"வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்" என்ற வீரராஜேந்திரனின் மெய் கீர்த்தி கூறும் ஒற்றை வரி, மிக நீண்ட வரலாறு உடையது. கங்கை திக்விஜயத்தில் ஆரம்பித்த அவரது போர்ப் பயணம், முதலாம் இராஜேந்திரன், இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், இராஜ மகேந்திரன் மற்றும் தன்னுடைய ஆட்சியின் இறுதிக் காலம் வரை பெரும்பாலான நேரங்களில் போர்க் களத்திலேயே கழிந்துள்ளது. கங்கைப் படையெழுச்சியின் படைத்தலைவன், தந்தையைப் போன்றே கடல் கடந்து கடாரம் வென்றவன் என்னும் புகழுக்குரியவர். மனுகுல கேசரி, இராஜாதிராஜன், இராஜ மகேந்திரன், மதுராந்தகன் எனத் தன்னுடைய நான்கு சகோதரர்களின் உயிர் குடித்த சாளுக்கியத்தை ஐந்து முறை வென்று, தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம் முடித்தவன் என்ற பெருமைகளை உடையவர். கரிகாலன், இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோருக்கு இணையான பெரு வீரனெனத் திகழ்ந்தவர் வீர ராஜேந்திரர்.
சகல புவனாசிரியன், ஸ்ரீ மேதினி வல்லவன், மகாராஜாதிராஜன், பரமேசுவரன், பரம பட்டாரகன், ரவிகுல திலகன், சோழகுல சேகரன், பாண்டிய குலாந்தகன், ஆகவமல்லகுல காலன், ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்ட ராஜசேகரன், ராஜாஸ்ரயன், ராஜராஜேந்திரன், வல்லப வல்லபன், வீர சோழன், கரிகாலச்சோழன், வீரன் இரட்ட ராஜகுல காலன், வீரணுக்கன், சோழ கங்கன், சோழங்கன், கங்கை கொண்டான், சோழ லங்கேஸ்வரன், ஹரசரண சேகரன் என்பவை இவருக்கு வழங்கப் பட்ட பெயர்கள். வீரணுக்கன் விஜயம், பண்டு பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, வீர சோழியம் என நான்கு நூல்கள் ஒரு சோழன் மீது இயற்றப்பட்ட நிகழ்வும், இவர் ஒருவருக்கே இருக்கக் கூடும். பழம்பெரும் அரச குடும்பங்களின் குடிப் பெயரும் இவரது பெயரால் மாற்றமடைந்துள்ளதைப் பார்க்கும் போது, இவரது பெருமை விளங்கும். வீர ராஜேந்திரன் இன்னும் பல்லாண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால், வரலாற்றின் போக்கே வேறு வகையாக மாறியிருக்கும் என்று நீலகண்ட சாஸ்திரிகள் குறிப்பிடுகிறார்.
வீர ராஜேந்திரன் மற்றும் இவரது மகன் அதிராஜேந்திரனின் மரணத்துக்குப் பின் நடந்த போர்களில் முக்கியமானவை, இவரது வாரிசுகளுக்கிடையே நடத்தப் பெற்றவையே. ஒரு புறம் இவரது (தங்கை வழி) மருமகன் குலோத்துங்கன் சோழ நாட்டு அரியணையிலும், மறு புறம் இவரது மருமகன் விக்கிரமாதித்யன் சாளுக்கிய தேசத்திலும், இன்னொரு புறம் இவரது மகள் வயிற்றுப் பேரன் அனந்த வர்மன் கலிங்கத்திலும் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துக் கொண்டிருந்தனர்.
