வீர ராஜேந்திரன் வட இந்திய விஜயத்தினைத் தலைமையேற்று சென்றிருப்பதற்கு கிடைக்கும் தரவுகள்
1. வீரணுக்கன் விஜயம்
"பண்டைய காலத்தில் கல்வெட்டுகளில் மட்டும் குறிப்பிடப்பட்டு மறைந்து போன நூல்கள் உண்டு. மறைந்து போன நூல்கள் பற்றி பழங்காலத் தெளிவுரை, பதவுரை, பொழிப்புரைகளில் முன்னைய கவிதை நூல்கள், ஆசிரியப்பாவின் இயல்புடைய நூற்பாவாகிய சூத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து சிறிய ஒரு மேற்கோள்கள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து அழிந்து போன நூலகள் மிகச் சிறந்தவை என்று முடிவு செய்யலாம். எந்த நாட்டின் பழைய இலக்கியத்திற்கும் இந்த கருத்து ஓரளவு பொருந்தும். ஆனால் தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் இவ்வகையில் ஏற்பட்ட நஷ்டம் மிகப் பெரியது, பேரிழப்பே என்று தங்கு தடையின்றி சொல்லலாம்."
தன்னுடைய சோழர்கள் என்னும் நூலில், திரு நீலகண்ட சாஸ்திரிகள் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
அவ்வாறு தொலைந்து போன சோழர் காலத்து மிக முக்கியமான நூல்களிள் சில:
இராஜராஜ விஜயம்
இராஜராஜேஸ்வர நாடகம்
வீரணுக்கன் விஜயம்
பண்டு பரணி
கூடல் சங்கமத்துப் பரணி
கொப்பத்துப் பரணி
தமிட்பரணி
இதில் வீரணுக்க விஜயம் என்னும் நூலைப் பற்றி பார்ப்போம்.
திருவாரூர்க் கோயிலின் முதல் பிரகாரத்தில் தெற்குத் திருமதிலில் உள்ள இராஜேந்திர சோழனின் 13-ஆம் ஆட்சியாண்டின் 202-ஆம் நாள் கல்வெட்டொன்று, வீரணுக்க விஜயம் பற்றிக் குறிப்பிடுகிறது. திருவாரூர்க் கோயிலின் ஒரு மண்டபத்தில் பூங்கோயில் நாயகத் தலைக்கோலி என்பவள் ஆடிய நடனத்தை அரசன் பார்த்துக் கொண்டிருந்த போது, மகனான வீர சோழ அணுக்கரை கௌரவிப்பதற்காக வீரணுக்கன் விஜயம் என்னும் காப்பியம் இயற்றிய பூங்கோயில் நம்பிக்கு, வாயாற்றூர் என்னும் பிரம்ம தேய கிராமத்தில் இறையிலி நிலத்தை இராஜேந்திர சோழன் விட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.
வீரணுக்கன் என்பது வீர ராஜேந்திரரின் பெயர். இராஜேந்திர சோழனின் 13-ஆம் ஆட்சியாண்டின் 202-ஆம் நாள் என்பது, கங்கை திக் விஜயம் முடிந்த பின்பும், கடாரப் படையெடுப்புக்கு முந்தைய காலகட்டமும் ஆகும். ஒரு காப்பியம் பாடும் அளவுக்கு, இராஜேந்திர சோழனின் 13-ஆம் ஆட்சியாண்டுக்கு முந்தைய வீர ராஜேந்திரரின் திக் விஜயம் என்பது வட இந்திய விஜயமாகவே இருக்கும்.
வீரணுக்க விஜயம் என்னும் நூல் கிடைத்திருந்தால், வீர ராஜேந்திரன் கங்கைப் படையெழுச்சிக்குத் தலைமை தாங்கியதற்கு மிகச் சிறந்த சான்றாக இருந்திருக்கும். இருப்பினும் நூலின் தலைப்பையும், அது எழுதிய கால கட்டத்தையும் நோக்கும் போது, இது கங்கை விஜயத்தையே குறிக்க வேண்டும். (அப்படி இல்லையெனில், இராஜேந்திரரும் சோழர்ப் படைகளும் மிக முக்கியமான வட இந்தியப் படையெடுப்பில் ஈடுபட்டிருக்கும் காலத்தில், வீர ராஜேந்திரன் வேறு நாடுகளில் திக் விஜயம் மேற்கொண்டார் என்று பொருள் கொள்ள வேண்டும். அப்படி போர்கள் நடந்ததற்கான தரவுகள் ஏதும் இல்லை.) எனவே, வீரணுக்கன் விஜயம் என்னும் நூல், வீர ராஜேந்திரன் தலைமை தாங்கி நடத்திய வட இந்திய திக் விஜயத்தை பற்றி இயற்றப்பட்டதகாகவே இருக்க வேண்டும். மேலும், இதற்கு முன் இராஜராஜருக்கு மட்டுமே இராஜராஜ விஜயம் என்னும் காப்பியம் பாடப் பட்டுள்ளது. அவருக்கு அடுத்து இராஜேந்திரருக்கு காப்பியம் படைக்காமல் வீர ராஜேந்திரருக்கு ஒரு காப்பியம் படைக்கப் பட்டிருக்கிறது எனில், அதுவும் இராஜேந்திரன் காலத்திலேயே கங்கைப் படையெழுச்சி முடிந்தவுடன் இயற்றப் பட்டிருக்கிறது எனில் அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
எனவே, வீர ராஜேந்திரன் கங்கைப் படையெழுச்சிக்குத் தலைமை தாங்கினார் என்பதற்கு இதனை முக்கியமான சான்றாகக் கொள்ளலாம்.
References
1. தமிழ் நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - P 353
2. சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி P 874
3. மறைந்து போன தமிழ் நூல்கள் -மயிலை சீனி. வேங்கடசாமி P 138-139
4. திருவாரூர் - வித்வான் தண்டபாணி தேசிகர் - P 42
5. ARE 548 of 1904
No comments:
Post a Comment