வீரராஜேந்திர சோழகங்கன்
வீர ராஜேந்திரனுக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவரை சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும், இன்னொருவரை கலிங்க நாட்டு மன்னன் இராஜராஜனுக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். வீர ராஜேந்திரனின் புதல்வி இராஜசுந்தரியே கலிங்க மன்னன் இராஜராஜனை திருமணம் செய்தவர். வீர ராஜேந்திரனின் மகள் ராஜசுந்தரிக்கும், கலிங்க மன்னன் இராஜராஜனுக்கும் பிறந்த மகனே புகழ் பெற்ற அனந்தவர்மன். 70 ஆண்டுகள் கலிங்கத்தை ஆட்சி செய்ததும், பூரி ஜகந்நாதர் கோவிலைக் கட்டியதும், 350 வருடங்களுக்கு மேல் இன்றைய ஒரியா பகுதியை அரசாண்ட கீழைகங்க வம்சத்தை தோற்றுவித்ததும் இந்த அனந்த வர்மனே. முதலாம் குலோத்துங்கனுக்கு திறை கட்ட மறுத்து, அதன் மூலம் நடை பெற்ற கலிங்கத்துப் போரும் இந்த அனந்த வர்மனுக்கு எதிராக நிகழ்ந்தவையே.
இந்த அனந்த வர்மன் தனது தாய் வழிப் பாட்டன் வீர ராஜேந்திரரனின் பெயரான 'சோழ கங்கன்' என்பதனைக் கொண்டே 'சோழ கங்க தேவன்' என்ற புதியக் குடிப் பெயரினைத் தனது கீழை கங்க வம்சத்திற்கு உருவாக்கியிருக்க வேண்டும்.
இதனை உறுதி செய்வது போல் அனந்த வர்மன், வீர ராஜேந்திர சோழகங்கன் என்னும் பெயருடன் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றிருக்கிறார்.
இதனைப் போன்றே முதலாம் குலோத்துங்கன் தனது தாய் வழிப் பாட்டன் பெயரால் இராஜேந்திர சோழன் என அழைக்கப் பட்டுள்ளார்.
இரண்டையும் நோக்கும் போது தாய் வழிப் பாட்டன் பெயரை குடிப்பெயரோடு மகள் வழிப் பெயரன்கள் வைத்துக் கொள்ளும் மரபு அந்தக் காலத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
முதலாம் குலோத்துங்கனின் தாய் அம்மங்காதேவி, வீர ராஜேந்திரரின் சகோதரி. அனந்த வர்மனின் தாய் இராஜசுந்தரி, வீர ராஜேந்திரரின் மகள். எனில், குலோத்துங்கன், அனந்த வர்மனுக்கு சித்தப்பா முறை. குலோத்துங்கனும் தன்னைப் போன்றே தாய் வழி மூலம் சோழ தேசத்தின் உறவினன் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே, அனந்த வர்மன், குலோத்துங்கனுக்கு திறை கட்ட மறுத்திருக்க வேண்டும். முதலாம் குலோத்துங்கனுக்கும், அனந்த வர்மனுக்கும் இடையேயான கலிங்கத்துப் போருக்கான பின்னணியும் இதுவாகவே இருக்க வேண்டும்.
References
1. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி IV - ப 177
1. தமிழ் நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - P 199
3. Epigraphia Indica XXIX P 46
4. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 395,397
#சோழங்கன்யார் 14
No comments:
Post a Comment