சோழர்களுக்கு வழங்கப் படும் பெயர்களில் ஒன்று சோழங்கன் என்பது.தமிழ் அகராதிகள் சோழங்கன் என்றால் சோழன் என்று பொருள் தந்தாலும், அது எந்த கால கட்டத்தில் தோன்றிய சொல், எந்த சோழனை குறித்து வந்த சொல் என்பதற்கு விளக்கங்கள் இல்லை.
1. முதன் முதலில் சோழங்கன் என அறியப் பட்டவர் யார்?
2. கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள சோழனார் குடும்பங்களின் குடிப் பெயர் சோழங்கனார் என எந்த சோழனுக்குப் பிறகு மாற்றமடைந்தது?
3. அனந்த வர்மன் முதலான கீழை கங்கர்களின் குடிப் பெயர் எந்த சோழனின் பெயரைக் கொண்டு சோழகங்க தேவர் என மாற்றமடைந்தது?
4. முதலாம் இராஜேந்திரனின் கங்கைப் படையெழுச்சிக்குத் தலைமை தாங்கிய படைத்தலைவன் யார்?
இந்த கேள்விகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்றாகவே இருக்கலாம். இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்து கொள்ள, சோழ கங்கன் பற்றிய முழுமையான ஆய்வு தேவை.
சோழங்கன் என்பது நேரடியாக சோழன் என்னும் பொருள் தந்தாலும்(அங்கன் = மகன்), சோழகங்கன் என்பதே சோழங்கன் என மாறியுள்ளதாகத் தரவுகளின் மூலம் அறிய முடிகின்றது. முதலாம் இராஜேந்திர சோழரின் கங்கை வெற்றிக்குப் பின்னரே சோழங்கன் என்னும் சொல் பழக்கத்தில் வந்திருக்க வேண்டும்.
முதலாம் இராஜேந்திர சோழன் காலம் முதல், முதலாம் குலோத்துங்க சோழன் பதவியேற்கும் வரை சோழ இளவரசர்கள், சோழ இலங்கேஸ்வரன், சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழ கங்கன், சோழ பல்லவன் உள்ளிட்டப் பதவிகளை வகித்துள்ளனர்.
முதலாம் இராஜராஜன் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தைக் கொண்டு, முதலாம் இராஜேந்திரன், சோழரின் பெருமையை உச்சிக்குக் கொண்டு சென்றது இந்தக் கால கட்டத்தில் தான். இதற்கு உறு துணையாக இருந்தது மும்முடிச் சோழனின் களிறு எனப்படும் இராஜேந்திர சோழனின் களிறுகள்.
இந்தக் கால கட்டத்து முழுமையான வரலாற்றையும், முதலாம் இராஜேந்திரனின் கங்கைப் படையெழுச்சிக்குத் தலைமை தாங்கிய படைத்தலைவன் யார் என்பது பற்றியும், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நிகழ்ந்த கலிங்கத்துப் போருக்கான பின்புலம் பற்றியும், நான்கு தலைமுறை சாளுக்கிய சோழர்களின் முடிவும் அதன் பிறகுத் தொடர்ந்த நேரடிச் சோழர் ஆட்சி பற்றியும் தெரிந்து கொள்ள சோழ இலங்கேஸ்வரன், சோழ கங்கன் உள்ளிட்ட அனைத்துப் பதவிகள் பற்றியும் விரிவாக ஆய்வு ஆய்வு செய்வது அவசியம்.
இதைப் பற்றிய முழுமையான நூல் இது வரை வரவில்லை. குடந்தை N. சேதுராமன் அவர்கள் எழுதிய Chola Pandiyan, Chola Gangan, Chola Lankeswaran,Chola Keralan என்னும் நூலும், முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் எழுதிய சோழ கேரளன் என்னும் இரு நூல்கள் மட்டுமே இதைப் பற்றிய தனி நூல்களாக வெளி வந்துள்ளன. இவையல்லாமல், கலாநிதி கா. இந்திரபாலா, முனைவர் ஆ. பத்மாவதி ஆகியோர் சோழ இலங்கேஸ்வரன் பற்றி தனிக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சோழ பாண்டியன் பற்றி, பெரும்பாலான குறிப்புகள் கிடைத்தாலும் மற்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அரிதாகவேக் கிடைக்கின்றன.
இது வரை கிடைத்திருக்கும் தரவுகளைக் கொண்டு, நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை, பிள்ளையார் சுழியாக அடுத்தடுத்த பதிவுகளில் இடுகிறேன். இதில் ஆர்வமுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் அதனை மீளாய்வும், மேலாய்வும் செய்யட்டும்.
சோழ இலங்கேஸ்வரன், சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழ பல்லவன், சோழ கங்கன் பற்றிய சில நூல்கள்,
1. Chola Pandiyan, Chola Gangan, Chola Lankeswaran,Chola Keralan - N. Sethuraman
2. சோழ கேரளன் - முனைவர் இல. தியாகராஜன்
3. பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுமலர் - சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கந்தளாய்க் கல்வெட்டு - கலாநிதி கா. இந்திரபாலா
4. அருண்மொழி ஆய்வுத் தொகுதி - சோழ இலங்கேஸ்வரன் யார்? - முனைவர் ஆ.பத்மாவதி
5. இலங்கைத் தமிழ் சாசனங்கள் - பேராசிரியர் சி. பத்மநாதன்
6. The Cholas Mathematics Re- Constructs the Chronology - N. Sethuraman
சோழங்கன் யார்? #1
சோழங்கன் யார்? #1
No comments:
Post a Comment