வே. மகாதேவன், முனைவர். க. சங்கரநா ராயணன் P 523
3. சோழர் வரலாறு - இராசமாணிக்கனார் P -212
4. அருண்மொழி ஆய்வுத் தொகுதி - சோழ இலங்கேஸ்வரன் யார்? - முனைவர் ஆ.பத்மாவதி P 195
சோழங்கன் யார்? #2
No comments:
Post a Comment