சோழங்கன் யார் என்ற தேடல், சோழர் வரலாற்றின் சில இருண்ட பக்கங்களுக்கு வெளிச்சம் காட்டியிருக்கிறது. முதலாம் இராஜேந்திரன் காலம் முதல் அதி ராஜேந்திரன் காலம் முடிய 3 சோழ லங்கேஸ்வரர்கள், 4 சோழ பாண்டியர்கள், 3 சோழ கேரளர்கள், 3 சோழ பல்லவர்கள் மற்றும் 3 சோழ கங்கர்கள் எனக் கட்டுக்கோப்பான சோழப் பேரரசின் ஆட்சி முறையை அறிய முடிகின்றது. வீர ராஜேந்திரரின் ஆட்சியும், அவரைத் தொடர்ந்து அதி ராஜேந்திரரின் ஆட்சியும், நீண்ட காலம் தொடர்ந்திருந்தால், இந்தக் கட்டமைப்பு நீடித்து சோழப் பேரரசு வேறு பரிணாமத்திற்கு சென்றிருக்கக் கூடும். இருப்பினும் சாம்ராஜ்யங்கள் வீழ்வதும், வீழ்வது எழுவதும் இயற்கையின் நியதி. நான்கு தலைமுறைகள் நீடித்த சாளுக்கிய சோழரின் ஆட்சிக்குப் பின், மீண்டும் வீர ராஜேந்திரரின் வம்சமே ஆட்சிக்கு வந்துள்ளதையும் அறிய முடிகின்றது. குறிப்பாக மூன்றாம் குலோத்துங்கன், தான் வீர ராஜேந்திரரின் வழி வந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், கரிகாலன், வீர ராஜேந்திரன், சோழங்கன், கோனேரின்மைக் கொண்டான், ஹரசரண சேகரன் என்ற வீர ராஜேந்திரனின் பெயர்களைப் பூண்டதுடன், வீர ராஜேந்திரரின் "புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்" என்னும் மெய் கீர்த்தியையும் பயன்படுத்தி, பல்வேறு வழிகளில் தான் வீர ராஜேந்திரரின் வம்சம் என்பதை நிரூபித்துச் சென்றுள்ளார். மூன்றாம் இராஜேந்திரருடன் சோழர்களின் ஆட்சி முடிந்துள்ளது. ஆனால் சிலர், மூன்றாம் இராஜேந்திரருடன் சோழர்கள் அனைவரும் இறந்து விட்டனர் அல்லது காணாமல் போய் விட்டார்கள் என்று கருதுகிறார்கள். சோழர்கள் காலத்தில் வாழ்ந்த அத்தனை மக்களின் வழி வந்தவர்களும் இன்றும் இருக்கும் போது, சோழர்கள் மட்டும் காற்றில் கற்பூரமாய் கரைந்து விட்டார்கள் என்று நம்புவது என்ன விதமான நம்பிக்கை என்று புரியவில்லை. சோழர்கள் எப்போதும் சூப்பர்மேன்களாகவே இருக்க வேண்டும் என்னும் அவர்களின் அதீத ஆசையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எழுவது விழும், வீழ்வது எழும் என்னும் இயற்கையின் நியதிக்கு சோழர்களும் விதி விலக்கானவர்கள் அல்ல.
இந்தத் தேடலில் சில புதிய விஷயங்கள் கிடைத்துள்ளன. அவை,
1. இயற்கைப் பேரழிவாலேயே சோழர்கள் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழ புரத்திற்கு குடி பெயர்ந்தனர்
2. முதலாவது சோழ லங்கேஸ்வரன் - இராஜ மகேந்திரன்
3. இராஜாதிராஜன் - மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்
4. மனு குல கேசரி - இராஜேந்திரரின் முதல் மகன் இராஜராஜன்
5. முதலாம் இராஜேந்திரரின் தம்பி கங்கை கொண்ட சோழன், இரண்டாவது சோழ கேரளனாக பதவி வகித்தது
6. கங்கைப் படையெழுச்சியின் படைத் தலைவன் வீர ராஜேந்திரன்
7. சோழங்கன் என்னும் பெயர் வீர ராஜேந்திரரிடமிருந்தே வந்துள்ளது
8. கங்கை கொண்ட சோழபுரம் பகுதியிலுள்ள சோழனார் குடும்பங்களின் குடிப்பெயர் சோழங்கனார் என வீர ராஜேந்திரரைத் தொடந்தே மாறியுள்ளது
9. கீழை கங்கர்களின் குடிப் பெயர் சோழகங்க தேவர் என வீரராஜேந்திரரின் பெயர் கொண்டே அவரது மகள் வயிற்றுப் பெயரன் அனந்த வர்மன் மூலம் மாறியுள்ளது
10. நான்கு தலைமுறை சாளுக்கிய சோழரின் ஆட்சிக்குப் பின் வீர ராஜேந்திரரின் வம்சமே சோழர் ஆட்சியைத் தொடர்ந்தது
இவை அனைத்தும், வரலாற்று ஆய்வாளர்கள் மேலாய்வு செய்யும் போது உறுதிப் படுத்தப் படும் என்று நம்புகிறேன். விஜயாலயன் முதல் மூன்றாம் இராஜேந்திரன் வரையிலான சோழர் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, ஒவ்வொரு மன்னரின், தமிழகம் மற்றும் வெளியிடங்களில் உள்ள அவர்களின் கல்வெட்டுகளையும் தொகுத்து, தனித்தனி தொகுதிகளாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மட்டும் சிரமம் எடுத்து செய்யக் கூடிய விஷயங்கள், பொதுவானப் பார்வைக்கு வரும் போது, பல்வேறு கருத்துக்களையும் உள்ளடக்கிய உண்மையான முழுமையான சோழர் வரலாறு எழுதப்படும். கல்வெட்டு ஆய்வாளர்களும், காலமும் கைக் கொடுத்தால் இந்தப் பணி செவ்வனே நிறைவேறும்.
#சோழங்கன்யார் 15
